சிவகுமார் மாவலி, ஷிவமோக்கா, சொரடாவின் மாவலி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலப் பேராசிரியர். இரண்டு சிறுகதைத்தொகுப்புகள், பல இலக்கியக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
கே.நல்லதம்பி:
தனியார் கம்பெனியில் அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழக வாசகர்களுக்குப் பெரிதும் அறிமுகமானவர். நூலின் ஆரம்பத்தில் 25 படைப்புகள் கன்னடத்திலிருந்து தமிழுக்கும், 15 தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்த்திருக்கிறார் என்று குறிப்பு சொல்கிறது. இதை எழுதும் வேளையில் நிச்சயம் இந்த எண்ணிக்கை மாறியிருக்கும்.
Right man in the wrong place என்பது எப்போதும் விதியின் பற்சக்கரத்தில் கால்இடறி மாட்டிக்கொள்வது. கடைசி நேரத்தில், சிரமப்பட்டு இன்னொருவரது பயணச்சீட்டை வாங்கிப் பயணித்த, ரயில் விபத்துக்குள்ளாகி மரிப்பது என்பது என்ன கணக்கு? அப்படிச் செய்திருக்கலாம், இப்படிப் பண்ணியிருக்கலாம் என்று பின்னால் பலர் சொல்லும் யோசனைகள் யாவும் அர்த்தமில்லாதவை. விதி எப்போதும் மிகப் பொறுமையில்லாதது, காத்திருப்பு அதற்குப் பிடிப்பதில்லை.
சிவராசன் & கோ பெங்களூரின் புறநகர் பகுதியான Konanakunteயில் போலிஸிடம் மாட்டிக் கொள்ளுமுன், தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ஜிப்சி வாகனத்தில் போய் உணவு அளித்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்குள்ளான பழையகார்களை விற்பனை செய்பவரின் கதையை முப்பது வருடங்கள் கழித்து, அவர் சொல்லக்கேட்டு எழுத்தாளர் எழுதிய கதை இது. தமிழ்நாட்டில் நடக்கும் தேர்ட்டிகிரி விசாரணைகள் கர்நாடகத்தில் பெரும்பாலும் கிடையாது என்பார்கள், அது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.
True Crime stories ஏன் மேலைநாடுகளில் எழுதப்படுவது போல் இங்கே எழுதப்படுவதில்லை? இங்கு புனைவோ, உண்மைக்கதையோ பெரும்பாலானோர் உழைப்பதற்குத் தயாராக இல்லை. ஒரு Sensational topic கிடைத்தால் மேசைக்குமுன் ஒரு சேரை இழுத்துப்போட்டுக் கிடுகிடு என எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். The Stranger Beside Me என்ற நூல் Ted Bundy என்ற Serial killer குறித்து Ann Rule எழுதிய நூல். Ann Rule, Ted Bundyஉடன் ஒரு சமயத்தில் ஒன்றாக வேலைபார்த்திருக்கிறார். அதை வைத்து உடனே அவர் இந்த நூலை எழுதிவிடவில்லை. பல நேர்காணல்கள், ஆய்வு, அவருக்கும் Ted Bundyக்குமான கடிதங்கள் என்று உழைப்பை சிந்தி எழுதப்பட்ட நூல். அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்த நூல். நல்ல Scope இருந்து, ஒரு Crime Fiction போல் எழுதியிருக்க வேண்டிய நாவல் இது.
இந்த நூல் ஒரு ரிசார்ட்டில், பாதிக்கப்பட்ட கணவன், மனைவி சாப்பாடு வாங்கிக்கொடுத்துக் கதைசொல்லிக் காரில் வீட்டருகே இறக்கிவிட்டுப் போக, எழுத்தாளர் எழுதிய கதை இது. அந்த கேஸ் சம்பந்தப்பட்டவர்களைப் பேட்டி காண்பது, விசாரித்த காவல்நிலைய அதிகாரிகளின் தரப்பைக் கேட்பது (ஒரு எழுத்தாளராக கார்த்திகேயனிடம் கூட பேட்டியைக் கேட்டிருக்கலாம்) என்று சிறிய முயற்சிகள் கூட எதுவும் செய்யவில்லை. ராஜிவ்காந்தியை இரண்டு இடங்களில் பிரதமரைக் கொலை செய்தார்கள் என்கிறார், அப்போது பிரதமர் சந்திரசேகர்.
விக்கெட்டுகளை வரிசையாகத் தூக்கி எதிரணியின் கையில் கொடுப்பவர்களின் நடுவே கடைசிவரை பொறுப்பாக ஆடிய மட்டையாளரைப் போல் கே.நல்லதம்பியின் மொழிபெயர்ப்பு.
பிரதிக்கு:
சாவண்ணா எண்டர்பிரைசஸ் 90363 12786
விற்பனை அகநாழிகை 70101 39184
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 120.