கவிஞர், ஆசிரியர், நாவலாசிரியர். எமிலி (1818 -48) ஆங்கிலகிராமம் ஒன்றில் கட்டுப்பாடான சூழ்நிலையில் வளர்ந்தார். அவர் வளர்ந்த சூழலே இந்த நாவலின் கதைக்களம் ஆகும். இவருடைய இரு சகோதரிகள் சார்லோட் ப்ரோன்ட் மற்றும் அனீ ப்ரோன்ட் இவரை விட பிரபலமானவர்கள். இந்த ஒரு நாவலே இவர் எழுதியது. 1847ல் இந்த நாவல் வெளியான போது, இவரது சித்தசுவாதீனம் குறித்த சந்தேகத்தைத் தெரிவித்தவரும் இருந்தார்கள். இவர் இறந்தபிறகு இவரது சகோதரி சார்லோட் இவருடைய கவிதைகளை சீரமைத்த பின் விமர்சனங்கள் சற்றே அடங்கின.

ஒருவரியில் சொல்லக்கூடிய கதை இது. Catherine ஒரே நேரத்தில் இருவரைக் காதலிக்கிறாள், கடைசிவரை அவர்கள் இருவரில் ஒருவரை அவளால் விட்டுவிட முடிவதில்லை. எந்த சூழ்நிலையில் இருவர் மீதும் காதல், அதன் பின்விளைவுகள் எப்படி அடுத்த தலைமுறையையும் சேர்த்துப் பாதிக்கின்றன என்பதே மொத்தக்கதை.

நாவலின் மிக முக்கியமான விசயம் நிலப்பரப்பு, தான் வளர்ந்த சூழல், அந்த கிராமத்து மனிதரின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் எல்லாம் அப்படியே நாவலில் கொண்டு வந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆங்கிலேய கிராமம் ஒன்றில் நாம் வாழ்ந்த உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.

காதலே நாவலின் கரு. ஒரு காதல் இல்லை இரண்டு காதல்கள். இரண்டு காதல்களின் ஆரம்பமும், முடிவும் மட்டுமல்ல, இரண்டு காதலின் அடிப்படையே வேறு. ஒருவகையில் தாய் செய்யத் தவறியதை மகள் செய்கிறாள். முதல் காதலில் இருவருமே ஒருவரில் அடுத்தவரைக் காண்கிறார்கள். Catherine ஓரிடத்தில் சொல்வாள்: எங்களுடைய ஆன்மாக்கள் எதுவாக அமைந்திருந்த போதிலும் அவனுடையதும் என்னுடையதும் ஒன்றே. (Whatever our souls are made of, his and mine are the same”).

கன்னி நாவலின் முக்கியமான விசயங்கள், கிருபாவின் மொழியும், காதலின் அழிக்கும் தன்மையும். காதலின் Destructiveness கன்னியில் தன்னை அழிப்பதில் முடிகிறது. இங்கே அழிவு இன்னும் பரவலாக முடிகிறது. காதலைப் புனிதமாகவும் அதே நேரத்தில் அழிக்கும் சக்தியாகவும் மாறிமாறி சொல்லிக் கொண்டு போனதில் தான் இந்த நாவலின் தனித்துவம் அடங்கியிருக்கிறது.

மலர்மஞ்சம் பாலிக்கு உள்ள தயக்கங்கள் எதுவும் Catherine க்கு இல்லை. பாலி நான்மட்டும் ஏன் இப்படி என்று அடிக்கடி கேட்டுக்கொள்வாள். குற்றஉணர்வு கொள்வாள். Catherineக்கு அந்த அவஸ்தைகள் இல்லை. கடைசிவரை இருவரையும் காதலிப்பதை நிறுத்துவதுமில்லை, அடுத்தவரிடம் இன்னொருவரைக் காதலிப்பதை நிறுத்த முடியாது என்று சொல்லத் தயங்குவதுமில்லை. இருவேறு நிலத்தின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் இரண்டு அற்புதமான நூல்கள்.

சமூகப்படிநிலை என்பது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியங்களின் பிரதான அம்சம். Jane Austenன் எல்லா நாவல்களிலும் வருவது போல அந்தஸ்து (Social status) என்பதே இந்த நாவலின் போக்கைத் தீர்மானிக்கும் காரணி. சமூகப்படிநிலையை காரணம் காட்டி வேறொருவரைத் திருமணம் செய்தால் இங்கே காதல்துரோகம் என்பார்கள்.

இந்த நாவலின் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் நாவலின் பிரதான கதைசொல்லி Nelly. Nelly இரண்டு பண்ணைகளிலும் வேலை செய்தவள் மட்டுமல்ல, அவள் விருப்பு வெறுப்புக்கு ஏற்றால் போல் கதை சொல்பவள். ஒரு நேரத்தில் Catherineஐ தேவதை என்பாள், இன்னொரு சமயம் பிசாசு என்பாள். அவளது புரிந்து கொள்ளும் சக்தி மட்டுமல்ல, சம்பவங்களில் அவளது நேரிடை பங்கும் குறைவு. 1847ல் இப்படி ஒரு நம்பத்தகாத கதைசொல்லியைக் கொண்டு நாவல் எழுத எவ்வளவு துணிச்சல் வேண்டியிருந்திருக்கும்!

இன்னொரு துணிச்சலான விசயம், நாவலில் அதிக விளக்கங்கள் என்பதே கிடையாது. வீட்டு லைப்ரரியில் வந்தது ஆவியா இல்லை Lockwoodன் Nightmareஆ என்ற விளக்கமே இருக்காது. இது போன்ற நிறைய விசயங்கள் வாசகர்களின் கற்பனைக்கு இந்த நாவலில்.

மொத்தமாக எடுத்துக்கொள்கையில்
களம், கரு, கதாபாத்திரங்கள், நாவலின் கட்டமைப்பு எல்லாம் தனித்தனியான பாகங்களின் அலாதியான ஒருங்கிணைப்பாகின்றன. சுற்றுச்சூழலிலும், சமுதாயத்திலும், குடும்பங்களிலும், உறவுகளிலும், தனிநபருக்குள்ளும் எதிரெதிர் சக்திகள் தொடர்ந்து அணிவகுத்து நிற்கும் போது, வேறொரு ஆன்மாவைப் புரிந்துகொள்வதற்கு எளிதான வழி இருக்கவே முடியாது. அதை அறிய முயற்சிக்கும் பயணமே இந்த நாவல் என்றும் சொல்லலாம்.

எல்லா கதாபாத்திரங்களுமே தேர்ந்த வித்தக வினைஞனின் சித்திரம் போல் தெளிவாக வந்திருக்கின்றன. குறிப்பாக Heathcliffம் Catherineம் மறக்கவே முடியாத கதாபாத்திரங்கள்.
Heathcliff கதாபாத்திரத்தில் விஞ்சி இருப்பது காதலா இல்லை பழிவாங்கும் உணர்ச்சியா என்று விவாதமே நடத்தலாம். அது போல் Catherineயிடம் விஞ்சி இருப்பது Classஆ இல்லை Wildernessஆ.

புத்தகங்கள் நம்மை வேறு உலகத்துக்குத் தூக்கிச்செல்கின்றன என்பதை நிரூபிக்கும் நூல்களில் ஒன்று இந்த நாவல். அகச்சிக்கல்கள், தவிப்பு, காதல் போன்ற உணர்வுகளின் பிரவாகம் இந்த நாவல். Heathcliffஆல் ஏன் Young Cathyயிடம் ஆளுமை செய்ய முடியவில்லை என்பது போல் நுட்பமான தேடுதலுக்கு நிறைய வாய்ப்பு அளிக்கும் நாவல். Emily சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரு மாஸ்டர். குறுகிய காலத்தில் புதுமைப்பித்தனைப் போல் மறைந்த ஒரு வாழ்வு. கவிஞர்கள் நாவல் எழுதினால் அங்கங்கே கவிதை என்பங்கு எங்கே என்று கேட்கும். அன்னா கரீனினாவை மட்டும் படித்து இந்த நாவலைப் படிக்காதவர் அவசியம் இந்த நாவலைப் படியுங்கள். அதற்கு முப்பது ஆண்டுகள் முன்பு வெளியாகிய நாவல் இது. ருஷ்ய கலாச்சாரமும் ஆங்கிலேய கலாச்சாரமும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதும், முரண்படுவதும் காண்பதற்கு தமிழ்சூழலில் எங்கோ பிறந்த நமக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மழைநாளின் தனிமையில் உங்களை இந்த நாவல் எங்கோ கடத்திக்கொண்டு போகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s