ஆசிரியர் குறிப்பு:
பழனியைச் சேர்ந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டதாரி. இதற்கு முன் ” ழ என்ற பாதையில் நடப்பவன்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.
சிறிய சிக்கல்களில் மனஅழுத்தம் பெறுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களது வாழ்க்கை முழுவதும் பேரிடர் அவர்கள் இருக்கும் தெருவிற்குக்கூட வரப்போவதில்லை. misfortunes never come singly என்பதெல்லாம் எப்போதும் அடிதாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பவர்களுக்கு மட்டும்.
” எதையும் நிரூபிக்காமல் வெறுமனே
கிடப்பினும் காலம் எங்கேனும்
கூட்டித்தான் செல்கிறது
தற்போது இந்த விமான நிலையத்தில்
அனைவரின் முன்னிலையிலும்
பரிசோதனைக்காக
ஒரு கன்வேயர் பெல்ட்டில் என்னையே
வைத்தனுப்பும் எனக்கு
பதற்றம் தாளவில்லை
எனக்கே தெரியாமல் உள்ளுக்குள் எதையோ
மறைத்து வைத்திருப்பின் என்ன செய்வது
உலகுக்கு ஆகாத இரகசியங்கள்
ஒன்றிரண்டாவது இருக்கும்தானே”
இந்தக் கவிதையை, வீடு, ஒட்டடை, தூசி, துடைப்பம் என்பதைத் தாண்டி உறவுகளுக்குப் பொருத்திப் பாருங்கள். தடங்கள் அவ்வளவு எளிதில் மறைபவையா என்ன?
” ஒட்டடைகள் விழுதுகளாய்த் தொங்கும்
வீட்டிற்குள்,
வைத்துச் சென்ற அனைத்தும் அப்படியே
கிடக்கும் குடிலுக்குள்
தானாக எதுவும் மாறிட வாய்ப்பில்லாத ஒரு
அகத்திற்குள்
நீண்ட இடைவெளிக்குப்பிறகு
வந்திருப்பதால்
மீண்டும் எங்கிருந்து துவங்குவதென்று தெரியாமல்
வெறுமனே யோசனையில் ஆழ்ந்திருந்தாள்
பிறகு முதல்வேலையாகத்
தூசியில் வரையும் ஒரு துடைப்பத்தை எடுத்துவந்து மூலைமுடுக்கெல்லாம்
தேடித்தேடிச் சுத்தம் செய்கின்றாள்
பழைய கால்தடங்கள்
எதுவும் இருக்கக்கூடாதென.”
கவிதைகள் சொல்ல வருவதை விட்டு, அழகியல் சிதறல்களை மனம் பொறுக்கிக் கொள்வது என்பது இப்படித்தான்:
“……….
சந்தேகத்தின் மீது டார்ச் அடித்துப்
பார்க்கும் போதெல்லாம்
காரணங்கள் எதுவும் புலப்படுவதில்லை
மாறாக வெளிச்சம்பட்ட சுவரின் மீது
சிறு நிலவொன்று
எவரின் பிடியிலிருந்தோ தப்பியோடுகிறது”
தோற்ற மயக்கங்களில் ஏற்படும் குழப்பங்கள், அன்றாடம் சந்திப்போரின் மறைத்து வைக்கப்பட்ட துரோகங்கள், காட்சிகளின் அழகியல், தலைகீழ் பார்வைக் கோணங்கள், படிமங்கள், பகடிகள், வெறுமை இவை அனைத்தின் கலவைகள் பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகள்.
கடைசிச் சந்திப்பின் போது குடிக்கும் பானத்தின் கடைசித்துளி, போன்ற பல கவிதைகள், நடப்பில் இருக்கும் நிதர்சனத்தை விடுத்து, கற்பனை உலகிற்குள் அவசரமாகப் புகுகின்றன. மனைவி உபயோகிக்கும் ‘இன்னும் ஆழம் சென்று தேடலாமல்லவா’ என்பது போல் சில கவிதைகளின் மையப்புள்ளி ஒருவரியில் நின்று சுழல்கிறது. எதிர்பாராத நேரத்தில் ‘ஈரநிறச் சாயமிட்ட நாணத்தின் கட்டைவிரல்’ இடையே வந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எந்த வட்டத்திற்குள்ளும் தங்காது, எல்லாச் சாலைகளிலும் பயணம் செல்லும் அவா இவரது கவிதைகளுக்கும் இருக்கிறது. நல்ல வாசிப்பின்பத்தை வழங்கும் கவிதைத் தொகுப்பு.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652-278525
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 100.