Ayobami, Lagos, நைஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய முதல் நாவலான Stay with Me ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாது, வேறு நாடுகளிலும் விருதுகளை வென்றது.
இவரது இந்த இரண்டாவது நாவல் பிப்ரவரி 2023ல் வெளியானது.
பள்ளிக்கு பணம் கட்டமுடியாது, பிச்சை எடுத்து, ஒரு குழந்தையை மட்டும் படிக்க வைக்க முடிந்த குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு வயதுப்பையன், பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, டாக்டராக வேலை பார்க்கும், முப்பதைத் தொடும் வயதில், காதலித்தவனை மணக்கப் போகும் பெண்,
நைஜீரியாவில் கவர்னர் பதவிக்குத் தேர்தலும், குண்டர்களின் ராஜ்ஜியமுமே இந்த நாவல். கண்ணன், மதியழகன் என்று பெயர்களை மாற்றினால் அப்படியே தமிழ்நாட்டுக்கதை தான் இது. நாவலின் தலைப்பு என்ன நகைமுரணா!
நைஜீரியாவில், தமிழ்நாட்டில், அமெரிக்கா போன்ற வெகு சுதந்திரமான நாட்டில் கூடப் பெண்கள் Physically Abusive உறவுகளை விட்டு, வெளியே வருவதில்லை, அவர்களது துணையைக் காட்டிக் கொடுக்காமல், படியில் இருந்து விழுந்தேன், சாப்பிட்டது அலர்ஜி என்று ஏன் நூறு காரணங்கள் சொல்கிறார்கள் என்பதற்கு யாருமே விடை சொல்ல இயலாது. அடிப்பவர்கள் எல்லோருமே சற்று நேரத்தில் அதிக அன்பு செலுத்துபவர்களாக, மன்னிப்பு கேட்பவர்களாகப் பெரும்பாலும் இருப்பது முக்கிய காரணம். அடுத்து அடிப்பதில்லை என்ற வாக்குறுதியை இவர்கள் நம்புவது அடுத்த காரணம். அடிப்பவன் காதலிப்பதில்லை, உண்மையாய் காதலிப்பவனால் அடிக்க முடியாது. It is as simple as that.
அரசியலையும், குண்டர்களையும் பிரிக்க முடியாது என்ற வகையிலும் நைஜீரியா இந்தியாவைப் போலவே இருக்கிறது. கொலை செய்வது, அந்தக் குற்றத்தில் இருந்து எந்த சேதமுமில்லாமல் செல்வாக்கை உபயோகித்து வெளியே வருவது என்பதும் இரு நாடுகளுக்கும் பொருந்தும். அமெரிக்கா போன்ற நாடுகளில் அவ்வளவு வெளிப்படையாகச் செய்ய முடியாது, CIA போன்ற Professsionals உதவி வேண்டியிருக்கும்.
Corruption மற்றும் Gender unequalities ஆகியவை மட்டுமில்லை Modern Nigeriaவில்.
அரசுப்பள்ளிகளின் தரம் அதளபாதாளத்தில், தனியார் பள்ளிகள், கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களை மனத்தாலும், உடலாலும் துன்புறுத்துகின்றன. காரணமே இல்லாது ஆசிரியர்களை வேலையிலிருந்து தூக்குகிறார்கள். மருத்துவமனைகளில், ஆட்களும், மருந்துகளும் போதிய அளவில் இல்லாது, இருப்பவர்களுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. பணமும் வசதியும் ஒருசிலரிடம் குவியும் போது, பலர் பட்டினி கிடப்பது சகஜமான ஒன்றாகிறது.
பல உறவுகள் குறித்து வெகுசில வாக்கியங்களிலேயே தெளிவான சித்திரம் வரையப்பட்டு விடுகிறது. Loser என்றாலு கணவனை விட்டுக் கொடுக்காத பெண், மணமான பின் சகோதரர்கள் அவரவர் குடும்பத்தைத் தாண்டி பார்வையை செலுத்தாதது, பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் Siblings love, தந்தை-மகள் உறவு ஆகியவை இந்த நாவலில் குறிப்பிடத்தக்கவை.
தான் வளர்ந்த பகுதிக்கு அருகிலேயே இவர் பார்த்திராத ஒரு குடியிருப்பும், அங்கே பள்ளிச்சீருடை அணிந்து தெருவில் சுற்றிக் கொண்டிருந்த சிறுவனும் இந்த நாவலை இவரை எழுத வைத்திருக்கின்றன. மாதங்கள், வருடங்கள் பாதித்த விஷயங்களை உள்ளுக்குள் ஊறவைத்து, அவையே வலுக்கட்டாயமாக வெளிவரும் வரைக் காத்திருப்பது எனது Writing style என்று ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார். Contemporary fiction என்பது யாருக்குமே சவால் தான். ஆனால் அதை எளிதாக இரண்டாவது முறை செய்திருக்கிறார். நைஜீரியாவில் இருந்து மீண்டும் ஒரு நல்ல எழுத்தாளர்.