ஆசிரியர் குறிப்பு:
கிழக்கிலங்கையின் மருதமுனையைச் சேர்ந்தவர். சட்டத்தில் இளமானிப் பட்டமும்,
மனித உரிமைகள், பொதுச் சுகாதாரம், உளவளத்துணை போன்றவற்றில் டிப்ளமோ பட்டமும் பெற்ற சட்டதரணியாவார். ஏற்கனவே இவரது ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது ஆறாவது தொகுப்பு.
‘அற்றைத் திங்களின்’ பாரி மகளிரின் சோகம் இந்தக் கவிதையிலும் பிரதிபலிக்கிறது. சிதிலங்கள் எப்போதும் நமக்கு சொந்தமில்லாதவற்றில் நேரும் போதும் வருத்தத்தை ஏற்படுத்துபவை. கட்டிடங்கள், ஆறு, குளம், நாடு…… ஏன் பெண்ணாக இருந்தால் கூட சரி இனம்புரியாத சோகம் மேலெழுகிறது.
” ஆத்துவாழைக் கூட்டம்
அலைந்து திரிந்தது முகிலென
செந்தாமரை மூட்டம்
மிதந்து முகிழ்ந்தது பிறையென
நீர் துளிர்த்துக் காய்த்துச் சொரிந்த
நெடுங்குளம்
நிரம்பி வழிந்து தளும்பிய
நிறைகுடம்
தோணிக்காரன்
தூண்டில்காரன்
அத்தாங்கு கொண்டு அள்ளிய நீர்நிலம்
வறண்டு கரும்பாறையாகி
வதங்கிக் கிடக்கும் இக்குளம்
தாழப்பறக்கும் கொக்கின்
கண்களுக்குத் தெரிகிறது
கருவாடாக”
காட்சியை மனக்கண்ணில் கொண்டு வரவிடாது சொற்களின் ஆட்சி. தென்னை இளநீரை விட தமிழ் தித்திக்கிறது.
” பாளை வெடித்துப் படரும் தெம்பிலி
அதில் ததும்பி வழியும் தெப்பங்கள்
குரும்பைகள்
உச்சிவெயிலின் நீர்மை
ஒரு முட்டிக்கள்
கோடை வெப்பம் கொதிக்கும் காலம்
வட்டில் பெருக்கும் காகங்கள்
ஓலை பூக்கும் கிளிகள்
காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்
குருத்தோலை இலைக்க காவோலை கதறும்
தாகித்துக் களைத்த நடுமதியம்
தோப்பில் நுழைகிறேன்
உச்சி வகிட்டில் உட்கார்ந்திருக்கிறது சூரியன்
தளம்பித் தொங்குகின்றன பச்சைக்குலைகள்
அள்ளிப் பருகுகின்றேன்
அதிலொன்றை
பருத்த பெண்ணின் முலை போல”
இந்தக் கவிதையின் காட்சியின்பத்தை நானும் ரசிக்கிறேன். இரண்டு துளிகள் அடிநாவில் பட்டதன் ருசியையும் உணர்கிறேன். ஆனால் முன்னர் வாசித்த, ஹிஜாப் கவிதையின் “அழகின் மறைத்தலும், மறைத்தலின் அழகும்” இப்போது நினைவுக்கு வந்து தொல்லை செய்கிறது. ஆக Fantasy என்பது எப்போதும் ஆணுக்குச் சொந்தம், பெண்கள் கண்ணுக்குக் கூட கறுப்புக் குளிர்கண்ணாடி அணிதல் நலம்.
அலறியின் மொழி நன்கு பண்பட்டு, செறிவான மொழி. ‘மருதமும், வசந்தமும் தூர்ந்து போகின்றன’ என்பது போல் மிகக் குறைவான வார்த்தைகளிலேயே, இவரால்
மொத்த உணர்வையும் தளும்பச் செய்ய முடிகிறது. அன்னியச் செலாவணியை, வெள்ளைக்காரியாக உருவகப்படுத்தும் கவிதை போல் நல்ல கற்பனை வளமும் இருக்கிறது. போர் குறித்த ஓரிரு கவிதைகளிலும் ஏக்கமும், அழகியலும் சரிவிகிதம். கடல் மட்டுமல்ல, மற்ற நீர்நிலைகளும், சுருக்கமாகச் சொன்னால் நீர்மை இவரது கவிதைகளில் மீண்டும் மீண்டும் வருகின்றது. நீர்மை உண்மையில் ஆழ்மனதில் தோன்றும் Metaphor. முப்பத்தி இரண்டு கவிதைகளே கொண்ட சிறிய தொகுப்பு என்றாலும், தனிமையையும், வலியையும் வாசிப்பவருக்குக் கடத்துவதில் வெற்றி பெறும் தொகுப்பு.
பிரதிக்கு:
வேரல் புக்ஸ் 95787 64322
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ. 70.