ஆசிரியர் குறிப்பு:
ராணிப்பேட்டை, அவரைக்கரை கிராமத்தில் பிறந்தவர். பத்திரிகையாளர். ஊடகவியலாளர். இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.
பொன்.விமலாவின் இந்தத் தொகுப்பை வாசித்ததும், முதலில் தோன்றியது, இதைத் தான் எழுத வேண்டும் என்ற, கூண்டுக்குள் மாட்டிக் கொள்ளாத, தயக்கமில்லாத எழுத்து. அதற்கேற்றாற்போல் இந்த மொழிநடையில் இருக்கும் வேகம். தங்கு தடையில்லாத மொழிநடை. நகரத்துக் கதைகளும், கிராமத்துக் கதைகளும் அதே Aurhenticityயுடன் இருக்கின்றன.
பலிபீடம், தீட்டு, டிங் டாங் பெல், ரெய்ன் கிஸ் ஆகிய கதைகள் தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகள். பலிபீடம் Single parent யாருக்குமே நிகழக்கூடிய நிதர்சனம். தீட்டு, கதையின் பெண் எல்லோரும் வயதுக்கு வந்து விட்டார்கள், நான் எப்போது என்று குழந்தைத்தனமாகத் தவிப்பது புரிகிறது. ஆனால் கடைசியில்……… டிங் டாங் பெல், ஆணின் உடல் மீது பெண்ணுக்கும், பெண்ணின் உடல் மீது ஆணுக்கும் சிறுவயதில் இருந்தே ஏற்படும் இனம்புரியாக் கவர்ச்சியை அழகாகப் படம்பிடித்திருக்கிறது. ரெயின் கிஸ், படித்ததும், இருவேறுலகம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக? என்று யேசுதாஸின் குரல் காதில் ஒலிக்கிறது.
மற்ற கதைகள் எல்லாமே Improvise பண்ண வேண்டியவை. மணலாகாரம், நீதிக்கதையின் தன்மை கொண்டது. நம்முடைய Moral Mindsetஐ கதைகளில் புகுத்தினால், கதைகள் நம்பகத்தன்மையை இழந்து, ஈயம் போன பாத்திரமாகி விடுகின்றன. ஆட்சி மாறியும் பொள்ளாச்சி கேஸ் ஏன் Cold case ஆனது? அதுவே நடப்பு.
அடுத்ததாக இரவே, முதலிரவேயின் கதையில் என்ன செய்திருக்கலாம்? அவனும் அதே போல் முதலிரவு அறையில் தடுமாறுகிறான், கடைசியில் அவனுக்கும் சிறியது என்பது போன்ற முடிவுகள் கதையை இன்னும் அழுத்தமாக்கும். எப்போதுமே கதைகள் எழுதிய பிறகு வேறுவேறு சாத்தியக்கூறுகளை அந்தக் கதையில் புகுத்தி நாமே பல பரிசோதனைகள் செய்யலாம்.
பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. தயக்கமில்லாத எழுத்து என்பதற்கு முதலில் பாராட்டுகள். இவர் போல பலர் எழுத முன்வர வேண்டும். முதல் தொகுப்பு என்பது Trial and error தான். இவரது முன்னுரையைப் படித்ததும் போராடி, மீண்டெழுந்த பெண்மணி என்பது தெரிகிறது. தொடர்ந்து எழுத வேண்டும்.
பிரதிக்கு:
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 99404 46650
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 160.