ஆசிரியர் குறிப்பு:
சென்னையில் பிறந்தவர். சேலத்தில் வசிக்கிறார். தீவிர வாசகர். இதற்குமுன் இவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது நான்காவது கவிதைத் தொகுப்பு.
காதல் என்னும் உணர்வு பருகப்பருகத் தீராதது. காதலித்தவர்களை விட்டு விலகினாலும், காதலை இறுகப்பற்றிக் கொண்டே வாழ்க்கையைக் கழிக்கிறோம். காதலிப்பதை விடக் காதலிக்கப்படுவது என்பது வாழ்வின் அர்த்தத்தைக் கூட்டுகிறது. ‘பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்’ என்பதில் நாயகிபாவம் மட்டுமில்லை, எதிர்பார்ப்பில்லாத சரணாகதி. காலங்கள் தாண்டி, சவிதாவின் இந்தக் கவிதைகளும் அதையே செய்கின்றன.
வரிசையாக, ஒவ்வொன்றாய் கைநழுவிப் போனதைச் சொல்லிப் பிரிவின் வாதையை அதிகரிக்கும் கவிதை, முடியும் பகுதியின் சொற்சேர்க்கைகள் வித்தியாசமான உணர்வை எழுப்புகின்றன.
” ஒன்று ஒன்றெனக் கூட்டிக் கூட்டி
ஏதுமிலாத பூஜ்ஜியமென
சீழ்கட்டி
வென்று முடித்ததாய்.
பெயர்சூட்டி
ஒற்று மிகுந்ததாய்
விரிவாக்கி
பெயர்த்து வாழ்தலின்
ஒரு சுடரைத் தானா
திலகமென எனைச்
சூடச்சொல்கிறாய்”
Discovery of each other என்பதே ஆண்-பெண் உறவின் நூதனம். அது முடிந்த பின்னர் தான் சாற்றி வைக்கப்பட்ட சிறுஅறையில் ஈரம் சொட்டிக் காய்ந்த துணிகளின் மணம். சொல்லாமலிருப்பதும் நல்லது தான்.
‘” ஒட்டு மொத்த வாழ்க்கையும்
திரட்டி காகிதச்சுருளென
சாளரத்தில் எறிந்துவிட்டு
மூழ்கிப் போயிருக்கிறோம்
முழுவதுமாய் மாறி மாறி
கண்டெடுத்துக் கொள்ள
சாசனமொன்று வரைந்துகொள்
கண்டறிந்து விட்டாலும்
சொல்லிக்கொள்ள வேண்டாமென”
முகமூடி மனிதர்களின் நடுவில் இயல்பாக இருத்தல் என்பது எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும் முடிவதில்லை. கவிதை சொல்வது கடைசிநிலையாக இருக்கக்கூடும்.
” பிணந்தின்னிக் கழுகுகளுடன்
வாழ்ந்த நேர்ச்சைகளுக்கு
மயிலிறகில் வாய்த்திருக்கிறது
சாபல்யம்
துரத்திக் கொண்டேயிருக்கும்
துரோகங்களின் முன்
என்றேனும் அமர்ந்து
அருள்பாலிக்க ஆசை”
நேசத்தினால் என்னைக் கொன்றுவிடு என்பது காதலில் உச்சம். ஒருவழிப்பாதையின் மீளமுடியாத கணம். உயிர் இருக்கும் வரைத் தொடரும் பயணம்.
” பிரியத்தின் வாதைகள்
பெருஞ்சாபத்தில் விளைந்தவை
விமோசனத்திற்கேதும்
வழியில்லை தேவ
கொல்லும் அன்பினில்
முத்தங்களைத் தவிர்ப்பாயாக
சற்றே வேகமாய் இறங்கட்டும்
உயிர்கொல்லி”
சவிதாவின் இந்தத் தொகுப்பில், ஒரு பெண்ணின் குரல் தொடர்ந்து காதலைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றது. எதிரிருப்பவனிடம் இதையெல்லாம் செய் என்ற பட்டியலும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த உலகத்தில் இருவர் மட்டுமே. அவ்வப்போது வந்து போகும் மூன்றாம் மனிதர்களைக் கவிதைகளும் பொருட்படுத்துவதில்லை, வாசிக்கும் நாமும் கவனத்தில் கொள்வதில்லை.
முதல் மூன்றுத் தொகுப்பை விட, இதில் கவிதையின் அழகியல் கூடியிருக்கிறது.
” விழைவு நீர் பாய்ந்து பாய்ந்து ஓடுகையில் அசைவற்று நிற்கிறது அன்றாடங்கள்”. வார்த்தைகளின் கோர்வையும் அழகாகி இருக்கிறது, ” விடியாதொரு கருக்கலின் வெள்ளி”. அகஉணர்வின் தவிப்புகள் ‘ I won’t let you go’ என்ற செய்தியைத் தெள்ளத்தெளிவாக சொல்கின்றன. காதல் எழுதியும் தீராதது. தொடர்ந்து கவிதைகளுடன் பயணிக்க வாழ்த்துகள்.
பிரதிக்கு:
Zero Degree Publishing 98400 65000
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 140.