ஆசிரியர் குறிப்பு:
வடமராட்சி, பருத்தித்துறை, மேலைப்புலோலி, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது இலண்டனில் வசிக்கிறார். ஏற்கனவே இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பு.
மாமியார்- மருமகள் உறவு என்பது love-hate relationship. Hate எத்தனை சதவீதம் என்பதைப் பொறுத்தே அவர்கள் பேசுவது இருக்கும். மேலைநாடுகளில் கூட இந்த உறவு சொல்லிக் கொள்ளும் வகையில் கிடையாது. முதன்முறையாக, சந்திரா, தனது மாமியார் கூறிய கதைகளை நினைவுறுத்திப் புத்தகமாக்கியதன் மூலம் அந்த உறவின் நெருக்கத்தைச் சொல்கிறார்.
நாற்பதுகளுக்கு முந்தைய இருபாலை கிராமம். நம்மிடத்தில் இருந்து கொண்டு விநாயகர் சிலையை பிரதிஷ்டம் செய்யக்கூடாது, இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி கட்ட வேண்டும் என்று சட்டமிடுகிறார்கள் ஆங்கிலேயர். குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் கூப்பன் இருந்தால் உணவுப்பொருட்கள் சங்கத்தில் வழங்கும் நடைமுறை (ஏன் இப்படி? யாருக்கேனும் தெரியுமா?) . சென்னையில் பயந்தது போலவே இருபாலையிலும் ஜப்பான்காரன் குண்டு போடுவான் என்று பயப்படுகிறார்கள்.
கிராமத்தின் உணவுகள், பழங்கள் பற்றிய குறிப்புகள் ஏராளம். இலுப்பை நெய்யில் பொரித்த மீன், வேப்பம்பூ வடகம், பனங்காய் பணியாரம், பனங்கழி+கோதுமை+சீனி கலந்த உருண்டை, ஈச்சங்குருத்தின் இனிப்பு,
பயற்றங் கொழுக்கட்டை, ஆடிக்கூழ் என்று நாம் சாப்பிட்டுப் பார்க்காமல் எத்தனை உணவுகள்!
கிராமத்தில் பெண்களுக்கு ஏராளமான சட்டதிட்டங்கள். தெரிந்தவர்களுடன் கூட வெளியில் அனுப்பாத கட்டுப்பாடு, வெளியூரில் படிக்கப் போனால் கெட்டுப் போவாள் என்ற கருத்து, பெண் என்பதற்காகவே சமையல் தெரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெண்கள் அதிகம் படிக்க வேண்டாம் என்ற மனநிலை என்று தளைகள் நிறைந்த உலகம். 1956லேயே சிங்களம் எழுதப்பேசத் தெரிந்தால் மட்டுமே அரசுவேலையில் தொடர முடியும் என்று சட்டம் வருகிறது.
ஒரு பெண் கதை சொல்கின்ற போது, அவள் சார்ந்த உலகம் கண்முன் விரிகிறது. முப்பத்தைந்து வயதில், ஒன்பது குழந்தைகளுடன் கணவனை இழந்து நிர்கதியாக நின்ற பெண். வைராக்கியமாக குழந்தைகள் எல்லோரையும் வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, பேரன் பேத்திகள் என்று நிறைவானதொரு வாழ்வு.
காது கேட்காததால் அதிகம் பேசமுடியவில்லை, கடைசி காலத்தில் எழுதித் தரக் கேட்கும்போது, ஞாபகமறதியும் வந்து சேர்கிறது. இது போல் எத்தனை வாழ்க்கைகள் சொல்லப்படாமலேயே, வெளியுலகுக்குத் தெரியாமலேயே மறைந்து போயிருக்கின்றன. தெரிவதற்கு, எல்லோருக்கும் சந்திரா போல் ஒரு மருமகள் கிடைக்க வேண்டுமே.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652-278525
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 150.