விருதுநகரில் வசிக்கிறார். கல்லூரியில் தமிழ் பேராசிரியர். ஆதவன் படைப்புகளை முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார்.
இதற்கு முன் ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது இவரது ஆறாவது கவிதைத் தொகுப்பு.
செல்வசங்கரனின் கவிதைகள் ஒரு மாற்று உலகத்தை சிருஷ்டி செய்து கொள்ளும். நிதர்சனமில்லாத எல்லாமும் அங்கே, தினம் நடக்கும் சாதாரண நிகழ்வு போல் பகிரப்படும். இருத்தல் குறித்த விசாரம், Absurdism ஆகியவைகளால் நிரம்பியது செல்வசங்கரன் கவிதைகள்.
அஃறிணைகள் நம்மைப் போல் சிந்திப்பது என்பது சரி, இங்கே காலமும, மனிதனும் ஒரு கணம் மயங்கி, பின் சுதாரித்துப் புடவைத் தலைப்பை சரிசெய்யும் பெண்ணின் சுறுசுறுப்பைக் கையாள்கின்றனர்.
” எதிர்காலம் என்னைப் பீரோவைப் போல் திறந்தது
நான் எதிர்காலத்தை
மேல்வீட்டு அறையின் ஜன்னலைப் போல்
திறந்தேன்.
எப்பொழுதும் இரண்டும் கச்சிதமாக நடக்கும்
எப்பொழுது நடந்தாலும் இப்படித்தான்
ஆனால் இப்பொழுதில்லை
இரண்டுக்கும் இடையே நின்று ஒரு
டீ குடித்துக் கொண்டிருக்கிறேன்
இரண்டும் இன்னும் அரங்கேறவில்லை
இதோ இதோ இந்த கணத்தில் அதை
நாங்கள் செய்து கொண்டோம்”
மரணவீட்டில் பிணத்தின் முன்னிலையில் நெடுநேரம் அமர்வது கடினம். நம் வீட்டு சாவு என்றால் வேறுவழியில்லை, பிணத்தை எடுக்கும் வரை உட்கார வேண்டும். அந்த Uneasinessஐ வேறொரு உலகத்திற்குத் தூக்கிப் போகிறார் செல்வசங்கரன். அங்கே இறந்தவர் பேசுவார். இருப்பவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள்.
” எல்லாரும் கைகளை விலக்கிச் சாதாரணமாகி
இறந்தவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்
அதில் குடிகொண்டிருந்த அமைதியை
ஆளாளுக்கு தங்கள் முகத்தில் வைத்து
சோதித்துப் பார்க்க
அது யாருக்குமே வரவில்லை
இறந்தவர் கால் பெருவிரல்கள் இரண்டும்
ஒட்டி இருப்பது போல
தன்னுடைய கால்பெருவிரல்களை
கூட்டத்தில் ஒருவர் ஒட்டி வைத்தார்
உடனே எல்லாரும் அவசர அவசரமாக
ராட்டினம் உயரச் செல்லுகையில் முகத்தை
கைகளால் பொத்துவது போல
இரண்டு கைகளை வைத்து அவரவர்
மரணத்தைப் பொத்திக் கொண்டனர்”
எதிர்வீட்டிலிருக்கும் மிக அழகான பெண்ணிடம் காதல் விண்ணப்பத்தை வைக்கிறீர்கள். அவள் லட்சியமே செய்யாது சென்று விடுகிறாள். அவள் இப்போது வெளியில் நிற்பதைப் பார்க்கிறீர்கள். அந்த அழகான முகம். ஆனால் இது என்ன அவள் கடைவாயின் பற்கள் அகோரமாக வாய்க்கு வெளியே நீட்டிக் கொண்டு. பெண் நிஜம், நிற்பது நிஜம், கடைவாயின் பற்கள் உங்கள் மனம் வரையும் படிமம். இவை இரண்டையும் கலப்பதே செல்வசங்கரன் கவிதைகள்.
இத்தனை கவிஞர்களின் நடுவே தொடர்ந்து தன் தனித்துவத்தைக் காத்துக்கொள்வது என்பது சாதாரண விஷயமில்லை. செல்வசங்கரன் அவரது பாணியை விட்டு இம்மியும் நகரவில்லை. சிவாண்ணன் இறந்து போகிறார். நெருங்கியவர் மரணத்தில் ஒரு Denial நேர்வது இயல்பு. ஆனால் கவிதையில் அவர் அதை மட்டும் சொல்லவில்லை. அடுத்து லலிதாக்கா இறந்து போகிறாள். இவன் அவளது இரண்டு பெண்களின் Pastல் Presentல் புகுந்துபுகுந்து வெளிவருகின்றான். இறப்பின் பின்னால் நேரும் இரண்டு கவிதைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்? செல்வசங்கரனின் மிகப்பெரிய பலமாக நான் கருதுவது இதைத்தான்.
அடுத்ததாக உயிருள்ளவை, உயிரில்லாதவை என்ற வித்தியாசமே இருப்பதில்லை. விடியும் வரை காத்திரு படத்தில் கராத்தே மணி துரத்துகிறார். அவர் நுழைவதற்கு ஒரு விநாடி முன் பாக்கியராஜ் ரயில் இருக்கையில் மூச்சுவாங்காமல் அமர்ந்திருக்கிறார். செல்வசங்கரனின் கவிதையில் வருபவர்கள் பார்க்குமுன் தான் ஒரு கடலாகக் காட்சியளிக்க வேண்டும் என்று அவசரமாக ஓடி, தன்னுள் நீலத்தை விரித்துக் கொண்டு காத்திருக்கிறது கடல். தோற்ற மயக்கங்களின் அழகியல் சித்திரங்கள் செல்வசங்கரனின் கவிதைகள்.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652- 278525
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 100.