ஆயிரத்து முன்னூற்றிப் பதினான்கு கப்பல்கள் – அஜிதன்:
எவ்வளவு நீளமாக இருந்தாலும், கதை முடிகையில் அதற்குள் முடிந்துவிட்டதா என்று தோன்றச்செய்யும் எல்லாமே சுவாரசியமான கதைகள் தான். இக்கதையில் சுயசரிதைக் கூறுகள் எவ்வளவு கலந்திருக்கிறது தெரியவில்லை, ஆனால் beautiful and lucid narration.
சிறுவர்களின் பார்வையில் உலகம் புதிதாகக் காட்சியளிக்கும். ஏழைகள் என்று தெரிந்தாலும் அவர்கள் வீட்டில் சாப்பிடச் சொன்னதும் தயங்காமல் சாப்பிடும் மனநிலை நம்மனதில் கள்ளம் புகுந்ததும் விலகிவிடுமாய் இருக்கும்.
பாப்பு குழந்தையாக இருந்தாலும் பெண். அஜி அண்ணனாக இருந்தாலும் பெண் என்பது அவனுக்குப் புதிர் தான். அவனால் புரிந்து கொள்ளமுடியாத பல விஷயங்கள்/செய்கைகள் பாப்புவிடம் இருக்கின்றன. அவன் பெரியவனானதும் தெரிந்து கொள்வான், உலகில் எந்தப் பெண்ணையும் முழுமையாய் புரிந்துகொள்வது ஆகாதது என்று.
Landscape எப்போதுமே அஜிதனின் கதைகளில் பலத்தைச் சேர்க்கின்றன. இந்தக் கதையும் விதிவிலக்கல்ல. அது போலவே இவரது சொற்பிரயோகங்கள்.
‘பாம்பைப் போல் கரிய நீர் நெளிந்து’ , ‘ அளவு மீறி பஞ்சு அடைக்கப்பட்ட பொம்மை’, ‘ கிணற்றின் வாய் சிறிய வெண்வட்டம்’ என்று பல உதாரணங்களைக் காட்டலாம். நல்ல வாசிப்பனுபவம்.
கை – உமாஜி:
பள்ளிப் பருவத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் கதை. குறிப்பாகக் கூடப்படித்த ஒருவனைப் பற்றி. பெண்சாயலில் பேசும் பையன்கள், வித்தியசமாக நடந்து கொள்ளும் பையன்கள் மற்ற மாணவர்களின் Laughing stock ஆக மாறுவது எங்கும் உள்ளதே. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தில், எல்லாச் சிறுவர்கள் குறித்துமே அச்சம் இருக்கும் போது, இது போன்ற சிறுவர்களின் நிலை? ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை யதார்த்தத்தை விட்டுச் சிறிதும் நகராது சொல்லப்படும் கதை. அந்த அதீதமான சுருக்கங்கள் கொண்ட கை!
திருவருட்செல்வி – விஷால் ராஜா:
வரிசையாக எவ்வித திருப்பமோ, ஆர்வத்தையோ ஏற்படுத்தாத வரிகளின் இடையே இருக்கும் மௌனத்தில் கிட்டத்தட்ட அசோகமித்திரனின் பாணி தெரிகிறது விஷால் ராஜாவின் இந்தக் கதையில். எழுத்தில் எந்தவித உணர்வையும் மேல்நோக்க விடாது அதன் பலமடங்கை வாசகருக்குக் கடத்தும் எழுத்து பார்வைக்கு சாதாரணம் போல் தோன்றினாலும் எழுதுவது எளிதல்ல. சராசரிக் குடும்பத்தில் பிறந்து எல்லாமும் இருந்தும் எதுவுமில்லாது போனது செல்வி போல் எத்தனை பேர்! தனிமைக்குப் பூனை துணை. செல்வியை உயரமான இளைஞன் மட்டுமல்ல, நம்மாலும் விரும்பாதிருக்க முடியாது.
சந்தை தெருவில் ஸ்பினோசா: ஐசக் பாஷேவிஸ் சிங்கர் – தமிழில் டி.ஏ.பாரி:
Strange romance story. இரண்டு Eccentricகள் உலகத்தால் ஒதுக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் ஆறுதலைத் தேடிக் கொள்கிறார்கள். தத்துவவாதிகள் மட்டுமல்ல எல்லா அறிவுஜீவிகளுமே ஒருநாள் உலகத்திற்கு வேண்டாதவர்கள் ஆகிப் போகிறார்கள். மக்களுக்குத் தன்னையே மார்க்கெட்டிங் செய்யும் யுத்தி தெரிந்தவர்கள், அவர்கள் பார்வையில் அறிவுஜீவியாக இருப்பார்கள். டாக்டர் நான் முட்டாளாகிப் போனேன் என்கிறார். டோப் என்ன சொல்லி இருப்பாள்? நான் பெண்ணாகி விட்டேன் என்றா? நல்ல மொழிபெயர்ப்பு.
எல்லாக் கதைகளின் தேர்வும் அருமை. அகழ் ஆசிரியர் குழுவிற்கு நன்றியும், பாராட்டுகளும்.