ஆசிரியர் குறிப்பு:
மதுரையைச் சேர்ந்தவர். கவிஞராக எல்லோருக்கும் அறிமுகமானவர். தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம், இந்த இரவு ஒரு சிறிய நூலகம்
ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதற்குமுன் வெளியாகியுள்ளன. இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் எல்லாமே பெண்களின் குரல்கள். மையக்கதாபாத்திரம் பெண் என்பதால் மட்டுமல்ல, முழுக்கவே அகவயப்பட்ட பெண்களே இந்தக் கதைகளில் வருகின்றார்கள். கதைகள் முழுக்க நடந்து கொண்டோ, பயணித்துக் கொண்டோ இருக்கிறார்கள். உள்ளுக்குள்ளும், உடலுக்கும் ஒரு அலைச்சல் இருந்து கொண்டே இருக்கின்றது. அடிக்கடி இருக்குமிடத்தை விட்டு, ஏற்கனவே பழகிய, உறவினர் அல்லது நட்பு வீடுகளுக்குச் செல்கிறார்கள். அங்கேயும் சூழ்நிலை காரணமாகத் தனிமையில் இருக்க வேண்டியதாகிறது. முடிவில்லாத் தேடலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள். அமைதிக்காக அடிக்கடி கோயிலுக்குப் போகிறார்கள்.
தொகுப்பில் எனக்குப் பிடித்த கதை ‘தப்பிதம்’. தொகுப்பின் நீளமான கதையும் இது தான். நண்பியின் வீட்டில் சிலநாட்கள் (ஏதோ சொந்த காரணத்திற்காக) தங்குவதற்கு செல்வதில் இருந்து, அவள் அங்கிருந்து கிளம்பி பேருந்தில் ஏறுவது வரையிலான கதை. தொலைந்து போனவர்கள் நாவலின் கதைக்கரு மட்டுமல்ல ஏராளமான விஷயங்களை இந்தக் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் அம்பிகாவர்ஷினி. நம்மை Taken for granted என்று எடுத்துக் கொள்பவர்களிடம் கூட நாம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள முடியாது. அந்தவீட்டில் வேறுவேறு நபர்களுடன் அவள் எதிர்கொள்ளும் விஷயங்கள் ஆழமானவை. குறிப்பாக நண்பியுடன். அந்தப் பெண்ணின் குழப்பமான மனநிலையை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதே இந்தக் கதையின் வெற்றி. அது போலவே ‘கானல் நீர்’ கதையில் இன்றைய ஆண்-பெண் உறவுச்சிக்கல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திருமணம் எல்லா Choiceகளையும் முடித்துவிடுகிறது, அதனாலேயே பல்லைக்கடித்துக் கொண்டு ஒன்றாக இருக்கிறோம் போலிருக்கிறது.
முன்னுரையில் அகிலா கூறியிருப்பது போல் கவிஞர் எழுதும் கதை என்பதை அங்கங்கே வரிகளின் வனப்பு காட்டிக்கொடுக்கிறது. தப்பிதம் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை, அதனால் தானோ என்னவோ அவ்வளவு நன்றாக இருக்கிறது. நல்ல சிறுகதையாளருக்கான Potential இவரிடம் இருப்பதற்கு சான்று அந்தக் கதை. பத்து கதைகள் கொண்ட தொகுப்பு. இப்போது புதிதாக கதை எழுதுபவர்கள் அவசரமே படத்தேவையில்லை. அணில் கடித்து விடுமோ என்ற பயம் துளியுமின்றி, கதை நன்கு கனியும்வரை காத்திருக்கலாம். தொடர்ந்து எழுதுங்கள்.
பிரதிக்கு :
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 99404 46650
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ. 130.