ஆசிரியர் குறிப்பு:
லார்க் பாஸ்கரன் கள்ளக்குறிஞ்சி மாவட்டம் சின்ன சேலத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத் துறையில் வரைகலைத் தொழில்நுட்பக் கலைஞரான இவர் தற்போது
திரைப்பட இயக்கம் சார்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார். பல நூல்களின் அட்டையில் இவர் கைவண்ணத்தைக் காணலாம். இதற்கு முன் ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. விரைவில் இவரது முதல்நாவல் வெளியாகவிருக்கிறது.
இந்தத் தொகுப்பின் பல கவிதைகள் இருத்தலில் இருக்கும் பிரச்சனைகள் குறித்துப் பேசுகின்றன. அவற்றிலிருந்து தப்பிக்கும் ஒரு வழி கற்பனை சாம்ராஜ்ய ஜன்னலைத் திறந்து வைத்துக் கொள்வது.
” நான் ஏழ்மையானவன்
ஆனால் வசதியாக
இருவேறு ஜன்னல்கள்
மாறிமாறித் திறக்கிறது
அமர்ந்திருக்கிறேன்
ஜன்னலின் முன்
வசதியாக”.
நமது வாழ்க்கையில் நாமே பார்வையாளர். நடப்பதெல்லாம் நாம் சம்பந்தப்படாதவை. முடிவில் நமக்கு இன்பமுமில்லை, துன்பமுமில்லை.
” இடம்பெயர்ந்து கொண்டே
என்னைத் திண்டாட வைக்கிறது
எனது நடை”
நடந்து களைத்தவனுக்கு நீர் தேவபானம். நீர் அருந்துதல் உயிரைத் தக்கவைக்கும் மருந்து.
ஆனால் இலக்கில்லாப் பயணத்தில் இளைப்பாறும் போதும் எதிர்காலம் குறித்த கவலை பெரும்சுமையாய் மாறித் தலையை அழுத்தும்.
” திசைகளற்ற பிரதேசத்தில்
நீர் அருந்திக் கொண்டிருக்கிறது
என் வாழ்வு
இரைதேடி உயிர்வாழும்
பறவையாய் தூரதேசம் செல்கிறேன்”
புதியதோர் உலகம் செய்வோம் என்பது இவர் வார்த்தைகளில். ஆனால் அந்த உலகமும் இது போல் ஆவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்.
” சமன் செய்யபடாத இவ்வாழ்வில்
குழப்பங்கள் நிறைந்த மக்களின்
ஆபத்தான மனநிலை
சரிசெய்யும் முயற்சிக்கு
ஒரு நிலப்பரப்பு
தேவையாக இருக்கிறது”
Mutually exclusive sentencesகளை கவிதைகளில் கொண்டு வருவது அழகு. வாசிப்பவருக்கு அசைபோட கொஞ்ச நேரம் தேவைப்படும்.
” நீர்பரப்பின் அடியில்
மனம் காய்ந்து கொண்டிருக்கிறது
பருவஉபாதைகள்
எப்போதும் அப்படித்தான்
சொற்கள் குவியும் வட்டங்களாய்
வாழ்க்கை
முன்னேற்பாடு இல்லாத
ஒழுக்கத்தின் மேல்
கைகள் கட்டப்பட்டிருக்கின்றன”.
தனிமையின் வாதை, சமூக அரசியல், உலகத்தோடு ஒட்ட ஒழுகாமையினால் வரும் சிரமங்கள் ஆகிய மூன்று தலைப்புகளில் இந்த. தொகுப்பின் பெரும்பான்மைக் கவிதைகள் அடங்கிவிடும். காதலி குறித்த ஒரு கவிதையிலும் அங்க லாவண்யம், நெருக்கம், காமம், விட்டு விடாதே போன்ற வழக்கமான விஷயங்கள் ஏதுமின்றி, பேய் மழையாய் காதலை உணர வைக்கிறாள். உலரவைத்தல் தேவைப்படாத நீர்மை.
‘மாற்று’ கவிதை ஒரு Classic. “வட்டம் பாறையாகத் தெரிந்தது” என்ற வரிகள் காரிருள், காடு, தனிமை, பயம் எல்லாவற்றையும் நமக்கும் கொண்டு வந்து சேர்க்கின்றன. தனிப்பட்ட அனுபவங்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, தன் கவிதைகளில் ஒரு பொதுமையையும், அழகியலையும் வாசிப்பவர்களுக்கு இவர் வழங்க நினைப்பது புரிகிறது.
சமூகக்கட்டுப்பாடுகள் மூச்சுத்திணற வைப்பது சில கவிதைகளில் வெளியாகி இருக்கின்றது. ‘ தவறுகளற்ற நாட்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’. தலைப்புக் கவிதைக்குள் ஒருசிறுகதை ஒளிந்திருக்கிறது. ஏக்கம், சலிப்பு இவற்றினால் விரக்தி ஏற்படாமல் வாழ்வைக் கண்டடையும் பயணத்தைத் தீவிரமாகச் செய்யும் வேட்கையின் வெளிப்பாடாகவே லார்க் பாஸ்கரனின் கவிதைகள் எனக்குத் தோன்றுகின்றன.
பிரதிக்கு:
வேரல் புக்ஸ் 95787 64322
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ.180.