புக்கர் பட்டியலில் முதன்முறையாகத் தமிழ் நாவல் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி. பல வருடங்களாகக் கனவு போல் இருந்த ஒன்று நினைவாகி இருக்கிறது. இதைச் சாத்தியப்படுத்திய பெருமாள் முருகனுக்கும், அனிருத் வாசுதேவனுக்கும் நன்றியும், பாராட்டுகளும்.
சரோஜாவின் உலகம் சிறியது. அப்பாவும், அண்ணனும் உறவு, ஒரு அறையில் வாழ்க்கை. பருவத்தின் தேடலில் குமரேசன் கண்ணில் படுகிறான். குமரேசனின் கண்ணில் சரோஜா தென்படுகிறாள். இருவரும் அடிக்கடிப் பார்த்துக் கொண்டு, பேசிப் பழக அதிக காலமாகவில்லை. காதலன் ஒருவனை மட்டும் நம்பி பிறந்து வளர்ந்த ஊரை, அப்பா, அண்ணனை விட்டு அவனுடன் அவனது ஊருக்குச் செல்லத் தயாராகிறாள். காதலில் விழுந்தோருக்கு எப்போதும் துணை மட்டுமே இருந்தால் போதும், உலகில் வேறு யாரும் தேவையில்லை என்று தோன்றும். ஆனால் சரோஜாவிற்குத் தெரியாதது, குமரேசனின் ஊர் மொத்தமும் இவர்கள் காதலுக்கு எதிராக நிற்கப் போவது.
தான் தீண்டக்கூடாத இனம் என்று சொல்லப்படும் ஜாதி என்பதே தெரியாத சரோஜா, நகர வாழ்க்கையில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்ததும் எல்லா அவமானங்களையும் சந்திக்கிறாள். ஊருக்குள் நுழைந்த முதல்நாளிலேயே அப்பா, அண்ணனை விட்டு வந்தது தவறோ என்று யோசிப்பதிலிருந்து அவளது மன அவசங்கள் மிகத்தெளிவாக நாவலில் பதிவாகி இருக்கின்றன. அதே போல் குமரேசனின் அம்மா அப்படியே கிராமத்து மாமியார்களின் மொத்தவடிவம். இரண்டே வருட மணவாழ்க்கையின் முடிவிற்குப்பின் கடுமையான வேலைகள், மகனை வளர்த்து ஆளாக்கிய பின், அவளது கோணத்தில் இருந்து பார்த்தால் குமரேசன் அவளைக் கைவிட்டது புரியும். குமரேசன் சோடாக்கடை போட்ட ஊருக்குப் போய் குடும்பம் நடத்தியிருந்தாலும் அவனால் மாதச்செலவுக்குப் பணம் உண்டு பண்ணியிருக்க முடியும் என்று தோன்றவில்லை. சில ஆண்கள் காதலிக்கவும், இனிக்கப் பேசவும், கொஞ்சவும் மட்டுமே வேலைக்கு ஆகிறவர்கள்.
வட்டார வழக்கில் ‘அரிசியப்படுவ’ என்றால் அதிசயப்படுவாய் என்று ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் “நெவுலொணத்தி உட்டு நவராத மூஞ்சி'” என்றால் பெரும்பான்மைத் தமிழருக்கே புரியாது, எங்கிருந்து நேரடியாக ஆங்கிலச் சொல்லைக் கண்டுபிடிக்க? நாவல் முழுவதுமே முதல் பார்வையில் புரியாத சொற்கள் ஏராளமாக இருக்கும் கதையை ஆங்கிலத்தில் கொண்டு வருவது எளிதல்ல.
அனிருத்தின் ஆங்கிலம் நாவலுக்கு Justice செய்திருக்கிறது. பல வார்த்தைகள், உதாரணத்திற்கு :பூக்குழி’ என்ற வார்த்தைக்கே சரியான ஆங்கிலச்சொல் கிடையாது எனும்போது இது எளிமையான வேலையல்ல.
இந்தியாவின் மிக உயரிய விருதான ( விருதுத் தொகையைப் பொறுத்த வரை), JCB Literature இறுதிப்பட்டியலில் பெருமாள் முருகன், இரண்டுமுறை வந்திருக்கிறார். இந்தப் பட்டியலில் வந்த ஒரே தமிழ் எழுத்தாளர் இவர் மட்டுமே. முதலாவது கல்யாணராமன், அடுத்தது அனிருத் செய்த மொழிபெயர்ப்புகள். இரண்டுமே விருது வாங்கும் என்ற நம்பிக்கையைத் தர முடியாத வகையில் அந்தப் பட்டியலில் மற்ற நூல்கள் இருந்தன.
Irelandல் கத்தோலிக்கப் பெண்கள், திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றுக் கொள்ள நேர்ந்தால், குழந்தையை Dispose செய்வது வரை School என்ற பெயரில் கன்னியாஸ்திரிகள் கவனித்துக் கொள்வார்கள், இதற்குத் திருச்சபை ஆதரவு என்ற பின்னணியில் வந்த நாவல் Small things Like these. அதற்கு புக்கர் விருது கிடைக்கவில்லை. காலையில் டிபன் சாப்பிட்டதும், பத்து வருட மணவாழ்க்கையை, I can’t take it any more என்று முறிக்கும் சமூகத்தில் இருப்பவர்களுக்கு, காதலித்து மணந்த தம்பதியரின் ஒவ்வொரு செயலிலும் ஊர், உறவுத் தலையீடு வரும் என்பதே ஒரு கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். கிளைமேக்ஸ்ஸை அவர்கள் Digest செய்வது இன்னும் கடினம். அந்த ஒரு காரணத்தினாலேயே இந்த நாவல் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் என்பது என் கருத்து. Marketingல் Positioning என்பது மிக முக்கியம். பெருமாள்முருகனின் இலக்கிய இடம் குறித்த எனது முந்தைய நிலையை விட்டு ஒரு இன்ச் கூடஅவர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது என்னை நகர்த்த உதவவில்லை.
தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குச் செல்லும் நூல்கள் வெகுகுறைவு. அதனாலேயே இந்திய அளவிலேயே கூட எதுவும் போட்டியில் தகுதிபெற்று வருவதில்லை. பொன்னீலனின் கரிசல் நாற்பது வருடங்களுக்குப் பிறகு அவரது பேத்தியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. All the women out there, who can speak and write better English than many of us, please, please try to translate some tamil novels which you love most. அது ஒன்று தான், உலகமேடையில் தமிழ் இலக்கியத்தைக் கடைத்தேற்ற ஒரே வழி.