ஆசிரியர் குறிப்பு:
திருச்சியில் பிறந்தவர். பொறியியல் பட்டதாரி. வடமாநிலங்களில் பணியாற்றியவர். சிதைவு என்ற சிறுபத்திரிகையை நடத்தியவர். தனுமையின் இக்கணம், யாதென அழைப்பாய், மாயன்- ஹிலிலோ கொத்தஸார் ஆகிய கட்டுரை நூல்கள் இதற்கு முன் இவர் வெளியிட்டவை. இது நான்காவது கட்டுரைத் தொகுப்பு.
Flash Non fiction என்ற வடிவம் பெரும்பாலும் முகநூலுடன் நின்றுவிடுகிறது. புத்தக வடிவம் பெறுவது குறைவு. அல்புனைவு என்றாலே பத்து பக்கங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று திறனாய்வுப் பெருமக்கள் திடமாக நம்புவதால், இவை அதிகம் கவனம் பெறுவதில்லை என்று தோன்றுகிறது. ஒரு எழுத்தாளரின் பல்வேறு மனநிலைகளில் இருந்த சிந்தனைகளை நாம் தொடர்வதற்கு இது போன்ற நூல்கள் உதவி செய்யக்கூடும். நமக்கும் கூட இதுவரை தவற விட்டிருந்த விஷயங்களைப் சரிபார்த்துக் கொள்ளும் வாய்ப்பு. உதாரணமாக குண்டலகேசிக்கும், மந்திரிகுமாரியின் வாராய் பாடலுக்கும் உள்ள தொடர்பு.
ஏ.கே.ராமானுஜன் குறித்த இரண்டு கட்டுரைகள் அவர் நாட்டார்வியலுக்கு முக்கியத்துவம் அளித்ததையும், சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்கையும் பற்றிக் கூறுகிறது. A K R அதிகம் படிக்கப்படவில்லை. அதிலும் அவர் எழுதிய ஆங்கிலக்கவிதை ஒன்றில் பாதி சாப்பிட்டு விட்டுப் போன துண்டில் அந்தப் பெண்ணின் பல்தடம் போன்றவை குறித்து நிறையவே பேசுவதற்கு இருக்கிறது.
கலையும் கணித எண்ணும் என்ற கட்டுரை இன்றைய தமிழ் இலக்கியச்சூழலில் முக்கியமான ஒன்று. So you want to be a writer என்ற தலைப்பில் Charles Bukowskiன் கவிதை ஒன்று உண்டு. கரும்பை பதினெட்டாவது முறை ஜுஸ் வரும் என்று இயந்திரத்தில் திணிப்பது போல் எக்கச்சக்கமாக எழுதுகிறார்கள். எழுதாவிட்டால் மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் எழுதுகிறார்கள். சிறுகதையை நாவலாக மாற்றுகிறார்கள். நொய்யல் போன்ற வெகுசில படைப்புகளே பக்க அளவிலிருந்து விதிவிலக்கு. மற்றவை எல்லாம் அதிகம் குடித்து வாந்தியெடுப்பவன் ஒரிடத்தில் உட்கார்ந்து எடுக்காமல் வீடுமுழுக்க நடந்து கொண்டே எடுத்த கதை.
நூலின் பெரும்பகுதி எழுத்தாளர்கள், கவிஞர்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. சல்மான் ருஷ்டியிலிருந்து, கால்வினோ, போர்ஹே, மார்க்வெஸ், புயண்டெஸ், லோர்கா, பூக்கா, எச்சுபெரி, ப்ராட்ஸ்கி, போ, ஹென்றி மில்லர் போன்ற பல எழுத்தாளர்கள் குறித்து, ரைம்போ, நெருடா, எலியட், சில்வியா ப்ளாத், W.B. Yeats முதலிய கவிஞர்கள் குறித்த Flash தகவல்கள் சுவாரசியமானவை மட்டுமல்ல, இவர்களை வாசிக்காதவர்கள் Must read என்று குறித்துக் கொள்ளப்பட வேண்டியவை.
தாகூரின் நோபல் குறித்து இவர் எழுதிய கருத்தே என்னுடையதும். நோபல் என்றுமே வெளிப்படையாக இருந்ததில்லை. ஆர்வமுள்ளோர் Irving Wallaceன் The Prize நாவலை வாசித்துப் பார்க்கலாம். J.K யின் Extra curricular activities எல்லோருக்கும் தெரிந்ததே. நம்மவர்கள் நான்கு கம்பளத்தைப் போட்டு மூடிய, காந்தியின் காதலைப் பற்றியும் எழுதியிருக்கிறார். காந்தி குறித்து இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டியதாக இருக்கிறது. அவரை கோட்ஸே கொன்றிருக்காவிட்டாலும் வேறு யாரேனும் கொன்றிருப்பார்கள். வடக்கே அன்றைய பெரும்பான்மை மனநிலை அப்படி. ராணுவத்தை வைத்து போர் செய்த, இந்துப் பெண்களின் மீதான அத்துமீறலுக்குத் துணைநின்ற, காஷ்மீரில் ஒரு பகுதியை கைப்பற்றிக் கொண்ட பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடு என்று உண்ணாவிரதம் இருப்பது எந்த வகையில் நியாயம்? நாம் எல்லாவற்றையும் ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்கப் பழகிக் கொண்டோம். காந்தி இல்லையென்றால் இந்திய சுதந்திரப் போராட்டம் இவ்வளவு கட்டுக்கோப்பாக, பல தலைவர்களை உள்ளடக்கி நடந்திருக்காது. அது வேறு, இது வேறு.
இந்த நூலுக்கு மட்டுமல்ல, தமிழில் பல நூல்களுக்கு Online Sales link என்பதே இருப்பதில்லை. Amazon, Commonfolks, Panuval போன்ற தளங்களில் புதிதாக என்ன வந்திருக்கின்றன என்பதைத் தொடர்ந்து பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். இந்தப் புத்தகம் வெளியானதுமே மனோன்மணி எனக்கு அனுப்பி விட்டார். ஆனால் பல காரணங்களினால், பதிப்பாளர்களைத் தொடர்பு கொள்பவர் குறைவு.
சங்க இலக்கியம், வழிபாடுகள், சமூக உளவியல், சடங்குகள், இலக்கியப் போக்குகள், அரசியல் மாற்றங்கள், சாதனை புரிந்து காலத்தில் கரைந்தவர்கள் என்று எத்தனையோ விஷயங்களைப் பற்றி இந்த நூல் கூறிச் செல்கிறது. வாசுதேவனின் மொழி எந்தச் சிடுக்கும் இல்லாது எளிமையானது. ஆனால் அவர் சொல்கின்ற விஷயங்கள் பலவும் எளிமையானவையல்ல. வாசித்துப் பாருங்கள். மனதோடு மொழிதல். பல நேரங்களில் அதைத் தானே செய்து கொண்டிருக்கிறோம்.
பிரதிக்கு:
புது எழுத்து 98426 47101
முதல் பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 250.