ஆசிரியர் குறிப்பு :
கொழும்பு பல்கலையின் ஊடகப் பட்டதாரி. தமிழில் இருந்து சிங்களத்திற்கு, சிங்களத்தில் இருந்து தமிழுக்கு, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு என்று இதுவரை நான்கு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இது ஐந்தாவது.
பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் என்ற சரிவிகிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள். அநேகமாக எல்லாக் கதைகளுமே கடந்த பதினைந்து வருடங்களுக்குள் எழுதப்பட்டிருக்கலாம். எல்லாக் கதைகளின் கதைக்களங்களும் போருக்குப் பிந்தியது. போரினால் ஏற்பட்ட சிதிலங்களைக் குறித்துப் பேசினாலும், போர் காலத்தின் கதை என்று ஒன்று கூட இல்லை. ஒரு கதையில் இஸ்லாமியருக்கும், சிங்களவர்களுக்குமான மோதல் மறைமுகமாகச் சொல்லப்படுகிறது.
இந்தத் தொகுப்பின் கதைகள் மட்டுமல்ல, ரிஷான் மொழிபெயர்த்தவை, சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கையில் சிங்களப் பொது சமூகம் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு கதையில் சிங்களப்பெண்ணைக் காதலித்து மணந்த தமிழனைக் கொன்று போடுகிறார்கள். இன்னொரு கதையில் ” பிரபாகரன் செய்தவை எல்லாமே சரி என்று சொல்ல மாட்டோம்…. ஆனால் ” என்று ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. சிங்கள எழுத்தாளரின் வரிகளில் இதைப் படிக்கையில் நெகிழ்வாக இருக்கிறது. வயதான தமிழ் தம்பதியருக்குத் துணையாகச் சென்ற சிங்கள வாலிபனை ஏன் அவர்களுடன் செல்கிறாய் என்கிறது சிங்கள ராணுவம்.
ஐந்து பெண் எழுத்தாளர்களின் கதைகளில், காஞ்சனா பிரியகாந்தவின் கதை மட்டும் தனித்து நிற்கிறது. வயதானவனை மணந்த பெண் எப்படியும் வந்துவிடுவாள் என்ற ஆண்களின் கூட்டுமனநிலையை அழகாகச் சொல்லியிருக்கும் கதை. அவர்களது மனைவிகளின் எதிர்வினைகள் கூட யதார்த்தமாக இருக்கிறது.இவரது தொகுப்பு தமிழில் வந்திருக்கிறதா? மீதி நான்கில், இரண்டு கதைகள் பெண்ணியம் பேசுபவை. அதில் ஒன்றில் கதையே இல்லை. மற்ற இரண்டு கதைகளில் ஒன்று இவன் வேண்டுமா வேண்டாமா என்று தயங்கும் குடும்பக் கதை. இன்னொன்று சிறார் கதை. தஷிலா ஸ்வர்ணமாலிகள் அங்கேயும் அதிகம் இல்லை போலிருக்கிறது.
இசுறு சாமர சோமவீரவின் ஒவ்வொரு கதையுமே நன்றாக இருக்கின்றன. இதில் மெலிதாக மேஜிக்கல் ரியலிசத்தைச் சேர்த்து சிறுவனின் பார்வையில் அதிர்ச்சி தரும் கதையை எழுதியுள்ளார். சுனில் விக்ரமசிங்க Child abuseஐ நுணுக்கமாக எழுதியுள்ளார். கபில.எம்.கமகே, திவ்யாவின் கால்விரல் தடம் போன்ற சில மெலோடிராமாக்களை நீக்கி விட்டால் ஒரு வயதான தம்பதியரின் Dilemma மற்றும் தனிமையைச் சொல்லும் நல்ல கதை. மீதி இரண்டும் சராசரிக் கதைகள்.
ரிஷான், லறீனா, அனுஷா போன்றவர்கள் மூலமாக நமக்கு சமகால சிங்கள இலக்கியம்
அறிமுகமாகிக் கொண்டே வருகிறது. இன்னும் பலர் மொழிபெயர்ப்புக்கு முன்வர வேண்டும். மார்ட்டின் விக்ரமசிங்கவின் The Way of Lotus ஆங்கிலத்தில் தேடியும் கிடைக்கவில்லை, தமிழில் கொண்டு வரலாம். அனுஷாவிற்கு தமிழ் எவ்வளவு தெரியுமோ அதே அளவிற்கு சிங்களமும் பரிட்சயம் போலிருக்கிறது. வார்த்தைகள் தடங்கலே இன்றி வந்திருக்கின்றன. வாசிப்பதற்குத் தமிழில் வந்த கதை போலவே தெளிவாக இருக்கிறது. தொடர்ந்து மொழிபெயர்ப்பில் இயங்கிவர வாழ்த்துகள்.
பிரதிக்கு:
வேரல்புக்ஸ் 95787 64322
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ.90.