வெகுநீளமான பதிவு. வேறு வழியில்லை.

Tushar காந்தி-பா வின் இரண்டாவது மகன், மணிலாலின் மகன் வழிப்பேரன். Gandhi Foundarionக்கு மட்டுமல்ல, மற்ற பல சமூக நிகழ்வுகளில் Tusharன் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நூல், பாவின் காணாமல் போன டயரியில் இருந்து, குஜராத்தியில் அவரே கைப்பட எழுதிய குறிப்புகளின் ஆங்கில உருவாக்கம்.

Gandhi’s Letter to Ba: When Ba was 39 years old.

” If it is destined that you shall die, I think it is preferable that you go before me. You know I love you very much. And you must know that I will continue to love you just as much even after you are gone. Even if you die, for me you will be eternally alive. Your soul is deathless. On my part, I would like to assure you that I have no intention of marrying another woman after your death”.

பா என்ன நினைத்திருப்பார் என்று அடிக்கடி நான் யோசித்ததுண்டு. காந்தி போன்ற ஒருவரின் மனைவி என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பாவின் பதினாறாம் வயதில் முதல் ஆண் குழந்தை, Premature ஆகப் பிறந்து இரண்டு நாட்களில் இறக்கிறது. அதே நேரம் இறந்த அவரது மாமனாரின் இறப்பிற்காக காந்தி அவர் குடும்பத்துடன் இருக்க நேர்கிறது. புத்திர சோகத்தில் பதினாறு வயதுப்பெண் தனிமையில்……… பாவின் வாழ்க்கையில் இது போல், கடைசிவரை எத்தனையோ கைவிடல்கள் உண்டு. அத்தனையும் தாண்டி கணவன் மீதான அன்பும், இந்தியப்பெண்களின் கணவனே சரி என்ற அசட்டு நம்பிக்கையும் அவரை வழிநடத்திக் கொண்டே இருந்தது. பா வை மனைவியாகப் பெற காந்தி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

காந்தியின் ஏழுவயதில் நிச்சயம், பதிமூன்று
வயதில் திருமணம். பள்ளியில் சுமாராகத் தேர்வு. கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலம் தாக்குப்பிடிக்க முடியாது Dropout. இங்கிலாந்தில் சட்டம் படித்தால் நல்ல எதிர்காலம் என்று அவரது தகப்பனாரின் நண்பர் சொல்கிறார். குடும்பத்தில் பெரும் வறுமை. கஸ்தூரி பிறந்தவீட்டு நகைகளைக் கொடுத்துக் கணவனை படிக்க அனுப்பி வைக்கிறார். மீண்டும் கணவனிடம் இருந்து மூன்றுவருடங்கள் பிரிவு. வழக்கறிஞராக வந்த காந்தியால் மும்பையில் நீதிமன்றத்தில் எதுவும் செய்ய முடியவில்லை. மீண்டும் வாழ்க்கையில் தோல்வி. மனுக்கள் எழுதி சொற்ப வருமானம். கஸ்தூரியின் தந்தை அவரது நண்பரிடம், தென் ஆப்பிரிக்காவில் ஒருவருடம், இந்திய வழக்கறிஞர் தேவைக்குத் தன் மருமகனை சிபாரிசு செய்கிறார். காந்தி மகிழ்வாகக் கிளம்புகிறார். பாவிற்கு மீண்டும் தனிமை. ஒருவருடம் முடிகிறது. காந்திக்கு பிரிவு உபச்சாரவிழா நடத்தி அந்தக் குடும்பம் அவரை வழியனுப்புகிறது. அப்போது, தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு வாக்குரிமை இல்லை என்ற சட்டம் கொண்டு வரப்படுகிறது. காந்தியை அங்கிருக்கும் இந்திய சமூகம், அங்கு தங்கும்படியும் உரிய ஊதியம் தருவதாகவும் சொல்வது. காந்தி இந்தியர்களின் உரிமைக்குப் போராட ஊதியம் வேண்டாம் என்று மறுக்கிறார். இந்திய சமூகம் அவர்களது தனிப்பட்ட எல்லா சட்டத் தேவைகளுக்கும் காந்தியை நியமித்து அவருக்கு Fees வழங்குகிறது. காந்தியின் வருமானத்தால், ஊரில் கடன் ஒழிந்து, குடும்பம் வறுமையில் இருந்து மீள்கிறது.

இளம்மனைவி குழந்தைகளைப் பிரிந்தவர், ஊரில் சகோதரர்களின் கருணையால் மனைவி, குழந்தைகள் உணவு உண்ணும்படி இருக்கும் நிலைமையில் உள்ளவர், கடனை அடைக்க முடியாதவர், இதுவரையிலான வாழ்க்கையில் தொடர்தோல்விகளைத் தவிர வேறு எதையும் சந்தித்திராதவர், இந்திய சமூகத்தின் உரிமைக்காகச் செய்யும் வேலைக்கு பணம் வேண்டியதில்லை என்று எப்போது சொல்கிறாரோ, அப்போதிருந்து மற்ற மனிதர்களிடமிருந்து மாற்றுப்பாதையை காந்தி தேர்ந்தெடுக்கும் முதல் அடி எடுத்து வைக்கப்படுகிறது. ஒரு மாதம் கழித்து அந்த சட்டம் வந்திருந்தால் காந்தி மீண்டும் இந்தியாவில் மனு எழுதிக் கொண்டிருந்திருப்பார். விதியின் கரம் இடையில் புகுகிறது. விதியின் வழியல்ல, அப்போது காந்தி எடுக்கும் முடிவே அவரது மகாத்மா உருவாக்கத்திற்கான முதல்படி.

பிற ஜாதிக்காரனின் சாப்பிட்ட தட்டைக் கழுவ மாட்டேன் என்று சொன்னதற்காக, பா இந்தியாவில் அல்ல, தென் ஆப்பிரிக்காவில் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு, இனி இந்த வீட்டில் இடமில்லை என்று தள்ளப்படுகிறார். நான் எங்கே செல்ல முடியும் என்ற பாவின் கதறல் காந்தியை மனம் மாற்றுகிறது. அப்போது இருவருக்கும் மூன்று குழந்தைகள்.

காந்தியை உடனடியாக Abusing husband என்று முத்திரை குத்துவதற்கில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனைவி பிரசவத்தில் பலவீனமாக இருக்கும் போது அவளைக் குளிப்பாட்டி, Bed Pan எடுத்து……….என்பதெல்லாம் ஒரு இந்தியக் கணவனின் எல்லைக்கு அப்பாற்பட்டது.
ஆப்பிரிக்காவை விட்டுக் கிளம்பும் போது பணமுடிப்பும், நகைகளும் கொடுக்கிறார்கள். பா வைத்துக் கொள்வேன் என்று கதறக்கதற மொத்தத்தையும் ஒரு டிரஸ்டுக்குக் கொடுத்து விடுகிறார். காந்தியைப் புரிந்து கொள்ளுதல் மிகக்கடினம்.

மனைவியின் நகைகளை வாங்கி பாரிஸ்டர் படிப்பு படித்த காந்தி ஏன் அவரது குழந்தைகளுக்கு தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலக்கல்வியை (In Elite Schools) மறுத்து, இந்தியர்களுக்கு நடத்தும் தரம்குறைந்த பள்ளியில் சேர்க்க வேண்டும்? பின்னாளில்
மணிலால் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலிக்கிறேன் என்ற போது காந்தி ஏற்கவில்லை. அதிகக் கல்வி அறிவு இல்லாத பா ஏன் தன் குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வியை வலியுறுத்தி கணவருடன் சண்டை போட வேண்டும்? காந்தி எனக்கு எப்போதுமே புரியாத புதிராகவே இருக்கிறார். ஒருவேளை தான் வழிகாட்டி என்பதால் தன்னைத் தொடர்ந்து நிரூபிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா காந்தி? At whose cost!

காந்தி- பாவின் Sexual lifeம் நூலில் பேசப்படுகிறது. காந்தி ஏதோ ஒரு காரணத்தினால் Sexல் இருந்து விலகி இருக்கும் பொழுது அவரை Seduce செய்யாமல், அவரால் அடக்க முடியாது அவர் ஈடுபடுகையில் அவரை Mock செய்யாமல் ஒத்துழைத்து, What a lady was she! Act of Celibacy என்பது தம்பதிகளில் ஒருவர் மட்டும் முடிவுசெய்வதா?

ஹரிலால் ஆப்பிரிக்காவில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுப் பலமுறை சிறை சென்றது தெரிந்ததே. காந்தி ஒருவரே இந்திய வழக்கறிஞர். இந்திய சமூகம் மேலும் ஒருவரை அனுப்ப நினைக்கையில் ஹரிலால் தன் ஆவலைத் தெரிவிக்கிறார்.
ஆனால் காந்தி அவரது தங்கை மகனை அனுப்புகிறார். அவர் பாதியிலேயே படிப்பை
விட்டுப் போகிறார். இரண்டாம் முறை இன்னொரு வாலிபர். அவர் படிப்பை முடித்து சில மாதங்களில் இறந்து போகிறார். மூன்றாம் முறையும் ஹரிலாலுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஹரிலால் தென்ஆப்பிரிக்காவில் அவரது சத்தியாக்கிரகப் போராட்டங்களால் சின்னகாந்தி என்று அழைக்கப்பட்டவர். காந்தியின் மகன் என்ற ஒன்று மட்டுமே அவரது Negative qualification. காந்தியின் இந்த More loyal than the king மனநிலை பின்னாளில் அவரை முஸ்லீம்களுக்குக் கண்மூடித்தனமான ஆதரவை அளிப்பதற்கும் கணிசமான இந்துக்கள் அவரை வெறுப்பதற்கும் காரணமாகப் போகிறது. ஹரிலால் தந்தையுடன் சண்டையிட்டு இந்தியா கிளம்பும் முன் தாயிடம் சொல்லியது ” அவர் நம்மைப் பொருட்படுத்தவில்லை பா. ஒருநாளும் அவர் நம்மைப் பொருட்படுத்தப் போவதில்லை. பா தன்னுடைய வாழ்விலேயே அதிகம் நேசித்த இரு ஆண்கள், ஒருவருக்கொருவர் பகையாளி ஆகிறார்கள்.

ஹரிலாலுக்கும், முஸ்லீம் லீக்குக்கும் ஒரே நோக்கம், காந்தியை அவமானப்படுத்துவது. காந்தி எதிர்வினை செய்யவில்லை. பா ஒரு தாயாகத் தன் வேதனையை பகிங்கரமாகச் சொல்கிறார். காந்தி எந்த எதிர்வினையும் செய்யாதது, ஹரிலாலை வைத்திருக்க அதிகப்பணம் செலவாவது முஸ்லீம் லீக்கை ஹரிலாலைக் கைவிடத் தூண்டுகிறது. இந்து மகாசபை வேகமாக வந்து, மீண்டும் தாய் மதத்திற்கு அவரை மாற்றுகிறது. இம்முறை அவர் பெயர் ஹிரலால். இந்து மகாசபையும் அவர் மறுபடி இந்துவானதும் பொருட்படுத்துவதில்லை. மதங்களுக்கு எப்போதும் பணம் சம்பாதிப்பதே நோக்கம் அல்லால், செலவழிப்பது அல்ல. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், ஹரிலால், அப்துல்லா, ஹிரலால் ஆகிய மூன்று பெயருக்கும் பின்னால் காந்தி என்று போட்டுக் கொள்ள அவர் தவறாதது.

சிலவருடங்களுக்கு முன், கஸ்தூர்பா ஆசிரமம், இந்தூரில், பரணில் இருந்த பழைய டிரங்க் பெட்டியில் ஒரு டைரி கிடைக்கிறது. குஜராத்தியில் எழுதப்பட்ட அந்த டைரியை ஆழ்ந்து பார்க்கையில் அது பா எழுதிய டைரி என்று தெரிய வருகிறது. பா எழுதுவார் என்பதே எல்லோருக்கும் ஆச்சரியமான விஷயம். ஏராளமான இலக்கணப் பிழைகளுடன் பா ஜனவரி 1933ல் இருந்து செப்டம்பர் 1933 வரை எழுதிய குறிப்புகள் கொண்ட டயரி.

டயரியில் பெரும்பாலும் அவரது தினசரி நடவடிக்கைகளையே பதிவு செய்திருக்கிறார் பா:

மதிற்பிற்குரிய பாபுஜியிடம் இருந்து கடிதம் வந்தது இன்று என்றிருக்கிறார்.

1933- அவருடைய 64வயதில் இந்தி எழுத மீராபென்னிடம் கற்றுக் கொள்கிறேன் என்றிருக்கிறார்.

ஹரிலாலின் மனைவி குலாப்பின் சகோதரி பாலிபென்னுடன் ஹரிலாலுக்கு இருந்த ரகசிய உறவை காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. பாலிபென் காந்தி உடல்நிலை சரியில்லாத போது வந்து பார்க்கிறேன் என்றதற்கு காந்தி பார்க்க வரவேண்டாம் என்று பதில் எழுதுகிறார். பா ஒரே வரியில் பாலிபென்னை பாபுஜி வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்என்று எழுதுகிறார். அதே போல் ஹரிலால் பாம்பே ரயில் நிலையத்தில் சந்தித்தது ஒரு வரியில் கடந்து போகிறது.

சில இடங்களில் பாவின் Frustration தெரிகிறது. “பாபுஜிக்கு ஆறுமணிக்கு உணவு கொடுக்க நான் தயாரானால் பிரபா கொடுக்க விரும்புகிறாள். ஒவ்வொரு முறையும் நான் யாருடனாவது போட்டியிட்டுத் தோற்கிறேன். பாபுஜி பாவிற்கு வேலை அதிகம் இல்லை, உணவைக் கூடக் கொடுக்க முடியவில்லையா என்று எல்லோரிடமும் சொல்கிறார்”.

தன்னுடைய கருத்தை பா முக்கியமான விஷயங்களில் டயரி மூலமாக வெளிப்படுத்த விரும்பவில்லை என்பது தெரிகிறது. பா எதுவுமே சொல்லவில்லை என்றாலும் கணவர் மீதான அவரது Steadfast devotion எல்லோருக்கும் தெரிந்ததே. கணவர் எவ்வழி நானும் அவ்வழி என்பதே அவரது வாழ்க்கை. முதல் மகன் ஹரிலாலை அவர் அதிகமாக நேசித்தார். ஹரிலாலின் அம்மா மீதான பாசம் சந்தேகத்திற்கப்பாற்பட்டது. பா இறக்கப் போகிறார். ஹரிலாலை நாடு முழுதும் தேடுகிறார்கள். ஹரிலால் நல்ல போதையில், மோசமான உடையணிந்து வருகிறார். பா பார்க்க சகிக்காமல் ஹரிலாலை வெளியேறும்படி சொல்கிறார். மற்றவர்கள் ஹரிலாலை இழுத்துச் செல்கின்றனர். பாவின் கடைசி நிமிடங்களில் காந்தியின் அருகாமை அவருக்குக் கிடைத்தது. அவர் உயிர் பிரிகையில் அவரது அறுபது வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த கணவர் இருந்தார். ஆனால் பா நிச்சயம் தன் மூத்த மகனைக் குறித்து ஒரு கணமேனும் எண்ணியிருப்பார்.

காந்தி பாவை உண்மையாகக் காதலித்தார்.
அவருக்குப் பலமுறை பணிவிடைகள் செய்திருக்கிறார். பலமுறை பாவின் மனம் காயப்படும் வகையில் பேசியிருக்கிறார். என்ன சொன்னாலும், செய்தாலும் பா காந்தியை விடாமல் சிக்கெனப் பற்றிக் கொண்டார். காந்தி தன்னை வருத்தித் தன்னுடன் நெருக்கமானவர்களையும் சேர்த்து வருத்தினார். புகழுக்காக அதைச் செய்திருந்தால் ஜாதி இந்துக்களின் துவேஷத்தைக் கிளப்பும், தலித் மக்களை ஆசிரமத்திற்குள் சேர்க்கும் நடவடிக்கை போல பலவிஷயங்களைச் செய்திருக்க மாட்டார். ஒருமுறை பா உடல்நிலை மிக மோசமாகிறது. ஜெர்மன் டாக்டர் அவருக்கு
beef soup கொடுத்தால் தான் பிழைப்பார் என்று சொல்ல, காந்தி கொடுக்க வேண்டாம் நான் அங்கே வருகிறேன் என்று வேறு ஊரிலிருந்து அவசரமாகக் கிளம்பிச் செல்கிறார். அதற்குள் டாக்டர் ஒருமுறை சூப்பை என்னவென்றே சொல்லாமல் பாவிற்குக் கொடுத்து விடுகிறார். காந்தி வந்ததும் டாக்டரிடம் சண்டையிட்டு, பாவைக் கூட்டிச் செல்கிறார். ஆனால் பாவிடம் அவர் இறக்கும் வரை, இந்த சூப் விஷயத்தைக் காந்தி சொல்லவேயில்லை. நேர்மை, வாய்மை, பிடிவாதம், முன்கோபம் கொண்ட மனிதனிடம் மறைந்திருந்த காதலை பா எப்படியோ கண்டுபிடித்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் வாழ்க்கை முழுதும் வளைந்து கொடுத்திருக்கிறார்.

காந்தியுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் சேர்ந்திருந்த மகாதேவ் சொல்கிறார்:

” To live with a Saint in Heaven
Is a bliss and a glory
But to live with a Saint on earth
is a different story”.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s