கூகி வா தியாங்கோ கென்யாவில் பிறந்தவர். பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் குடிபுகுந்தவர்.
அட்வுட்டைப் போலவே ஒவ்வொரு முறையும் இவருக்கு நோபல் பரிசு இந்தவருடமாவது கிடைத்துவிடும் என்று பலர் நம்புகின்றனர்.
ரிஷான் இலங்கையைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கவிஞர். மொழிபெயர்ப்புகளுக்காகப் பல விருதுகளை வென்ற இவர் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குத் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார்.
நான்கு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. நான் வாசித்த வகையில், தியாங்கோவின் சிறுகதைகள் சுதந்திரப் போராட்டம், நிலத்தை அபகரித்தல், மதமாற்றம், கல்வி, காணாமல் போதல் போன்ற கருக்களைச் சுற்றியே அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பும் விதிவிலக்கில்லை. ரிஷான் நான்கு கதைகளுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும் வகையில் தேர்வு செய்திருக்கிறார்.
கறுப்புக்குருவி மற்ற மூன்றிலிருந்தும் பெரிதும் வித்தியாசப்படும் கதை. கீழை நாடுகளின் நம்பிக்கைகளில் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் இருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இந்தக் கதை பித்ரு சாபம் என்று நாம் சொல்வதைப் பார்வையாளனின் கோணத்தில் சொல்கிறது. புதிதாக மதம் மாறிய கிறிஸ்துவனின் பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் தீவிரம் போப்பை விடப் பலமடங்கு உயர்ந்தது.
கென்யாவில் காலனி ஆதிக்கத்திற்கு முன்பும், இப்போதும் கூட Drought என்பது இயற்கையின் பழிதீர்க்கும் படலமாகவே இருந்து வருகிறது. முதல்கதை ” கோடையோடு போனவள்” பஞ்சத்தின் தீவிரத்தைச் சொல்லும் கதை. உயிர்த் தியாகம் ஆப்பிரிக்க மனநிலைக்கும் ஆங்கிலேய மனநிலைக்குமுள்ள பெரிய வித்தியாசத்தைச் சொல்லும் கதை. தலைப்புச் சிறுகதையில் காணாமல் போனவன் பல வருடங்கள் கழித்து வருகையில் அவனுடைய பழைய உலகம் தலைகீழாக மாறியிருக்கிறது.
தியாங்கோவை இதுவரை படித்திராதவர்கள் அவரது நாவல்களில் ஆரம்பிக்கலாம். அவரது எல்லாக் கதைகளிலுமே ஏதோ ஒருவகையில் சுயசரிதைக்கூறுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கென்யக் கலாச்சாரம் அவரது சிறுகதைகள், நாவல்கள் எல்லாவற்றிலுமே ஊடுபாயும்.
அட்வுட், தியாங்கோ நோபல் பரிசு வாங்காமலே இறக்க நேர்ந்தால், அவர்களுக்குத் தனிப்பட்ட இழப்பு எதுவும் இருக்கப் போவதில்லை. ரிஷானின் மொழிபெயர்ப்பும், கதைகளின் தேர்வும் அருமை.
பிரதிக்கு:
Amazon.in
முதல்பதிப்பு 21 March 2023
விலை ரூ.49.