போர்க்கலை – யுவன் சந்திரசேகர்:
ஒன்றைச் சொல்கையில் சிந்தனை மாறி மற்றொன்றுக்குச் சென்று Jump cut techniqueல் கதைகள் எழுதுவது யுவன் சந்திரசேகரின் வழக்கம். எனக்கு அவர் கதைகளை வாசிப்பதில் பிடித்த அம்சமும் அது தான்.
ஒரு மறைந்த நண்பனின் நினைவில், இருவரும் எவ்வளவு வேறுபட்டு இருந்தார்கள் என்பதற்குப் போய், கடைசியாக அவன் கொடுத்த புத்தகம் குறித்த சிந்தனை, பின் கடைசியாய் வாசித்த புத்தகத்தில் மையம்கொண்டு நிற்கிறது.
கடைசியாக வாசித்த புத்தகம், கற்பனை தன் வரலாறு புத்தகம். கற்பனைப் புத்தகத்தில் வரும் கற்பனைப் பாத்திரமான குத்துச்சண்டை வீரனின் அனுபவங்கள் பரவலாகக் கதை முழுதும் வந்திருக்கின்றன.
கடைசியில் கதைசொல்லியும், அந்தக் குத்துசண்டை வீரனும் ஒரு புள்ளியில் ஆழ்மனத்தின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
கதை புது யுத்தியில் நன்றாக வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் Sydney Sheldon கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதிய A Stranger in the Mirror ஒரு வணிகக்குப்பை என்று ஒரு வரி வருகிறது.
Sydney Sheldon classic writer இல்லை என்பது இறக்குமுன் அவருக்கே தெரிந்திருக்கும். அவரது மொழிநடை வேகத்திற்கு தமிழில் எழுதுபவர் என்று எத்தனை பேர் இருக்கிறார்கள்! இன்னொன்று வாழ்க்கையை வெற்றி கொண்டோம் என்று நினைக்கும் இருவரைப் பார்த்துக் காலம் நகைப்பது அந்தக்கதைக்கரு. வணிகக்குப்பைக்கான கரு இப்படித்தான் இருக்குமா? புத்தகக்கண்காட்சிகளில் இந்த நூல் ஐம்பது ரூபாய்க்குக்கூட கிடைக்கும். வாசித்துப்பின் நான் சொல்வதில் முரண் இருந்தால் சொல்லுங்கள். இவ்வளவிற்கும் இது அவருடைய ஆரம்பகால நாவல். அடுத்ததாக செஸ்ஸில் ஆறு மூவில் தோற்கடித்ததாக ஒரு வரி வருகிறது. Fool’s mate தவிர மற்றவற்றிற்கு குறைந்தது பத்து Moves வேண்டும் என்று நினைவு. எனக்கு நினைவுப்பிசகு, ஆறு தான் சரி என்றாலும் சொல்லுங்கள்.
பத்மினிக்கும் பொடியன் குஞ்சுவிற்கும் இருக்கும் உறவும், அது கதைசொல்லிக்கு ஆழ்மனதில் இருந்த எரிச்சலின் வெளிப்பாடாக செஸ் விளையாட்டு அமைவதும் நுட்பமான விஷயங்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பிற்குத் தான் எல்லோரும் ஏங்குகிறோம், நம்மால் யாருக்கும் அதைத் தர இயலாது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டபின்னும்.