ஆசிரியர் குறிப்பு:
குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். நாகர்கோவிலில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார். மர்மரியா
இவருடைய முதல் நாவல்.
கன்னி நாவலில் கூர்ந்து பார்த்தீர்களென்றால் அமலாவிற்கும் சாராவிற்கும் இருக்கும் அளவுக்கதிகமான ஒற்றுமைகள் தெரியும். அது ஏன் என்ற கேள்வி சாரா உண்மையில் யார் என்ற கேள்வியில் கொண்டு நிறுத்தும். நாவலின் கடைசிப் பகுதியில் அந்த மொழி கொள்ளும் வீரியம் நம்மைத் திசைதிருப்பும். பிரதிசொல்வதைத் தாண்டியும் நம்மைப் பயணம் செய்யவைக்கும் நாவல்கள் தமிழில் குறைவு.
மர்மரியா நாவலில் ஒருவனே கதைசொல்லி. கதை முழுதும் அவனே. அவனது பெயரை அவன் குறிப்பிடவில்லை. அவனது நினைவுகளில் இருந்து, அவன் சொல்லும் விஷயங்களே இந்த நாவல். அந்த நினைவுகள் அறுந்து அறுந்து ஒரு கோர்வையின்றி எங்கெங்கோ சென்று வரும். ஏனென்றால் அவன் ஒரு மனநோயாளி. அது போக அவன் சொல்லும் கதையில், உண்மைகள், மனப்பிறழ்வில் அவன் நடந்த விஷயங்களாகக் கற்பிதம் செய்தவை இரண்டுமே சாயல் இழந்து ஒன்றாகவே வரும்.
அக்காவை மட்டும் எடுத்துக் கொண்டால் அவனது Incest feelingsக்கு அவன் கதை வடிவம் கொடுப்பது புரிகிறது. அதே போல் அவள் காணாமல் போனது அவனை அதிக அளவில் பாதிக்கிறது. அவள் தன்னைக் கொன்றாளோ இல்லையோ இவனது கற்பனைகளைக் கொன்று விடுகிறாள்.
பைத்தியக்காரனின் பேச்சு எப்படி சம்பந்தமில்லாது இருக்கிறதோ, போலவே, மொழியும். எந்தத் தமிழ் நாவலிலும் இவ்வளவு கெட்டவார்த்தைகள் (Profanity) இருந்து நான் பார்த்ததில்லை. எந்த நேரத்திலும் வாசித்துக் கொண்டிருக்கும் என்னையும் ஏதாவது கெட்டவார்த்தையில் திட்டுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மனச்சிதைவு அடைந்தவன் நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவான் என்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்?
இந்த நாவல் குடும்ப அமைப்பை, அரசியலை, கல்விமுறையை, பாலியலின்பம் கொடுத்துக் காரியத்தை சாதிப்பவர்களை, நிஜவாழ்வின் Ironiesகளை என்பது போல் பலவிஷயங்களை விமர்சனம் செய்கிறது. குமரி வட்டார மொழியில் இருந்து சற்றே விலகி கொச்சையான மொழி
பயன்படுத்தப்படுகிறது. சர்ரியல் நாவலுக்கான அனைத்துக்கூறுகளையும் கொண்ட நாவல் இது. எளிய வாசிப்பிற்கோ, எல்லோரும் வாசிப்பதற்கோ உரித்தான நாவலல்ல இது. முதல் நாவலில் முழுக்கவே பரிட்சார்த்தமான படைப்பைக் கொண்டு வரவே துணிச்சல் வேண்டும். அதுவும் இது போன்ற படைப்பிற்குத் துணிச்சலைத் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது. ஆனால் ஷைலினுக்கு ஒரு வார்த்தை, இது போன்ற பாணி நாவல்கள், எழுத்துலக வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே எழுதப்பட வேண்டும். ஷைலினுக்கு Hysterical realism நன்றாக வரும் என்று எனக்குத் தோன்றுகிறது. தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுகள்.
பிரதிக்கு:
அடையாளம் 94447 72686
முதல்பதிப்பு 2022
விலை ரூ. 130.