பின் கதவையும், முன் கதவையும் தாளிட்டாகி விட்டது. ஜன்னல்களையும் கூட மூடியாயிற்று. இனி காற்றும் உள்ளே நுழைவதற்கில்லை என்று நிம்மதியாகத் தூங்கிய சமூகம் ஒன்று இருந்தது. இப்போது இரவு ஒருமணிக்கு போனில் வந்து விழும் செய்தி என்னவாக இருக்கும்? பார்க்கவா இல்லை வேண்டாமா?
ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து இதை யோசித்துப் பாருங்கள். தினம் சமைத்ததைச் சாப்பிட்டு ஒரு வார்த்தை பேசாது, முகத்தைப் பாராது தூங்கிப் போகும் கணவன். காலை வணக்கம் இரவு வணக்கம், இடையில் சாப்பிட்டீர்களா? உடல்நலம் பரவாயில்லையா என்று ஒரு மறுமொழி செய்யாத போதிலும் அக்கறை காட்டும் அந்நியன். கதவுகளை முன்போல் மூடுவதற்கில்லை. முன்பின் தெரியாத ஒருவனிடம் இருந்து வரும் தொடர் செய்திகளால் அலைக்கழிக்கப்படும் ஒருவன் குறித்த கதை இது.
அடுத்தது நவீன யுகத்தில் நம் குறித்த அந்தரங்கமான விஷயங்கள். நீ எங்கு வசிக்கிறாய், யாரெல்லாம் உன்னுடன் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும், என்ன செய்யப் போகிறேன் பார் என்று மிரட்டல் வந்தால், நம் மனக்கண் முன் எப்போதோ சினிமாவில் பார்த்த வெள்ளைத்துணியால் வரிசையாக மூடப்பட்ட சடலங்களுடன் நம் வீட்டாரை இணைக்கும் காட்சி ஓடும். ரிலையன்ஸ் போன்காரனிடம் நம் ஆதார் குறித்த அத்தனை தகவல்களும் இருக்கையில் பாதுகாப்பு என்பது எங்கே?
குழந்தையை யார் கூட்டிச் சென்றார்கள் தெரியவில்லை என்று பள்ளியில் இருந்து விடாது போன் செய்கிறார்கள். இவனது போனில் சார்ஜ் தீர்ந்து Off ஆகிவிடுகிறது. இவன் குழந்தையுடன் Parkல் நேரத்தைக் கழித்து (அந்நியனிடம் இருந்து வந்த செய்திகளால் ஏற்பட்ட மனக்கிலேசத்தைக் குறைக்க) வருவதற்குள் மனைவி பதறி விடுகிறாள். இவன் அநாமதேயச் செய்திகளைப் பற்றிக் கூறும் போது அவள் அதற்கு எதிர்வினை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இது தான் இன்றைக்குப் பெரும்பாலான வீடுகளில் தாம்பத்தியம். அவரவர் கண்ணோட்டத்தில் அடுத்தவரும் நடந்து கொள்ள வேண்டும். பல நாட்கள் கழித்து மனைவி அந்த செய்திகளை எந்த வரிசையில் வாசிக்க வேண்டும் என்று சொல்கிறாள்.
காபி சாப்பிடலாமா என்பது, நம்மைப் பற்றிக் கூறுவது, உன்னைப் பிடித்திருக்கிறது என்பது, நாம் சேர்ந்து வாழலாமா என்று கேட்பது, வேறுபக்கம் திரும்பி இருக்கும் சமயம் கன்னத்தில் முத்தம் கொடுப்பது ……….
இப்போது வரிசை மாறிக் கடைசியில் உள்ளதை முதலில் செய்தால் என்ன நிகழும்?
https://www.newyorker.com/magazine/2023/04/10/the-ferry-fiction-ben-lerner