வணிகவியல் பட்டப்படிப்பு, ஆசிரியர் பட்டயப் படிப்பும் படித்தவர். தற்போது தேனியில் வசிக்கிறார். கவிதை, கட்டுரை, நேர்காணல்கள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.
ஔவையின் கள் குடுவை தலைப்பு ஒரு Metaphor அல்லது மறந்து போன சமத்துவத்தின் குறியீடு. காலம் ஒரு பெரிய வட்டத்தில் மெதுவாகச் சுற்றி வந்து, பெங்களூர், மும்பை பார்களில் ஔவையின் கள் குடுவையைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது. ஒன்றாகக் கள்குடிப்பதில் சமத்துவம் இல்லை, ஆனால் வந்த விருந்தினரை பாலினபேதம் பார்க்காது அக்கால மரபுப்படி உபசரித்ததில் சமத்துவம் இருக்கிறது. எனினும் இந்தத் தொகுப்பின் பெருவாரிக் கவிதைகள், சமஉரிமையையல்ல, தீராக் காதலை, உருகி வழியும் அன்பைச் சுற்றி வருபவை. பூனைகளும், புலிகளும் கால்நகச் சத்தம் எழாது மென்மையாய் கால்களை பதித்துக் கவிதைகளில் நடக்கின்றன.
பெண்ணுடல் எனும் பெருவெளி குறித்து எவ்வளவோ பேசலாம். அன்பு 90% ஆளுகை 10% இருந்தாலே போதும். தவறான புரிதல்களால் இங்கே ஆக்ரோஷம் 90% என்பதே ஆண்மை எனக் கற்பிக்கப்படுகின்றது. ஆனால் ……..
” பெண்ணுடலைத் தனியே
சந்திக்கும் வல்லமை இங்கே
எவருக்குமில்லை”
பெண்ணின் கண்ணீர் ஒரு ஆயுதம் என்று எல்லோரும் சொல்வது. இவர் அதைக் கத்தியாக்கியிருக்கிறார். ஆனால் கடைசி இருவரிகளில் ஆழமான உள்ளர்த்தமும், அழகும் ஒளிந்திருக்கின்றன.
” அம்மா ஒரு கத்தி வைத்திருந்தாள்
அவ்வப்போது உப்பால் கழுவுவாள்,
அப்பா அதைப் பார்த்துக்கொண்டே இருப்பார், உப்பும் கரைந்து கொண்டே இருக்கிறது”
மதுமிதாவை எடுத்து, மதுமிதாவைத் தேய்த்து……….. என்று ரகுபதியின் உலகம் மதுமிதாக்களால் நிறைந்தது போல், இவ்வுலகம் அம்முக்களால் நிறைந்தது. எத்தனை எத்தனை அம்முகள். உறக்கம் வரா நள்ளிரவில் உட்பெட்டியைத் தட்டுபவனுக்கு எல்லாப் பெண்ணின் பெயரும் அம்மு தான்.
” ஒரு அம்முவின் நினைவுகளை
நினைக்கப் பெறாமல்
எம்மார்க்கமும் கடந்து போகுதல் எளிதன்று”
தொகுப்பின் கவிதைகளில் ஒரு தேடல் ஒளிந்திருக்கிறது. நினைவுகளைக் கைக்குள் இறுகமூடி வைத்த மிட்டாய் போல் வைத்திருந்து, சிறிது நேரம் கழித்து இருக்கின்றதா என்று பார்க்கத் திறந்து, மிட்டாயைக் கைமாற்றி, கசிந்த துளியை ருசிக்கும் இலாவகம் இந்தக் கவிதைகளில் தெரிகிறது. அம்மு ராகவ்விற்குக் கவிதைகள் அகவெளிப்பாடுகள், உணர்வுகளின் வடிகால்கள். எவ்வளவு வளர்ந்த பெண்ணிடமும் ஒரு குழந்தை ஒளிந்திருப்பாள். அவள் சொல்லும் கவிதை இது:
” அலைகளில் அவ்வப்போது கால்நனைத்து
விளையாடவாவது
இங்கொரு கடல் இருந்திருக்கலாம்
கடலற்ற ஊரில்
கடல்காரன் சொல்லும்
கடல் கதைகளின் மீது
நான் ஒரு கப்பலில் பயணிக்கின்றேன்.”
கவிதைகள் அழகு, உணர்வின் மொத்தத் தாக்கத்தைக் கடத்துதற்கு சிறந்த சாதனம் என்பதில் ஐயமில்லை. மனதுக்குள் சட்டென்று வந்த வரிகளை சாம்பார் கொதிப்பதற்குள் குறித்து வைத்துவிட்டுப் பின் மெதுவாகச் செம்மைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பெண்கள் சிறுகதைகளில் நுழைய வேண்டிய அவசியம், வேறெப்போதையும் விட இப்போது அதிகமாக இருக்கிறது. பெண்ணுலகம் பற்றித் தைரியமாகச் சொல்லப்படாத விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. பொதுவான ஒன்றையே ஆண் பார்க்கும் பார்வை வேறு, பெண் பார்க்கும் பார்வை வேறு. அம்மு மட்டுமல்ல, மற்ற கவிஞர்களும் கூடக் கவிதை எழுதத் துடிக்கும் கைகளை சற்றே அதட்டி அவ்வப்போது கதைகள் எழுத ஆரம்பித்தல் காலத்தின் தேவை என்றும் சொல்லலாம்.
பிரதிக்கு:
வாசகசாலை 99426 33833
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 150.