ஆசிரியர் குறிப்பு:
தஞ்சை மண்ணில் பிறந்து, வளர்ந்து தற்போது சிங்கப்பூரில் பணிபுரிபவர். இடையர் குலத்தில் பிறந்து, தொகுப்பு முழுக்க அவர்களது வாழ்வியலைச் சொல்லும் முதல் கவிதைத் தொகுப்பு இதுவாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன்.
கவிதைகளில் படிமங்கள் அழகு, இடைவெளிகள் அழகு, மாறுபடும் கோணங்கள், வார்த்தைகளின் இடப்பெயர்ச்சி, நவீனத்துவம் என்று எல்லாமே அழகு. நல்ல கவிதைகள் ஏதோ ஒரு அடித்தளத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு அழகாகக் காட்சியளிப்பவை.
வாழ்வியலைச் சொல்லும் கவிதைகளுக்கு எந்த அலங்காரமும் தேவையில்லை. முகத்தைக் கழுவி நீர்சொட்ட வந்து, வரவேற்பறை அந்நியனைப் பார்த்துத் திடுக்கிடும் பெண்ணின் அழகில் இருக்கும் அதே வசீகரம்.
கீதாரிகளின் வாழ்க்கை வீட்டை குழந்தைகளை விட்டு, ஆடுகளுடன் மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் சென்று, மூன்று அல்லது ஆறுமாதங்கள் கழித்து வருவது என்பது எத்தனைபேருக்குத் தெரிந்திருக்கும். பல நாட்கள் கழித்துப் பார்க்கும் பிள்ளைகளின் தவிப்பு சில கவிதைகளில் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது.
” அப்பா போனதும் அழுக்குச்ட்டையை
நான் மாட்டிக் கொள்வேன்
அப்பாவின் வியர்வை வாசம்
பீர்க்கம் பூவைப் போலா இருக்கும்.
அப்பாவின் சட்டையைப் போட்டதுமே
ஆணில்லா வீட்டில்
நான் ஆம்பளையாக மாறிவிடுவேன்”
அகத்திணை கவிதைகளில் வாழ்வாதாரத்திற்கு ஓடுதல் பெரும் நேரத்தைத் தின்று தீர்த்து மிஞ்சிய துளிகளுக்குள் காதல் நெருப்பை மூட்டிக் கொள்ள வேண்டியதாகிறது. ஆனால் ” நீ விளைந்த நெல்கதிரோரம் நில், நான் கடலைச்செடி அருகே நிற்கிறேன்” என்று வெம்மைக்குக் குறைவில்லை. குசேலன் கட்டிக் கொண்டுவந்த அவலில் ஒளிந்திருந்த பிரியம் இந்தக் கவிதையில் விரிகிறது:
” மூங்கிக் கம்பிற்குத் தாலி கட்டிக்கொண்டவளிடம்
பெரிதாய் என்ன எதிர்பார்க்க முடியும்?
நத்தைக் கூட்டைத் தூக்கிச் சுமப்பது போல
பனை ஓலைக்கூட்டை
தூக்கிக் கொண்டு நிலமெல்லாம்
பச்சை தேடி அலையும் போது
தன் பச்சை இது தான்
தன் காடு இது தான்
என்றுணர்ந்து
இடையன் பின்னே திரியும்
பெருங்காதலைத் தவிர….!”
நேரில் பார்த்த வாழ்க்கையை எழுதுகையில் ஆன்மாவின் ஒளி கூடியிருக்கும். மற்றவை எல்லாம் படிக்காத புத்தகங்களைக் குறித்துப் பெருமைக்காக நாலுவரி எழுதுவது போல.
” நிறை சினை ஆடு
குட்டியை ஈன்றுவிட்டால்
இளங்கொடி தின்ன ஆட்டின் அத்தனை
முட்டுகளையும் வாங்கிக் கொண்டு
சுத்திச் சுத்தி வரும் கிடைநாய் போல”
” கிடை ஆட்டை வழி நடத்தும்
நாலைந்து கொடி ஆடுகள்
செம்பழுப்பு மலரினூடே
கருப்பும் வெள்ளையுமாய்
செம்போரும் சாம்பலுமாய்ப் பூத்திருக்கும்”
“ஆடுகளை விற்றுக் கட்டிய
காரைவீட்டிலும் மாடி வீட்டிலும்
பரணியில் கொத்தாகத் தொங்கவிடப்பட்ட
கிணுக்கு மணிக்குள் தொங்கிக்
கொண்டிருக்கிறது
நிலத்தை அளந்து திரிந்த
கிடை ஆடு மாடுகளின் நெடிவாசம்”
இடையர்களின் உலகத்தால் நிறைந்திருக்கிறது இந்தக் கவிதைகள். என்றேனும் கறிக்குழம்பு வைத்தால் கூட குற்றஉணர்வு இல்லாது சாப்பிட முடியாத இடையர்கள். அவர்களது வாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகள், ஆடுகள் அவர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, பெண்கள் இடையர்களுக்குத் துணைசென்று நாடோடி வாழ்க்கை வாழ்வது, அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள், இடையிடையே கொஞ்சம் காதல் என்று வாழ்வியலை வரிகளில் கொடுத்திருக்கிறார். இப்போது எல்லாமும் மாறி விட்டது. நினைவுகளில் நிற்கும் வாழ்வை ஆவணப்படுத்தக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தமிழில் கிடை, கீதாரி என்ற இருநாவல்கள் உடன் நினைவுக்கு வருகின்றன. கலை வடிவில் அவையிரண்டும் சிறந்தவை. ஆனால் அவற்றை விட அசல் தன்மை கொண்டதாக இத்தொகுப்பு எனக்குத் தோன்றுகிறது.
பிரதிக்கு:
யாப்பு வெளியீடு 90805 14506
முதல்பதிப்பு ஜூலை 2022
விலை ரூ. 90.