கரிசல் எழுத்தின் முன்னோடிகளில் பொன்னீலனும் ஒருவர். இந்த நாவல் எழுபத்தாறில் வெளியாகியது. இவரது புதிய தரிசனங்கள், இவரது மாஸ்டர்பீஸ். எண்பதுகளின் ஆரம்பத்தில் கரிசலை வாசித்தேன். அப்போது வாசிக்கையில் எனக்கு கரிசல் வட்டார மொழி கொஞ்சம் கடினமாக இருந்ததாக நினைவு. கண்ணப்பன் கரிசல் கிராமம் ஒன்றிற்கு வாத்தியாராக வரும் பொழுது, நாமும் நாவலில் நுழைகிறோம். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அந்த கிராமத்தின் நடுவில் நம்மைப் பார்வையாளராக்கிவிடும்.
பலகாலமாய் மறுவாசிப்பு செய்யாத நாவல்களிலும் சில பெண் கதாபாத்திரங்கள் மறக்கமுடியாது நினைவின் அடியாழத்தில் இருக்கும். கரிசல்- பொன்னி, வீரபாண்டியன் மனைவி- ஊர்மிளா, குறிஞ்சிமலர் – பூரணி………….. தோன்றியஉடன், கண்ணப்பனைப் பார்க்க அவன் வீட்டுக்கு மூக்காயியைக் கூட்டிக் கொண்டு செல்வது, முதலில் மாஸ்டரைத் தவிர்க்க முடியாமல் அழுவது பின் எதிர்ப்பது,
ராமசாமி இரவில் வந்து தொடுகையில் பேசாமலிருப்பது, பாதி கடித்த பண்டத்தைக் கண்ணப்பனுக்குப் பரிமாறுவது, கண்ணப்பன் கேட்ட ஒரு கேள்விக்கு பலபெண்களைப் போல் இல்லவே இல்லை என்று சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொள்வது என்று பொன்னி இன்னும் நினைவில் இருக்கிறாள்.
எழுபதுகளில் ஒரு கிராமத்தில் என்னவெல்லாம் நடக்குமோ அதுவெல்லாம் நாவலில் நிகழ்கிறது. ஊர் மக்களைச் சுரண்டிச் சொத்து சேர்க்கும் மாஸ்டர். மகனது மனைவியையும் கூட விடுவதில்லை. அடியாட்களை வைத்துக் கொண்டு யதேச்சதிகாரம் செய்கிறார். ஆனால் இது நாற்பதுகளின் காலகட்டம் இல்லை, அத்துடன் கண்ணப்பன் வாத்தியாரும் ஒரு தூண்டு சக்தியாக மாறுகிறார். புரட்சி வெடிக்கிறது.
கரிசல் நிலத்தில் இருந்து மக்களை உன்னிப்பாகக் கவனித்து எழுதப்பட்ட நாவல் இது என்பது வாசிக்கையில் தெரிந்துவிடும். அப்போது எழுத்தாளர்கள் நூலுக்காக உழைக்க வேண்டியதாக இருந்தது, வாசகர்களும் புத்தகங்களைத் தேடித்தேடிப் படிக்க வேண்டியதாயிருந்தது. இணையம் வந்த பிறகு எழுத்து, வாசிப்பு இரண்டுமே எளிதாகிவிட்டது.
வட்டார வழக்கை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது கடினம். Aaye, Elle என்பது போன்ற Slangsஐ இணைத்து மொழி பெயர்த்திருக்கிறார் பிரியதர்ஷினி. ஏறக்குறைய அரை நூற்றாண்டு கழித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது, அதுவும் சொந்தப் பேத்தியால் மொழிபெயர்க்கப்படுகிறது என்பதை விட ஒரு எழுத்தாளருக்கு வேறென்ன நிறைவோ, மகிழ்ச்சியோ இருக்க முடியும்?
பிரதிக்கு:
பென்குயின் இந்தியா
முதல்பதிப்பு 2023
விலை ரூ. 699.