நல்ல திரைப்படங்களைக் குறிப்பிட்டு நண்பர்கள் பரிந்துரையை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். IPADம், முக்கிய
OTTகளுக்கான சந்தாவும், Fire Insuranceக்குக் கட்டப்பட்ட பணம் போல் வீணாகப் போகிறது.
அழகான மனைவி கொண்டவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டதெல்லாம் இப்போது நூறுசதவீதம் மடைமாற்றப்பட்டு அதிக படங்கள் பார்ப்பவர் மேல் மையம் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் வாசித்தது போக ஐம்பது புத்தகங்களேனும் IPADல் குடிபுகுகின்றன. படங்கள் பார்ப்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு Luxury ஆகி விட்டது.
பள்ளியிறுதி, கல்லூரி படிக்கையில் அம்மாவின் கட்டுப்பாடு அதிகம். இரவு எட்டு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும். எட்டு மணிக்கு மேல் வெளியில் இருக்கும் பிள்ளைகள் கண்டிப்பாகக் கெட்டுப் போவார்கள் என்று அசாத்திய நம்பிக்கை கொண்டவர். ( என்னுடைய எல்லாக் கெட்ட காரியங்களையும் அதிகபட்சம் மாலை ஐந்து மணிக்குள்ளேயே செய்து முடித்திருக்கிறேன்). இரவுக்காட்சி பார்த்த சொற்ப திரைப்படங்களில் ஒன்று தேவதாஸ்.
கஞ்சா இன்று தான் ஐரோப்பாவின் சிலநாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. மதுரையில் எழுபதுகள், எண்பதுகளிலேயே அது சட்டபூர்வமாக்கப்பட்டுவிட்டது. தேவதாஸை பார்ப்பவர் யாருமே முதல்முறை பார்ப்பவர்கள் அல்லர், அதே போல் கஞ்சா குடிக்காது படம் பார்த்து வருவது வெகு சிலரால் மட்டுமே முடியும். கடைசிப்பாட்டு உலகே மாயம், அதற்காகக் குடும்பத் தலைவனின் பொறுப்போடு கடைசி சிகரெட்டைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். இரண்டாவது படம் வீரப்பாண்டிய கட்டபொம்மன். விளாங்குடி டூரிங் தியேட்டருக்கு இருபது பேருக்கு மேல் போனோம். அதில் ஏராளமான நடிகநடிகையர்கள். அதில் ஒவ்வொருவரையும் பற்றி சிறுகுறிப்பை சுவாரசியமாகச் சொன்னவர் தான் பின்னாளில் சினிமா எனும் பூதம் எழுதிய R P ராஜநாயஹம்.
ஓளங்கள் என்றொரு மலையாளப்படம். அதற்குத்தான் அந்நியப்பெண்ணுடன் முதன் முதலாகத் திரையரங்குக்குப் போனது. பத்தாவது நாள் கூட்டம் குறைந்திருக்கும் என்று போனால், காற்றாடாமல் ஓரளவு கூட்டம். நுழைந்து இருக்கையில் அமர்ந்து விட்டு சுற்றுமுற்றும் பார்த்தால், சொந்தக்காரப் பெண் ஒருவர் அவரது தோழியுடன் வந்திருந்தார். அவரது வருகை ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போல் மொத்த மகிழ்ச்சியையும் கெடுத்து விட்டது. Cat and Mouse situation. என்னுடன் வந்த பெண்ணும், சொந்தக்காரப் பெண்ணும் இருவருமே இப்போது உயிருடன் இல்லை. இது போன்ற நினைவுகள் மேலெழும்பும் போது, அதிகம் ஓடிக்களைத்த உணர்வும் கூடவே எழுகிறது.