ஆசிரியர் குறிப்பு:

கிழக்கிலங்கையின் பாண்டிருப்பில் பிறந்தவர். கலை, இலக்கியம், ஊடகத் துறையில் 48 வருடங்களாக இயங்கி வருபவர். சிறுபத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது திரையுலகைப் பற்றிய நினைவுப்பயணக் கட்டுரைகள்.

ஒவ்வொருவரை நினைக்கையில் ஒவ்வொருவருக்கும் ஒருகாட்சி மனதில் வரும். எனக்குக் காஞ்சனா என்றால், முத்துராமனின் வேடம் கலைந்ததும் குத்து டான்ஸ் ஆடும் காஞ்சனா. கலர் படங்களிலே அதிகம் வந்ததால் கலர் காஞ்சனா என்று அழைக்கப்பட்ட, இவரது காதல் ஜோதி அணையாதது பாட்டின் முகபாவங்களையும் மனதோரம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

தனிப்பட்ட சினிமா அனுபவங்கள், அஞ்சலிகள், பத்தி எழுத்து, அயல் சினிமா என்று நான்காகப் பிரிக்கப்பட்ட நூல் இது. அஞ்சலிகளுக்கு அதிகப் பக்கங்கள். அஞ்சலி என்றால் வழக்கமான ஒன்றல்ல, அவர்கள் குறித்த நினைவுகள். அடிமைப்பெண்ணில் எம்.ஜி.ஆர் வரும்போது ஜெயலலிதா எழுந்து நிற்காதது, இவருக்குப் பிடித்த TMS பாட்டை அவர் நினைவுகூற இயலாது போவது, கண்ணதாசன் தாமதமாக வந்துவிட்டு, ராஜா படப்பாடலைச் சொல்லிக் கூட்டத்தை சமாதானப்படுத்துவது, MSV இவர் மொபைலை உற்றுப் பார்ப்பது என்பது போன்ற சுவாரசியமான தகவல்களை உள்ளடக்கியது.

தமிழ் சினிமாவை நேசித்த சமூகம் ஒன்று இருந்தது. அதன் பின்னரே தமிழ் சினிமா பார்ப்பது பாமரத்தனம் என்று அரைகுறை அறிவுஜீவிகள் உறுதியாக நம்ப ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட ஐம்பது வருட நினைவுகளை சினிமாவுடன் இணைத்துக் கொடுத்திருக்கிறார். சினிமா பாடல் வரிகள் எத்தனையோ காதல்களுக்கு உதவியிருக்கின்றன. அந்த வகையில் இது ஒரு Nostalgic பயணம்.

குறைவாக எழுதுபவர் உமா வரதராஜன். பத்தியோ, கட்டுரையோ எதை எழுதினாலும்
சலிப்பே ஏற்படுத்தாத எழுத்து இவருடையது. ஒரு Subtle comedy இவரது எழுத்துகளின் ஊடே பிரயாணம் செய்து கொண்டே இருக்கும். நினைவில் இருந்தே எல்லாக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தாமரைநெஞ்சத்தில் சரோஜாதேவிக்கு என்ன பெயர் என்றால் எனக்குத் தடுமாறுகிறது, அந்தத் தடுமாற்றம் இவருக்கில்லை. காலவெள்ளத்தில் சில முகங்கள் கரைந்து போயிருக்கலாம், சில பாடல்களைக் கேட்கையில் அவை நினைவுக்கு வரலாம், அப்போது ஏன் சிரிக்கிறாய் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது போகலாம், அது போன்ற ஒரு அனுபவத்தை இந்தப் புத்தகமும் உங்களுக்குத் தரலாம்.

பிரதிக்கு:

காலச்சுவடு 4652- 278525
முதல்பதிப்பு ஜூலை 2019
விலை ரூ. 240.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s