ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும் – கார்த்திகா முகுந்த்:

இந்தக்கதை ஒரு வித்தியாசமான முயற்சி. முழுக்கவே Fantasy கதையாக இல்லாமல் உண்மையில் நடந்தவைகளும் இடையிடை கலக்கின்றன. Going into shell என்பதும்
claustrophobia வும் Mutually exclusive, ஆனால் அது இந்தக் கதையில் சாத்தியமாகிறது.
அவள், கணவர், மகள் வரை போவதில் அழகியல் ஒளிந்திருக்கிறது. பாராட்டுகள் கார்த்திகா.

கொண்டலாத்தி – ராஜேஷ் வைரபாண்டியன்:

பருவ வயதில் பார்க்கும் பெண்கள் எல்லோருமே யட்சி தான். ஞாபகத்தில் முள்ளாய் குத்த என்ன நடந்தது? முழுக்கவே ப்ளாஸ்பேக் கதையாக இருந்தாலும் நன்றாக வந்திருக்கிறது. இப்படித்தான் ஆதவனின் ஒரு கதையில் விசில் சத்தம் நின்று போகும்.

நட்சத்திரேயன் – ஆர். காளிபிரஸாத்:

வெளிப்பார்வைக்கு அல்லது ஒரு நிகழ்வில் எதையும் முடிவுசெய்ய முடியாது என்பதைச் சொல்லும் கதை. முழுக்க உரையாடல்களில் நகரும் கதையில் முதலில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு அதை உடைப்பது சிரமம். காளிபிரஸாத் இந்தக்கதையில் எளிதாகச் செய்திருக்கிறார்.

ருட்டியாகிய நான் – கலைச்செல்வி:

இந்தக் கதையை முதலில் வாசித்த போது எனக்குத் தோன்றியது, இது நாவலுக்கான கரு என்று. ஒரு Historical fiction எப்படி எழுதப்பட வேண்டுமோ, அதற்கான இலக்கணப்படித் தமிழில் எழுதப்பட்ட கதை இது. பெண்களை வரலாறு பெரிதாகக் கண்டுகொள்வதேயில்லை. அப்படி கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்தக் கதையில் உயிர் கொடுத்திருக்கிறார் கலைச்செல்வி. இவரை காந்தி கதைகள் எழுதுபவர் என்று சொல்வது என்னவொரு அக்கிரமம்!

ருட்டி, பார்ஸி செல்வந்தர் வீட்டில் பிறந்து, சிறுமியாய் இருக்கையிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து, இருபத்திநான்கு வருட இடைவெளி கொண்ட ஜின்னாவை மணமுடித்து, சில மாதங்களிலேயே அந்த உறவுகசந்து, ஒரே மகளையும், கணவனையும் பிரிந்து, மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு, இனம்தெரியாத நோயால் முப்பது வயதுக்குள் உயிரை விட்ட பெண். அவரது கடைசி Depression மனநிலையைச் சுருக்கமாக இந்தக்கதையில் கொண்டு வந்திருக்கிறார் கலைச்செல்வி. இதில் வருபவர் எல்லோருமே Real people, சம்பவங்கள் உண்மை, சொல்லும் மொழி மட்டும் புனைவு. ருட்டிக்குள் இவரால் புக முடிந்திருக்கிறது என்றே நான் சொல்வேன்.

சரித்திரம் திரும்புகிறது. ஜின்னாவின் மகள்
Dina முஸ்லீம் அல்லாத ஒருவரை மணப்பதை ஜின்னா ஏற்றுக் கொள்ளவில்லை. ருட்டி தந்தை எதிர்த்ததைப் பொருட்படுத்தாது ஜின்னாவை மணம் செய்தது போலவே, Dina, Wadiaவை மணக்கிறார். அதற்கு முன்னான இந்த உரையாடலை நான் ஆயுளுக்கும் மறக்க மாட்டேன்;

ஜின்னா: உனக்கு இந்தியாவில் முஸ்லீம்களிலேயே கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள், நீ ஏன் முஸ்லீம் இல்லாத ஒருவனைக் காதலிக்கிறாய்?

Dina ; நீங்கள் ஏன் அந்த கோடிக்கணக்கானவர்களில் ஒருவரை காதலிக்காமல் இந்துவாகிய என் அம்மாவைக் காதலித்தீர்கள்?

ஜின்னா: அவள் மதம் மாறிய பின்புதானே மணந்தேன்!

தமிழ்வெளியின் இந்த இதழில் மதிப்புரைகள் அதிகம். Bookfair effect. ருஷ்டியின் சிறப்பான கட்டுரை ஒன்றை ச.வின்சென்ட் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் எவ்வளவு வாசிக்கிறார்! நம் ஆட்கள் ஒரு புத்தகம் வெளிவந்ததுமே I have arrived என்ற Boardஐ எல்லோர் பார்வைக்கும் வைத்து விடுகிறார்கள். லீ பார்க்கின் கவிதை ஒன்றை கார்த்திகா முகுந்த் மொழிபெயர்த்திருக்கிறார். ” தளைத்து வைக்கப்பட்டதெதுவோ அது அலையலையாகத் திரும்பி வரும்”. ஆஹா.
கட்டுரைகள், மதிப்புரைகள் தரமாக வந்திருக்கின்றன. நவீன கலை இலக்கிய இதழுக்கான அனைத்து உள்ளடக்கங்களும் தமிழ்வெளியில் இருக்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s