சின்னவயதில் இருந்தே இலங்கை என்றால் பெரிய இந்தியவரைபடத்தின் கீழ் மிகச்சிறியதாகப் பார்த்து, சிறிய தேசம் என்று மனம் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டது. முகநூலில் இலங்கைப் பயணத்திட்டம் சரியாக இருக்கிறதா என்று கேட்டு, நண்பர்களின் பரிந்துரைகளைப் பார்த்ததும் அந்தக் கற்பிதம் உடைந்து, கைதட்டி விழுந்த மைக்குடுவை தரையில் சிதறிய வரைபடம் போல் பெரிதாக ஒன்றை மனதில் வரைந்து கொண்டேன்.
பொதுவாகப் புத்தகங்கள் குறித்த பதிவுகளைத் தவிர வேறு எதுவும் முகநூலில் பதிவதில் எனக்கு விருப்பமில்லை. இலங்கையை அயல்தேசம் என்று சொல்வதற்கில்லை. நம்மக்கள் நிறைந்த தேசம். அடுத்ததாக, நல்ல பலசாலி, தனுஷ்கோடியில் இருந்து நீந்தியே இலங்கையை அடையும் தூரத்தில் தான் இருக்கிறது. பின் எதற்காக முகநூலில் பதிய வேண்டும்?
ஐரோப்பாவை விடுங்கள், இங்கிருக்கும் கம்போடியாவிற்கே ஏராளமானோர் போயிருக்க மாட்டார்கள். ஆனால் இலங்கை அப்படியல்ல. போகாதவர்கள் குறைவு. இப்போது போய்விட்டுத் திரும்பினால், ராவணன் தூக்கிச் சென்ற போது, சீதா பாதி சாப்பிட்டு நழுவிய கொய்யாப்பழம் இன்னும் அழுகாமல் இருக்கிறது, அதைச் சுற்றிக் கோயில் கட்டியிருக்கிறார்களே பார்த்தீர்களா என்று யாராவது மாமி என் மனைவியிடம் சொல்லக்கூடிய சாத்தியக்கூறுகளை நினைத்தாலே அச்சம் மேலிடுகிறது.
மும்பாயில் கொரனா தீவிரமாகி அங்கிருந்து
வரமுடியவில்லை. வெளியே செல்லவும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். உடன் இருந்த நண்பர் நெருப்பிலிட்ட புழுவாகத் துடித்தார். நான் ஒரு அறையை விட்டுக் கிட்டத்தட்ட ஆறுமாதம் வெளியே வரவில்லை. வேறு வேலையில்லாததால் உறங்கும் நேரம் போக மீதி எல்லாநேரமும் வாசிப்பு. என் மனைவிக்கு பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் எடுப்பதால் அயர்ச்சியூட்டும் பணி. இருந்தாலும் ஒரு நாள் விடுமுறை என்றாலும் வெளியே போக வேண்டும். பத்து தலைமுறையாக பகையாளியாக இருந்தவர்களின் தோப்பில் தனித்தனியாக வளர்ந்து, சந்தையில் மூட்டை அவிழ்க்கையில் உருண்டோடிச் சேர்ந்த இரண்டு நெல்லிக்காய்கள் நாங்கள். பார்க்கலாம், இலங்கை டூர் எப்படிப் போகிறதென்று.