ஆசிரியர் குறிப்பு:
வத்தளையைச் சேர்ந்தவர். பல காலம் சம்மந்துறையில் வாழ்ந்தவர். மருத்துவக்கல்வி பயின்று மருத்துவராகப் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர். இதற்கு முன் இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இது இவரது முதல் நாவல்.
இது பயிற்சி நாவல், போதுமான அடர்த்தியை அடையவில்லை, நாவலில் போதாமையை உணர்கிறேன் என்றெல்லாம் நௌஷாத் முன்னுரையில் கூறி இருக்கிறார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. பலகாலம் பார்த்த வாழ்வின் சாரத்தை, நாவல் தன்னுள் கொண்டிருப்பதால், மொழிநடை, யுத்திகள், திருப்பங்கள் என்ற எல்லாவற்றையும் மிஞ்சி நாவலின் அசல் தன்மை என்னைக் கவர்கிறது. ஏராளமான கிராமப்புற இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையை என்னால் இந்த நாவலில் காணமுடிகிறது. முழுப்புனைவு என்பது பித்தளை, கைகள் சோர புளிபோட்டுத் தேய்க்க வேண்டியதாய் இருக்கும். தங்கம் சற்று நிறம் மங்கினாலும் கவலைப்பட ஒன்றுமில்லை.
முந்தானையை சரியாகப் போடாமல், உம்மம்மாவிடம் பிரம்படி வாங்கும் பேகம் கதீஜாவிற்கு படிப்பதும், கள்ளங்கபடமில்லாது பழகும் அர்பாகானும் பிடித்த விஷயங்கள். இரண்டையும் அவளால் தொடர முடியாது என்பது அப்போது அவளுக்குத் தெரியாது. அப்பா குடித்து, சூதாடி எல்லாவற்றையும் இழந்ததால், நூறுமைல்கள் நடந்து கதீஜா இருக்கும் சாம்பல்மேட்டை அடையும் ஹாதி சுல்தான், காட்டை அழித்து விவசாய பூமியாக்க கடும் உழைப்பை சிந்துகிறான். விதி கதீஜாவிற்கும் அவளை விட இருபத்தைந்து வருடங்கள் அதிகமான ஹாதி சுல்தானுக்கும் முடிச்சுப் போடப் போகிறது. கதீஜாவின் சாமான்ய ஜீவிதம் ஆரம்பிக்கப் போகிறது.
தலைப்பிற்கேற்ப கதை முழுதும் கதீஜாவே. பிறந்ததில் இருந்து கடைசிவரை சிரமதசையில் மூழ்கி வாழும் வாழ்க்கை எதற்காக? அவளது தாய்க்கு நேர்ந்தது போலவே முதல் குழந்தை பிறந்ததும் உயிர் போயிருந்தால் அந்த அற்ப ஜீவிதமேனும் முடிவிற்கு வந்திருக்கும். கதீஜாவின் மூலமாக, அச்சமூகத்தின் விருப்பமில்லாத் திருமணங்கள், சொந்த வீட்டில் அவர்களது இடம், அடிஉதை வாங்கினாலும் வாழாவெட்டியாகி விடக்கூடாது என்பதில் அவர்கள் காட்டும் முனைப்பு என்பதெல்லாம் சொல்லப்படுகிறது.
இந்துக்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை போலிருக்கிறது முஸ்லீம்கள். ரோமம், காலடி மண்ணை வைத்துச் செய்வினை வைப்பது, சேவலை அறுப்பது, பேய்விரட்டுவது என்று எல்லாமே தாய் மதத்தில் இருந்து கொண்டு சென்றதா இல்லை ஏற்கனவே அங்கேயும் இருந்ததா தெரியவில்லை.
நாவலில் மற்றுமொரு முக்கியமான விஷயம் ஊரார் பேச்சு. எளிய மக்கள் ஊரார் பேச்சுக்கு அஞ்சி பார்த்துப் பார்த்து நடப்பதும், செல்வாக்குள்ளவர்கள் தோட்டக்காரனுடன் ஓடிய பெண்ணைக் கூட்டிவந்து பணக்காரனுக்கு மணமுடித்து வைப்பதும்,ஜாதி, மத, இனபேதங்களைக் கடந்து நடப்பவை. அங்கே அதே வர்க்கத்திற்குள் செய்யும் எதுவும் தவறில்லை.
எந்த ஆரவாரமுமில்லாது இயல்பான ஓட்டத்தில் செல்லும் நாவலிது. சில மெலோ டிராமாக்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதை எல்லாம் மறைத்து யதார்த்த வாழ்க்கை கண்முன் பிரம்மாண்டமாய் விரிந்துகொண்டே இருக்கிறது. கட்டிலில் ஆவி, வீடுகாலியானதும் மாமியார் சொந்த ஊருக்குச் செல்வது போன்று பல பூடகமான விஷயங்களையும் நாவலில் கலந்திருக்கிறார் நௌஷாத். எல்லாவற்றையும் விட கடைசிப்பத்தி, எதிர்பாராமல் அடிக்கும் மின்சாரஷாக்.
இந்துக்கள் பல முற்போக்கான விஷயங்களைப் பேசுவார்கள். ஆனால் ஏற்கனவே திருமணம் ஆன அல்லது இன்னொருவனுடன் வாழ்ந்த பெண் என்றால், அவள் இரண்டாவது மணத்திற்கு பெரிதாக சமரசம்செய்ய வேண்டி இருக்கும். காதலித்து மணந்தவர்கள் கூட சிறிதுகாலத்தில் சுயரூபத்தைக் காட்டுவார்கள். ஆனால் முஸ்லீம் பெண்களுக்கு அந்த சிக்கல் இல்லை. அதிகபட்சம் இத்தா- நான்கு மாதம் பத்துநாட்கள். மற்ற மதத்தினர் விட்டுக்கொடுக்காத விஷயத்தில் பெரும் போக்காக (முற்போக்கு) நடந்து கொள்பவர்கள், பெண்களுக்கான சுதந்திரம், சம அந்தஸ்து, அவளது ஆடை விஷயத்தில் தலையிடாது இருப்பது போன்றவற்றைக் கடைபிடிப்பதில்லை என்பதே இந்த நாவல் முடித்ததும் எனக்கு எழுந்த சிந்தனை.
பிரதிக்கு:
கஸல் பதிப்பகம் 94 770807787
இந்தியாவில் Commonfolks
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை இலங்கையில் ரூ.900
இந்தியாவில் ரூ. 220.