புத்தகங்கள் குறித்து எழுதியவற்றை, சின்ன வட்டத்திற்குள் அனுப்பிய போது, நண்பர்கள் இவையெல்லாம் யாருக்கேனும், என்றேனும் உபயோகப்படும், முகநூலில் பதியுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அப்படித்தான் அது புலிவாலைப் பிடித்த கதையாகிப் போனது. அது போல் தான் இப்போது இலங்கைப் பயணம் குறித்து எழுதுங்கள், யாருக்கேனும் உதவும் என்று சொல்கிறார்கள்.
என் நண்பர்கள் பலருக்கு, மதுரையில் இருந்து சோழவந்தானோ, திருமங்கலமோ செல்வதற்குள்ளேயே அதிசய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. இப்போது யோசித்துப் பார்த்தால், இத்தனை காலத்தில், இந்தியா முழுதும் சுற்றியும், நான்கு பேர் வியக்கும் அளவிற்கு சொல்வதற்கு எனக்கு எதுவும் நடந்ததாக நினைவிலில்லை. காமக்கடும்பசியில் கஞ்சிக்கின்றி அலைந்த காலத்தில், என் நண்பன் ஒருவன் சென்னையில் இருந்து மதுரை வருவதற்குள், பாண்டியன் எக்ஸ்பிரஸில் புதிதாக பார்த்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, One night standஆக முடிந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, பாதி குடித்த சிகரெட்டை அழுத்தமாக இழுத்ததில் வேகமாக நெருங்கி வந்த நெருப்பு என் உதட்டைச் சுட்டிருக்கிறது.
என் மேல் அதிக பரிவுகொண்ட நண்பர், பலரும் செய்வது போல் பார்த்த இடங்களுடன் சம்பவங்களை இட்டுக்கட்டி எழுதுங்கள் என்றார். லாஜிக்கலாக யோசித்தால், எழுதத் தெரிந்தால் நான் ஏன் நாள் முழுதும் புத்தகங்கள் வாசிக்கப் போகிறேன், நூல்களை எழுதிக்குவித்து என் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் வர வைத்திருக்க மாட்டேனா!
இந்தியாவில் Immigration எப்படி இருக்கும் என்ற அனுபவம் எனக்கில்லை. கொழும்புவில் Immigration counterல் இருப்பவர்கள் US அதிகாரிகளைப் போலவே முகபாவம் வைத்துக்கொண்டு, சைகை மட்டும் காட்டுகிறார்கள். இவ்வளவிற்கும் Visa on arrival facility இருந்தாலும் வருவதற்கு முன்னே Onlineல் Apply செய்து வாங்கியாயிற்று. விக்கிரமாதித்தன் சிம்மாசனம் போலிருக்கிறது. கொழும்பின் வெயில் சென்னை வெயிலுடன் போட்டி போடுகிறது. பெங்களூரின் அதிகாலைப் பொழுதுகள், உள்ளங்கை வியர்த்த பெண்ணின் தொடுதல் போல் சில்லென்று இருக்கும். எதனுடைய அருமையையேனும் உணர, அதை விட்டுத் தொலைவில் வர வேண்டியதாகிறது, தற்காலிகமாகவேனும்.