இலங்கை பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்து இருக்கிறது. கொரானாவிற்கு முன் முப்பது ரூபாய்க்கு விற்ற டீ இப்போது இருநூற்று ஐம்பது ரூபாய். இந்தியப் பணம் கிட்டத்தட்ட நான்கு மடங்கு இருந்தாலும் டாலர் அல்லது ஈரோ கொண்டு வந்தால் தான் இந்த விலைவாசியைப் பொருட்படுத்தாது இருக்க முடியும். எளியோர் வாழ்வது இங்கே கடினம். எந்த இனமென்றாலும் எல்லோரும் ஒன்று சேர்ந்து, நாட்டை மீட்டெடுக்க வேண்டியதே உடனடித்தேவை.

வெள்ளவத்தை தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம். கடல் அதை ஒட்டியே ரயில்பாதை, அருகே சாலை என முவ்வழிப் போக்குவரத்து. இன்னும் சற்று தொலைவு சென்றால் ஈஸ்டரில் குண்டு வெடித்த St. Antony”s Shrine இருக்கின்றது. போகும் வழியெங்கும் கடற்கரையை ஒட்டி இளஞ்ஜோடிகள் குடைபிடித்துக் கொண்டு, கன்னத்தோடு கன்னத்தை இழைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நமக்கு இப்போதெல்லாம் அடிக்கும் வெயிலில் யாரும் மிக நெருக்கமாக வந்தால் பிடிப்பதில்லை. எனினும் சிதிலங்களுக்கு மேல் பூக்கள் பூத்தால் மகிழ்ச்சி.

இந்தியாவிற்கு, இலங்கை மேல் என்ன அக்கறை? ஈழப்போரில் சம்பந்தமில்லாமல் ஏன் உள்ளே நுழைய வேண்டும்? சீனா உள்ளே வரக்கூடாது என்று தான் பெரிய அண்ணன் வேலை பார்த்தது. ஆனால் சீனா பிரம்மாண்டமாக உள் நுழைந்து, கடலிலேயே பாதி இடத்தை ஆக்கிரமித்து Port City கட்ட ஆரம்பித்திருக்கிறது. கடலில் ஒரு Base அதுவும் இந்தியாவிற்கு வெகுஅருகில். அந்த இடம் இப்போது இலங்கைக்கும் சொந்தமில்லை. அச்சாரமாக Chinese Hotel அருகில் தயாராக வந்து விட்டது. சற்று தூரம் போனால் பொதுமக்கள் ஆக்கிரமித்த ஜனாதிபதி மாளிகை.

கொழும்பில் Galle face கடற்கரையைத் தவற விட வேண்டாம் என்றார்கள். அலைகள் அமைதியாக இருக்கின்றன. மெரினா கடற்கரைகளின் ராணி. அவளைப் பார்த்த பின்பு கவனத்தைக் கவரும் கடற்கரைகள் குறைவு. கடற்கரை முழுவதும் இளமைப் பட்டாளம். பொதுவாக முதியவர்கள் கடற்கரை அமைதிக்காக வருவார்கள். என் கண்ணில் யாரும் தென்படவில்லை.

கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியில் பொன்னம்பலவாணேசுவரர் கோயில். சிவன் கோயில். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. கருங்கல் கட்டிடம். மதுரை மீனாட்சியம்மன் கட்டிடக்கலையின் சாயல் தெரிகிறது. உள்ளே பூஜை எல்லாம் தமிழ்நாட்டு பாணியில். அதிக கும்பல் இல்லாமல் ஆரவாரமில்லாது கும்பிடுகிறார்கள். ஒரே பூசாரி ஒவ்வொரு சிறுகோயிலுக்கும் வேகவேகமாகச் சென்று மங்கலஆரத்தி காட்டுவதும், பக்தர்கள் அவர் பின்னே ஓடுவதும் பார்க்க சுவாரசியமாக இருக்கின்றது. பல பெண்களின் கால்விரல்களில் மெட்டி. கால்கள் மேலெழுந்து, தரைபாவி நடக்கையில் புறாக்கள் மெல்லப்பறந்து பின் தரைக்கு வருவது போலிருக்கின்றன. அம்மன் பெயர் சிவகாமசுந்தரி. கோவிலில் நல்ல தரிசனம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s