நகரங்கள் பெரும்பாலும் முதல் பார்வையில் எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
சிலகாலம் அங்கேயே வாழ்ந்த பிறகு தான் அது உருவாகுகிறது. ஆனால் நுவரெலியாவைப் பார்த்த உடனேயே காதல் கொண்டேன். நுவரெலியா, வணிகமயமாக்கப்படாத கொடைக்கானல்.
சீதா எலிய கோவில் என்பது சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்று நம்பப்படுகிறது. உலகிலேயே சீதைக்கு இருக்கும் கோவில் இதுவே. மிதிலையிலோ, அயோத்தியிலோ எங்குமே சீதாவிற்குக் கோவிலில்லை. நின்பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்று காதல் பேசிய மனைவிக்கு, வனத்திற்கு அவன் பொருட்டு வந்து கடத்தப்பட்ட மனைவிக்கு, எந்த நேரத்தில் பக்கபலமாக நின்றிருக்க வேண்டுமோ அந்த நேரத்தில் கைவிட்ட ராமனுக்கு ஆயிரம் கோவில்கள். நல்ல ஆண்கள் ராமனை வழிபட மாட்டார்கள்.
ஹக்கல பூங்கா கொள்ளை அழகு. Botany படிப்பவர்களுக்கு பெருவிருந்து. நமக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியாய் காணும் இடம் எங்கும் வகைவகையான பூக்கள். நாங்கள் போயிருந்த நேத்தில், பட்டாம்பூச்சிகளாய் பள்ளி மாணவிகள். பதின்மவயதுப் பெண்களின் துடுக்கு, வெட்கம் கலந்த பேச்சை மகள்களை பெற்ற தந்தைகளால் அதிகம் ரசிக்க முடியும். நீங்கள் வித்தியாசமான தமிழ் பேசுகிறீர்கள் என்றது ஒரு பெண். சங்கம் வளர்த்த ஊரில் பிறந்து, முதல் கால்நூற்றாண்டு வாழ்ந்த எனக்கே இந்த நிலைமை என்றால் சென்னைக்காரர்கள் போனால் என்ன செய்வார்கள்?
கிரகரி வாவி, விக்டோரியா பூங்கா, ,கிராண்ட் ஹோட்டல் பூங்கா, நுவரெலியா நகருக்குள்ளேயே பார்க்க வேண்டிய இடங்கள். நகரிலேயே அம்பாள் என்ற சைவ ஹோட்டல் இருக்கிறது. எவ்வளவு கூட்டம் வந்தாலும் தரம் குறையாத உணவளிக்கிறார்கள். பரிமாறும் பெண்களின் முகத்திலும் சிரிப்பு குறைவதில்லை. நுவரெலியா தங்கியிருந்து தட்பவெட்ப நிலையையும், அழகையும் ரசிக்க வேண்டிய ஊர். வெளிநாட்டவர் ஏராளமாக வந்து இங்கே தங்குகிறார்கள். நுவரெலியாவை விட்டுக் கிளம்ப மனம் இல்லாததால் நாளையும் இங்கேயே.