மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, செங்கலடி, ஓட்ட மாவடி வரை வயல்காணியும் பசுமையும் இருக்கின்றன. வாழைச்சேனை, வாகரை, சேருநுவர, கிண்ணியா வந்து திரிகோணமலை வரும் வரை காடும் வறண்ட பகுதிகளும், எதிர்காலம் குறித்த நம்பிக்கை இல்லாத மனிதர்களும். கண்களை மூடினால் பெடியன்களும், பெடியள் பிள்ளைகளும் துவக்குகளைத் தூக்கிக் கொண்டு அவசரமாக ஓடினர். பதறிக் கண் விழித்தால் பாலை நிலம்.

திரிகோணமலை பதினாறாம் நூற்றாண்டில்
போர்த்துக்கீசியப் படையெடுப்பிலிருந்து எத்தனையோ படையெடுப்புகளைச் சந்தித்திருந்தாலும் சிறைபிடிக்கப்பட்ட மகாராணி போல அழகும், கம்பீரமும் குறையவில்லை.

கோணேஸ்வர் ஆலயமும் போர்த்துக்கீஸிய படையெடுப்பில் அழிக்கப்படும் முன், பக்கத்துக் கிணறுகளில் சிலைகளைப் பதுக்கி வைத்திருந்திருக்கிறார்கள். நூறாண்டுகள் கழித்து சிலைகள் கண்டெடுக்கப்பட்டு புணரமைக்கப்பட்டிருக்கின்றது. நடராஜரின் நூற்றெட்டு தாண்டவங்களின் படங்கள்,
குற்றாலம் சித்திரசபை, மதுரை வெள்ளிசபை, திருவாலங்காடு ரத்னசபை, சிதம்பரம் பொற்சபை, திருநெல்வேலி தாமிரசபை என்று தமிழ்நாட்டில் இருப்பது போல் ஒரு உணர்வு. “நீர்மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத் தாரகம் என்றென்னிந் தட்டழிந்தேன் பூரணமே” என்று பட்டினத்தடிகள் பாடியது இந்த நகரத்திற்கும் பொருந்தும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

Marble Beach தெளிவான நீரோட்டத்துடன், அலைகள் அச்சுறுத்தாமல் குளிக்க ஏதுவான கடல். திரிகோணமலை துறைமுகம் ஒரு இயற்கை அற்புதம். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டுக் கண்பார்வையில் மறைக்கப்பட்டு Navy Base ஆக மாறி இருக்கிறது. குளிர்காலத்திலும் சூடாக நீர் இருக்கும் ஏழு வெந்நீர் ஊற்றுகளின் பக்கத்திலிருந்த சிவாலயம் சிங்கள ராணுவத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டு, இப்போது கோவில் இருந்ததா என்பதைக் கண்டுபிடிக்கும் பணி தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. Dutch வீரர்களுக்கான கல்லறை இன்றும் அழகாகப் பராமரிக்கப்படுகிறது. இறந்தாலும் வெள்ளைக்காரனாக இறப்பது நல்லது. புறாத்தீவில் படகில் கூட்டிப்போய்க் கண்ணாடி அணியவைத்துக் கடல்வாழ் உயிரினங்கள் நீந்துவதை மிக அருகில் காட்டுகிறார்கள். இலங்கையர் ஐந்து பேர் சென்றால் ஐந்தாயிரம், இந்தியருக்கு நாற்பத்தெட்டாயிரம்.

மாலையில் Shri Ramanathan ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். Post modernism, Magical realism, சமகால உலக இலக்கியங்கள் குறித்து பேச்சு நடந்தது. கனத்த மழை என்பதைப் பொருட்படுத்தாது ஒரு பெண் உட்பட கடைசிவரை எல்லோரும் இருந்தனர். உமா வரதராஜன் குழு தொகுத்த கிழக்கின் 100 சிறுகதைகள் என்ற தொகுப்பு
நூலை பரிசளித்தனர். வீட்டில் படிக்காத நூல்கள் எவ்வளவு இருந்தாலும், புத்தகத்தைப் பார்க்கையில், மிட்டாயை வாங்கும் சிறுவனின் ஆர்வம் கொண்ட மனம் கடைசிவரை நிலைத்திருந்தால் போதும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s