யாழ்ப்பாணத்தில் வீடுகளில் பனைமட்டை, பனையோலை கொண்டு வேலிகள் செய்திருக்கிறார்கள். இயற்கை வேலி. வீடுகள், சாலைகள் பெரிதாக இருக்கின்றன. செம்மண் நிலம். வாழை, தென்னை செழித்து வளர்ந்திருக்கின்றன. புகையிலையும் நன்றாக வளர்கிறது.
காங்கேசன் துறை கடற்கரை மற்ற கடற்கரைகளைப் போலவே ஆட்கள் நடமாற்றமின்றி. பாலியல் தொழிலாளிகள் இருவர் வாடிக்கையாளர் வரும் வரை கடல் பார்த்து மோனத்தவம் செய்வோம் என்று உட்கார்ந்திருந்தார்கள். படிக்கட்டுத்துறையுடன் உள்ள குளத்தில் கடல்நீர் வந்து கலக்கிறது. ஆண்களுக்கு, ,பெண்களுக்குத் தனித்தனியாய் குளங்கள். இரண்டிலும் தண்ணீர் உப்புக்கரிப்பதில்லை. உண்மையில் அது ஒரு அதிசயம். நிலாவரைக் கிணறு நூறடிக்குமேல் ஆழம். காங்கேசன் துறையில் இருந்து பல கிலோமீட்டர்கள். நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சையைப் போட்டால் காங்கேசன் துறை குளத்தை வந்தடையும் என்கிறார்கள். சுரங்கப்பாதை இருந்திருக்க வேண்டும்.
ஜமதக்னி முனிவர் சாபவிமோசனம் பெற்று கீரி வடிவத்தில் இருந்து விடுதலை பெற்றதாகப் புராணம். இங்கிருக்கும் கடவுள் கீரிமலை நகுலேஸ்வர். நல்லூர் கந்தசாமிக் கோவில் யாழ்ப்பாணம் செல்லும் இந்து பக்தர்கள் தவறவிடாதது. தமிழ்நாட்டுக் கோவில்கள் போல் அமைப்பும், பிரம்மாண்டமும். 1988ல் இந்திய ராணுவம், ஊரடங்கு பிறப்பித்த போது இந்தக் கோவிலின் பிரகாரத்தில் பல அகதிகள் பலநாட்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சின்னக்கதிர்காமம் என்று அழைக்கப்படுகிறது. தொண்டைமானாறு கடலில் கலக்கிறது. இப்பகுதியில் பெரும்பாலான கோவில்களில் ஆண்கள் மேலாடையை அகற்றவும், பெண்கள் கூந்தலை முடிக்கவும் அறிவுறுத்தும் போர்டுகளுக்கு ஆன்மீக நோக்கைத் தவிரப் பிறநோக்கம் ஏதுமில்லை என்பதை அறிக.
நேரமின்மையால் பலரைச் சந்திக்க முடியவில்லை. கலைமுகம் எமில் நண்பருடன் வந்து சோலைக்கிளி நூலை அளித்துச் சென்றார். அய்யாத்துரை சாந்தனை சுடுமலை இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். சுடுமலை அம்மன் ஆலயத்தின் முன் இந்திய ராணுவத்துடனான முதல் சமாதான உடன்படிக்கை சந்திப்பு நடந்தது. சாந்தன் அவரது நூல்களைப் பரிசளித்தார். வைதேகி நரேந்திரனுடன் நல்ல உரையாடல். துப்பாக்கியிலிருந்து தோட்டா வருவது போல் ஈழத்தமிழில் வேகமாகப் பேசும் பெண், என்னைப் பேசவைத்து வேடிக்கை பார்த்தார். ஆதிரை நாவலின் புதிய வடிவத்தை அளித்துச் சென்றார். வெண்பா புத்தகக்கொள்முதல் தமிழ்நதி கணக்கில். தாட்சாயணி பிரேமினி இனிமையாக உரையாடினார். பிரேமினி Modesty to the core. அவரது புதியநூல்களை
அளித்தார். கொழும்பு விமானநிலையத்தில் இருந்து அபராதம் இன்றி பயணம் செய்ய முடியுமா பார்ப்போம்.