பதினைந்து நாட்களில் ஒரு நாட்டின் புவியியல் பரப்பை, சமூகத்தை, முரண்பாடுகளை, நம்பிக்கைகளை, இன்னபிறவற்றை அறிந்தேன் என்று சொல்லுதல் பேதமை. நாற்பதாண்டுகள் உடன் வாழ்ந்தாலும் துணையை முழுதாக அறிந்தேன் என்று சொல்ல முடியாது. அந்தக் கோணத்தில் பார்த்தால் நம் வாழ்க்கையில் நமக்கு எது புரிகின்றதோ, சரி என்று படுகிறதோ அதையே வெளிப்படுத்துகிறோம். அந்த வகையான கட்டுரையே இது.
இலங்கை சுற்றுலாப் பயணிகளை எதிர்கொண்டு இருக்கிறது. பொருளாதாரம் அதலபாதாளத்தில் விழுந்த பிறகு சுற்றுலாத்துறை இன்னும் முனைப்போடு செயல்பட்டால், ஏராளமான பயணிகளை வரவழைக்க முடியும். அழகி நுவரேலியாவில் மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் பல ஐரோப்ப, அமெரிக்கர்களைக் கும்பல் கும்பலாய் காணமுடிந்தது. பாதுகாப்பு குறித்த பயம் இந்தியருக்கு மட்டுமல்லாது, வெளிநாட்டவர் பலருக்கும் இல்லாமல் போனது ஒரு நல்ல அறிகுறி. சுற்றுலாத்துறை இதை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் எங்குமே
எனது பாஸ்போர்ட்டைக் கேட்கவில்லை. ராணுவத்தினர் நிறைந்த பகுதிகளிலும், அச்சுறுத்தும் பார்வை ஏதுமில்லை, சிலர் சிரிக்கிறார்கள், பலர் நேரடிக் கண்பார்வையைத் தவிர்க்கிறார்கள்.
மற்ற Currencyகளுக்கு பொருட்கள் அதிக அளவு விலை ஏறியதாகச் சொல்வதற்கில்லை. ஆனால் உள்நாட்டவரது ஊதியம் arithmetic progressionல் செல்கையில் விலைவாசி geometric progressionல் போகையில் சமாளிப்பது கடினம். இந்திய ரூபாய் நான்கு மடங்கு பெருகி இருக்கையில், நுழைவுச்சீட்டு பலவும் பத்து மடங்கு உள்நாட்டவரை விட அதிகமாக உள்ளன. USD, Euro இரண்டுமே இலங்கை முன்னூறு ரூபாய்க்கு மேலிருப்பதால், வெளிநாட்டவர் பெரிதாகப் பொருட்படுத்தப் போவதில்லை.
இலங்கை மிக அழகிய தேசம். கடலால் சூழப்பட்டது மட்டுமன்றி, குடிநீருக்கான நீர்நிலைகள் ஏராளமாக உள்ள தேசம். தண்ணீர் பஞ்சம் என்பதே இந்த நாட்டில் இருக்காது என்று நம்புகிறேன். தென்னை மட்டுமன்றி, Cash crops எல்லாமே செழித்து வளர்கின்றன. மண்வளம் மிக்க தேசம். குறைந்த செலவில் அழகான நாட்டைப் பார்க்க முடியும் என்பது இன்னும் பல வெளிநாட்டவரை நிச்சயம் வரவழைக்கும்.
சமாதானம் நிலைக்க வேண்டும்.
ஒரு கருத்தைச் சொல்லும் போது, நம்மை இன்னார் என்று அடையாளம் காட்டப் பலர் துடிப்பது தெரிகிறது. சர்ச்சைகளில் சிக்குவதை விட வாசிப்பு முக்கியம் என்றே இங்கே திருதராஷ்டிரனாகத் திரிவது. விடுதலைப் புலிகள் முஸ்லீம்களை இருபத்தி நான்கு மணி நேரத்தில் நகரைக் காலிசெய்ய வைத்தது குற்றம், சகபோராளி அமைப்புகளை அழித்தது குற்றம், பிள்ளைபிடிப்பு நடவடிக்கை குற்றம் என்பது போல் ஏராளமானவை குற்றம் என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் அவர்கள் இல்லை என்றால் எம்மக்கள் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நல்லவர், கெட்டவர் என்பதேயில்லை, ஒவ்வொரு செயலுமே பொது விமர்சனத்திற்கு உட்பட்டது என்ற புரிதல் பெரும்பாலும் இல்லாததால் நமக்கும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த விழைகிறார்கள்.
இலங்கையில் பல பகுதிகளிலும் வீட்டிலுள்ளோர் கோயிலில் நேரம் செலவழிக்கையில், எளியமக்களிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணை, தம்பி என்று பலராலும் அழைக்கப்படுபவர் ஒருவரே. பெருவாரியான மக்களின் பிரியத்தைச் சம்பாதித்தவருக்கு நாம் மீசை, மரு வரைந்து நம்பியாராக்கலாம். வழிதெரியாது திணறிய போது, உதவி செய்த மக்களிடம், மண்ணின் மைந்தன் மீதான பிரியமும், மரியாதையும். இவையனைத்தும் பொய்யென்றால் இந்த உலகத்தில் உண்மை என்பது எது?வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து, வளர்ந்த வீடு. கேணி மட்டுமே மிஞ்சியிருக்கிறது. குமரப்பா, புலேந்திரன் நினைவுச்சின்னமும் உங்கள் பார்வைக்கு. வல்வெட்டித்துறையில் பல பெரிய வீடுகள் இடிபாடுகளுடன். போராட்டம் குறித்த நினைவுகளை அழிக்க சிங்கள அரசு மும்முரமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
முகலாயர்கள், போர்த்துகீசியர்கள் போல சிங்களவர்கள் இந்துக்கோயில்களை அழிக்கத் துணிவதில்லை. எல்லாக் கடவுளர்களுக்குமே பயப்படுகிறார்கள். Chilawவில் ஒரு சிங்களப்பெண் என் பிள்ளைக்கு அர்ச்சனை செய்யுங்கள் என்றார் உடைந்த தமிழில். அவரது குழந்தை என்று காத்திருந்து பார்த்தால், அவர் சிவனைச் சொல்லியிருக்கிறார். எல்லாக் கடவுள்களையுமே கும்பிடுகிறார்கள். ஆனால் இந்துக் கோயில் வளாகங்களில் பெருவாரியாகப் புதிதாக விஹாரைக் கட்டுகிறார்கள். எனக்கு உண்மையிலேயே எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.
தமிழர்கள், இந்திய வம்சாவளி, இலங்கைத் தமிழர், இஸ்லாமியர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரிந்திருக்கிறார்கள். இஸ்லாமியரை, தமிழர் பிரிவில் சேர்க்காது முஸ்லீம்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் பதினைந்து தலைமுறையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர் நான் தமிழன் என்று சூளுரைக்கும் போது, தமிழ்பேசும் முஸ்லீம்களை தமிழர் இல்லை என்று சொல்ல என் மனம் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது. இலங்கை முஸ்லீம் நண்பர்கள் இதுகுறித்து ஏராளமான விளக்கங்களை உட்பெட்டியில் கொடுத்து விட்டார்கள். புதிதாக விளக்கம் வேண்டாம்.
இந்திய வம்சாவளித் தமிழரை இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு இணையானவர்கள் என்று ஒத்துக்கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டு எப்போதுமே உண்டு. பிரியா என்னும் இளம்பெண் இலங்கைத் தமிழர். இந்தியர் என்று உறுதியானதும் வெளிப்படையாகப் பேசினார். ” நாங்கள் இருக்கலாம், வேலை பார்க்கலாம், ஓட்டுப் போடலாம், ஆனால் வாயைத் திறக்கக்கூடாது, திறந்தால் அடுத்தநாள் நாங்கள் தலைமறைவாகிப் போவோம்”. ஏதாவது பிரச்சனை என்றால் சிங்களவர்கள் இரண்டு தமிழர்களையும் இப்போது உங்கள் நாடு இந்தியா தானே அங்கேயே போங்கள் என்கிறார்களாம். இறுதியில் சமஅந்தஸ்து வந்துவிட்டது.
ஆண்கள் கோவில்களில் கட்டாயமாக அணிய வேண்டும் என்பதைத் தவிர வேறெங்கும் வேட்டி அணிந்து நான் பார்க்கவில்லை. பேண்ட், அரைக்கால்சட்டை, கைலி பொதுவான உடைகள். இளைஞர்கள் நடுவேயும் ஜீன்ஸ் பெரும்பான்மை இல்லை.
பெண்களில் பெரும்பான்மை Tops & Skirt. அனுமாருக்கு பலகாலம் பூஜை செய்த பூசாரியைப்போல், சிங்களப் பெண்களுக்கும், தமிழ்ப்பெண்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இஸ்லாமியப் பெண்கள் பெரும்பாலும் பர்தா அணிந்திருக்கிறார்கள். வண்ணம் மட்டுமே மாறுகிறது. சில ஊர்களில் தாவணி அணிந்த பெண்களைப் பார்த்ததும் ஆனந்தக்கண்ணீர் பார்வையை மறைத்து, துடைப்பதற்குள் எங்கள் வண்டி நகர்ந்து விட்டது. பள்ளிக்குச் செல்லும் பெண்கள் பலர் சேலை அணிந்திருந்தார்கள். சிங்களப் பெண்களின் சேலை ஒசரிய சேலை. ஒவ்வொருவர் கட்டும் பாணி வேறு. அதை வைத்தே அவர்கள் சாதியைக் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்கிறார்கள்.
இலங்கையில் முழுசைவர்களுக்கு பல பகுதிகளில் சிரமம். தோசை, பணியாரம், ரொட்டி, பூரி போன்றவை அங்கங்கே கிடைத்தாலும் பெருவாரியாக மச்சஉணவு தான். புட்டு, இடியாப்பம் அதிகமாகக் கிடைக்கிறது. சம்பல் என்ற Dry Chutney வகை இங்கே சிறப்பு. எந்தப் பலகாரத்திற்கும் தொட்டுச் சாப்பிடலாம். சொதி இங்கே வித்தியாசமாக, ருசியாக இருக்கிறது. காய்கறிகள் நச்சுப்படாமல், செழுமையான மண்ணில் வளர்ந்து, நம்மிலிருந்து வித்தியாசமான செய்முறையில் சுவையாகப் பரிமாறப்படுகிறது. சாதத்தை மட்டும் அரைவேக்காட்டில் எடுக்கச் சொல்லி யார் இவர்களைப் பழக்கியிருப்பார்கள்! யாழ்ப்பாணப்பலாவின் தித்திப்பு, கப்பல் வாழைப்பழம், மெகாசைஸ் தேங்காய், இளநீர் என்று உணவுப்பிரியர்களுக்குக் கொண்டாட்ட நகரம் யாழ்ப்பாணம்.
என்னால் ஆங்கிலேயரை எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் செய்த வன்கொடுமைகளை மன்னிக்கவும் முடியாது. ஆனால் இலங்கையில், இந்திய வெறுப்பு என்பது இல்லை, அல்லது நம் முகத்துக்கு நேரே இவர்கள் காட்டுவதில்லை.
நண்பர்களில்லாத, முகம்தெரியாத பல பிரிவினரிடமும் பேசுகையில் ஓட்டுனரின் எச்சரிக்கையை மீறி இந்தியாவில் இருந்து வருகிறேன் என்றே சொல்லிய போதும், ஒரு இடத்தில் கூட முகச்சுளிப்பை நான் சந்திக்கவில்லை. சிங்களவர்கள் அவர்களே முன்வந்து அரைகுறை ஆங்கிலத்தில் கதைத்தார்கள்.
ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ், ஈழத்து எழுத்தாளர்களின் மொழிநடைக்கு அடித்தளம். பேக்கரியை- வெதுப்பகம், Diversஐ சுழியாடிகள் என்பது போல் ஏராளமான வார்த்தைகளுக்கு இயல்பாகத் தமிழை உபயோகிக்கிறார்கள். Justice என்பதற்கு சமாதான நீதவான். மனைவியை, தங்கையை நீங்கள், வாங்கள் என்று இலங்கையில் இங்கே மரியாதைத் தமிழில் குறிப்பிடுவதை, வாடி, போடி என்று சொல்லும் ஆண்கள் கண்டும் காணாதது போல் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
Chilaw, கொழும்பு போன்ற சில பகுதிகளைத் தவிர மக்கள்நெருக்கம் வெகு குறைவு. வளைந்த சாலைகள், இருபுறமும் வெட்டவெளிகள், ஆங்காங்கே ஓரிரு வீடுகள், பஞ்சம் வந்து காலிசெய்த ஊரை நினைவுபடுத்துகின்றன. தமிழ்நாட்டில் 1.67 meter squareக்கு ஒருவர் என்ற எண்ணிக்கைக்கெதிராக இலங்கையில் 3.3 Meter squareக்கு ஒருவர். ஏராளமான வேளாண்நிலங்கள் பயிரிடப்படாமல் இருக்கின்றன. பரந்த நிலங்கள் மனிதநடமாட்டம் இன்றிப் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன.
கொழும்பின் துறைமுகம் இலங்கையின் முக்கியமான துறைமுகம். அதற்கு எதிரே கூட எந்த நெரிசலுமின்றி எளிதாக நீங்கள் காரில் கடந்து செல்லலாம். Activities இல்லாது வெறிச்சோடிய துறைமுகம். தேங்காய் எண்ணெய் உற்பத்தி போல், பல Manufacturing facilities மூடப்பட்டு எல்லாவற்றிற்கும் இறக்குமதியை நம்பிக் காத்திருக்கிறது இலங்கை. நல்ல தலைவர் வந்தால் முதன்முதலாக அந்நிய முதலீட்டை வளர்ப்பதற்கு முனைந்து செயல்பட வேண்டும். ஏராளமாக இடம் இருக்கின்றது, ஏராளமாக மக்கள் வேலையின்றி இருக்கிறார்கள். தமிழர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு சென்றதால்
ஓரளவு பரவாயில்லை, சிங்களவர்களுக்கு மிகவும் சோதனையான காலகட்டம் இது.
இலங்கை இளம் எழுத்தாளர்களைச் (சிங்களம்+ தமிழ்) சந்தித்து உரையாடும் எண்ணம் இருந்தது. ரிஷான் சில எண்களை அனுப்பியிருந்தார். தக்ஷிலா ஸ்வர்ணமாலியையாவது சந்தித்திருக்கலாம். யதார்த்தன் வருவதாக இருந்தது. நேரில் அவர் நாவல் குறித்து நல்ல வார்த்தைகள் நான்கு சொல்லி இருக்கலாம். பதினைந்து நாட்கள் என்பது குறைவு. மனநிறைவு என்பது நமக்கு எதில் வந்தது, இதில் மட்டும் வருவதற்கு.