அட்வுட் கனடாவைச் சேர்ந்த எண்பத்தி மூன்று வயது எழுத்தாளர். Handmaids Tale, Alias Grace போன்ற புகழ்பெற்ற நூல்கள் உள்ளிட்ட ஐம்பது நூல்களை எழுதியவர்.
கடந்த பத்து வருடங்களாக, அட்வுட்டின் பெயர் நோபல் விருதுக்கு சாத்தியமுள்ளவர்கள் பட்டியலில் வந்து கொண்டே இருக்கிறது. நம் காலத்தின் பெரிதும் மதிக்கப்படும், மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அட்வுட். அட்வுட்டின் நாற்பத்தாறு ஆண்டுகாலத்துணை 2019ல் மறைந்த பின்பு முதலாவதாக வெளிவரும் புனைவு இது, இவரது கடந்த சிறுகதைத் தொகுப்பிற்கும் இதற்கும் இடையே ஒன்பது வருடங்கள். நுட்பமான வாசகர்கள் இந்தத் தொகுப்பு ஏன் அட்வுட்டுக்கு நெருக்கமும், அந்தரங்கமுமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இருபது வயதாகையில் நாம் ஐம்பது வயது முதியவர் என்று குறிப்பிடுகிறோம். நமக்கே ஐம்பதாகும் போது, நம் உடல் முதுமையை ஏற்றுக் கொண்டாலும், மனம் ஏற்றுக் கொள்வதில்லை. அது இன்னும் இளமை ஆற்றில் நீந்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் பல எழுத்தாளர்களுக்கு வயதாக ஆக, அவர்களது கதாபாத்திரங்களுக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. இந்தத் தொகுப்பில் வரும் பெரும்பான்மைக் கதாபாத்திரங்கள் எண்பதுகளில் இருப்பவர்கள். முதுமை இந்தத் தொகுப்பின் பதினைந்து கதைகளில் முக்கியமான தீம். முதுமையின் அயர்வும், சலிப்பும் அட்வுட்டின் இயல்பான நகைச்சுவை மிகுந்த எழுத்தைத் தாண்டியும் வெளிப்படுகின்றன. ஒரு கதையில், இருபதுகளில் இருக்கும் பெண், சதி செய்தாள் என்று குற்றம்சாட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு, அடித்துக் கொல்லப்படுகிறாள். அவள் கண்களைப் பிடுங்கித் தரையில் எறிகிறார்கள். அவளது கதையைச் சொல்லும் கதாபாத்திரம் எண்பதுகளில் இருப்பவர். அவளுக்கு நேர்ந்தது காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லிவிட்டுக் கடைசியாகச் சொல்கிறார், ” ஒரே ஒரு நன்மை என்னவென்றால் முதுமையின் கொடுமையை அனுபவிக்காது தப்பித்துக் கொண்டாள்”.
அட்வுட்டைப் படிக்கையிலெல்லாம் எனக்குத் தவிர்க்க முடியாது அசோகமித்திரனும் நினைவுக்கு வருவார். மெல்லிய நகைச்சுவை கலந்த எழுத்து என்பது மட்டுமல்ல, சுவாரசியமில்லாமல் ஏதோ ஒரு சம்பவத்தை விமர்சித்துக் கொண்டு போவது போல் இருக்கும் வரிகளுக்கிடையே இருக்கும் ஆழ்ந்த மௌனத்தின் ஓலங்கள். ஆனால் அட்வுட்டின் மொழி அசோகமித்திரனின் மொழி போல் எளிதானதல்ல. வார்த்தைகளைப் பரிசோதனைக்கு உபயோகிப்பவர் அட்வுட்.
ஒரு கதையின் ஆரம்பம் இது:
” அது எதிர்காலத்தில் ஏதோ ஒரு நேரம். அல்லது எதிர்காலம். அதிர்ஷ்டவசமாக எழுத்தாளர்களுக்கு, பல எதிர்காலங்கள், எதையும் இல்லை என்று யாரும் வெளிப்படையாக நிரூபிப்பதற்கில்லை. அதனால் நாம் எப்போது என்பதைத் தெளிவற்றே வைத்திருப்போம்”
இந்தத் தொகுப்பின் கதை ஒன்றில் அட்வுட் எழுதியிருக்கிறார் ” துக்கத்தை நாம் பல வடிவங்களில் வெளிப்படுத்துகிறோம்” . அட்வுட் தனது நாற்பதாண்டுக்கும் மேல் ஒன்றாக வாழ்ந்த துணையை இழந்த துக்கத்தை இந்தத் தொகுப்பாக்கியிருக்கிறார். இதில் வரும் நெல், அட்வுட். டெட் இறந்து போன அவரது வாழ்க்கைத்துணை. எவ்வளவு புத்திசாலித்தனமான எழுத்தாளருக்கும், ஆழ்மனதில் இருக்கும் துக்கம் எப்படி என்றாலும் எழுத்தில் வெளிப்பட்டே தீரும். இந்தத் தொகுப்பிலும் அட்வுட்டின் நகைச்சுவை புன்னகைக்க வைக்கிறது. ஆனால் துக்கம் பூதாகரமாக நின்று வேறு எல்லாவற்றையும் மறைக்கிறது.
அடுத்ததாக மரணம். துர்மரணங்களோ, இயற்கை மரணங்களோ இந்தக் கதைகளில் அடிக்கடி நேர்ந்து கொண்டே இருக்கின்றன. முதல் கதை அதிர்வைத் தரக்கூடியது. ஆரம்பத்தில் இருந்தே தம்பதியருக்கு மரணம் நெருங்கிவந்து போக்குக்காட்டிவிட்டுப் பின் விலகிவிடுகிறது. கடைசியில் அது உண்மையில் வரும்பொழுது…… மரணித்தவர்கள் சங்கேத மொழியில் எழுதியவற்றை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள? ஒரு கதையில் கணவன், மற்றொன்றில் மாமனார். இரண்டிலுமே நான் அதற்கான வாசகி இல்லை போலிருக்கிறது என்று அவள் புலம்புகிறாள்.
பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பின் கதைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. பல வருடங்கள் முன் இறந்த எழுத்தாளரை இன்றைய எழுத்தாளர் இப்போது பேட்டி காண்கிறார், வேற்றுகிரகத்துவாசி பூமிக்கு வந்து இங்குள்ளவர்களுக்கு பதிமூன்றாம் நூற்றாண்டுக் கதையில் திருத்தங்கள் செய்து சொல்கிறது, வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவரின் நட்பு, எழுத்தாளர்கள் இல்லாதஒன்றைக் கற்பனைசெய்து கதாபாத்திரத்தின் கையில் வலுக்கட்டாயமாகத் திணிப்பது, நத்தையின் ஆத்மா இன்று வங்கியில் வேலைபார்க்கும் பெண்ணின் உடலில் புகுவது, கொரானா இல்லை வேறு ஒரு பெருந்தொற்று உலகம் முழுதும் பரவிப் பாலியல் உறவுகளைக் கேள்விக்குரியாக்குவது என்று வழமை போலவே பரிட்சார்த்த மற்றும் அறிவியல் புனைவுக்கதைகளும் தொகுப்பில் உள்ளன.
அட்வுட் மிகச்சிறந்த நாவலாசிரியர் மட்டுமல்ல, நல்லதொரு சிறுகதையாசிரியரும் கூட. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பின் வரும் தொகுப்பு.
இத்தொகுப்பின் மூலம் அட்வுட் கடந்த ஐம்பதாண்டு கால வாழ்க்கையை அசை போடுகிறார். பொருட்கள் என்பது நுகர்விற்கு மட்டுமா? அவற்றைப் பயன்படுத்தியவர் இறந்ததும், நினைவுகளை அவை தன்னுள் அடக்கிக் கொள்வதில்லையா? நாம் இருக்கும் வரை அந்த நினைவுகளையும் பொருட்கள் சுமந்திருக்கும். நமக்கும் பின்னால் அவை மீண்டும் வெறும் பொருட்கள் ஆகிவிடும்.
நூலின் பெயர் – Old Babes in the Wood
எழுதியவர் – மார்க்கரெட் அட்வுட்
வகைமை – சிறுகதைகள்
பதிப்பகம் – ராண்டம் ஹவுஸ்
பக்கங்கள் – 272
பதிப்பு – 7 மார்ச், 2023.