கலைமுகம் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கலைஇலக்கிய இதழ். இதன் ஆசிரியர் எமிலை யாழ்ப்பாணத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அச்சில் வரும் சிறுபத்திரிகைகளுக்கு நேரும் அதே நெருக்கடி காரணமாக முதல் மூன்று காலாண்டிதழ்கள் 2022ல் வெளிவரவில்லை.
காந்தர்வம் – சா.சிவயோகன்:
பள்ளியில் படிக்கும் பெண், காதலனுடன் வீட்டை விட்டு ஓடுவது, அது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் எப்படிப் பாதிக்கிறது, அவர்களது எண்ணஓட்டங்கள் ஆகியவற்றை
Multiple narrative technique மூலம் சொல்லப்படுகிறது. ஓடியதைத் தாண்டி கதை ஒரு இன்ச் கூட நகராததும், அதன் மீதான பல்வேறு கோணங்களும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
பெண்களுக்கு வயதானால் கூட அவர்களைக் குழந்தையாகப் பாவிப்பதும் இயல்பானதே. ஆனால் கடைசியில் ஒரு டாக்டர் வந்து இதை நீதிக்கதையாக்குவதைத் தவிர்த்திருக்கலாம். அந்தப்பகுதி இல்லாமலே கூட கதை முழுமையடைந்து விடுகிறது.
மூன்றாம் சிறகு – அஸ்மா பேகம்:
குழந்தைப்பேறுக்கு முந்தைய அவஸ்தைகள், வாசகி ஒருத்தியின் Reading slump குறித்த கவலை, உணவு உட்கொள்ள முடியாமை என்று எல்லாமே குழந்தையைப் பார்த்தவுடன் பஞ்சாகப் பறந்து விடுகிறது. கதையில் வரும் வரி உண்மை, மகப்பேறின் பாதி வலி ஆண்களுக்கென்றால் மக்கள்தொகையில் பாதி கூட இருந்திருக்காது. இவை எல்லாவற்றுடனும் மர்மமாக கிரீஸிலிருந்து சரியாகப் பிறந்தநாளுக்கு வரும் வாழ்த்து அட்டையும் சேர்ந்து கதையை சுவாரசியமாக்கி இருக்கிறது.
ஒரு சிற்பியின் உடைந்து போன சிற்பம் –
அரங்கா விஜயராஜ்:
பெரிய துண்டை எடுத்து சென்டிமென்டில் நன்கு ஆழ்த்திவிட்டு, வெளியே எடுத்து, ஒருதுளி கூட வீணாகாது இறுக்கப்பிழிந்த கதையிது.
கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதைகள் நன்றாக வந்துள்ளன. ஜிப்ரிஹாசனின் மொழிபெயர்ப்பு நேர்காணல் தவறாமல் வாசிக்க வேண்டியது. புத்தக மதிப்புரைகளில், Seven Moonsக்கு இலங்கையில் இருந்து வரும் விமர்சனம் வித்தியாசமாக இருக்கிறது. சாந்தனின் சித்தன் சரிதம் அதிகமாகக் கவனத்தைப் பெற்றிருக்க வேண்டிய நாவல். சிறுகதைகள் தேர்வில் ஆசிரியர் குழு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாகச் சொன்னால், மூன்றாம் கதை, வழமையாக வாரமலர் போன்ற பத்திரிகைகளில் வரும் கதை. எல்லா சிறுபத்திரிகை ஆசிரியர்களிடம் இருக்கும், துடிப்பையும், ஆர்வத்தையும் எமிலிடம் நான் கண்டேன். கலைமுகம் தொடர்ந்து வரவேண்டும்.