நம் நாட்டில், பலகாலங்களாக நாம் பார்த்தும், கேட்டும் பழகிய விஷயங்களை நாம் பொருட்படுத்தாது கடந்து விடுகிறோம். வெளியே இருந்து வந்து இங்கே தங்குபவரின் பார்வை வேறு. உதாரணத்திற்கு சேலைகட்டிய பெண்ணின் இடுப்புப்பகுதி நமக்கேற்படுத்தும் சலனமும், ஒரு ஐரோப்பியனுக்கு ஏற்படுத்தும் தாக்கமும் ஒன்றல்ல. இந்த நாவல் பிரான்ஸில் முறையான ஆவணங்களின்றிக் குடியேறிய ஆப்பிரிக்கர்களின் பார்வையில் அந்த நாடு, மக்கள், நடைபெறும் சம்பவங்கள் குறித்தது. மூன்று சிறுகதைகள், மூன்று காலஇடைவெளிகள், மூன்று பார்வைகள்.
Standing Heavy என்பதன் literal meaning வேறு. இந்த நாவலைப் பொறுத்தவரை, நாள் முழுவதும் நின்று, நடந்துகொண்டே குறைந்த வருமானத்தைப் பெறும் Security guardsஐக் குறிக்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருக்கும் காவலாளிகள் உயரமாக, பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், குறைந்த ஊதியத்திற்கு கடினஉழைப்பைத் தரத் தயார்நிலையில் இருப்பது முதலாளித்துவத்திற்கு மிகவும் ஏற்புடையது. Security guardன் முதல் எதிரி Shoplifter.
நாவலின் வடிவம் பாரம்பரியக்கதை சொல்லல் அல்ல. Collection of vignettes அல்லது aphorisms என்று சொல்ல வேண்டும். அதன் மூலம் புலம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்களின், பிரான்ஸ் முதலாளித்துவத்தின் மீதான பார்வையை, Satirical ஆகச் சொல்லிச் செல்லும் நாவல். ஏராளமான சம்பவங்கள் அல்லது துணுக்குகளின் தொகுப்பு என்பது ஒருவகையில் இந்த நாவலின் பலவீனம். பலவிதமான சம்பவங்களின் மையமுடிச்சு பலருக்கும் கிடைக்காது போகவிருக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
சொல்லப்படும் சம்பவங்கள் பன்னாட்டு நுகர்வோரின் மனப்பான்மையைக் குறிக்கச் சொல்லப்பட்டிருந்தாலும், சிலவற்றிற்கு பின்னணி தெரியாவிட்டால் புரியாது. ஒரு Shopping mall முன்னால் பாரம்பரிய இந்தியஉடை அணிந்த ஒருவர், காஷ்மீரின் ரோஜா- இந்திய, பாகிஸ்தானி உணவுகள் என்ற Sign boardஐப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். காஷ்மீர் விடுதலைப் போராட்டம் ஒரே தட்டில் இரண்டு நாட்டு உணவுகளோடு முடிந்து விடுகிறது. காந்தி பாரிஸூக்கு வந்து பார்த்தால் மனம் மகிழ்ந்திருப்பார்.
கண்கூட வெளியே தெரியாது பர்தா அணிந்த பெண்ணின் கையிலிருக்கும் பையில் பொறித்த வாசகம் ‘The best dividend stocks & Income Investments. Negro என்ற வார்த்தையை தாராளமாக உபயோகிப்பதுடன், கருப்பினப்பெண்ணின்
உதட்டில் வெள்ளை லிப்ஸ்டிக் காயத்தில் இருந்து வெளிவரும் சலம் போல இருந்தது என்று குறிப்பிடுகிறார். வெள்ளையர் இப்படி எழுதினால் Racism என்றாகும்.
இரண்டு, மூன்று மணிநேரத்தில் படித்து முடிக்கக்கூடிய கிண்டிலில் நூற்றைம்பது பக்கஅளவே கொண்ட நாவல். ஆனால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு Quantum jump ஒவ்வொரு பக்கத்திலுமே நேர்வதால் கூடுதல் கவனத்தைக் கோரும் நூல். Security industryக்கு Security guard என்பது, Cheeseக்கு Laughing Cow போல என்பது போன்ற வரிகளைக் கண்ணை இமைக்காமல் படித்துக் கடப்பது கடினம் இல்லையா!