அழ நாடு – அ.உமர் பாரூக்:
ஆசிரியர் குறிப்பு:
இலக்கியச் சிற்றிதழ்களில் ஆரம்ப காலத்தில் எழுத்தத்துவங்கிய அ. உமர் பாரூக், பிரபல வார, மாத இதழ்களில் மருத்துவத்தொடர்களை எழுதி வருகிறார். தேனி மாவட்டம் போடியில் பாரத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் நிறுவனத்தில் ஆங்கில மருத்துவத்தின் சார்பு மருத்துவப் பட்டயப் பயிற்சி பெற்றதோடு அக்கு பங்சர் உட்பட பல மருத்துவ மேற்படிப்புகள் படித்ததோடு, ஆய்வுக்கூடங்களில் பணியாற்றியவர். இவரது ஆதுரசாலை சமீபத்தில் வந்த நாவல்களில் குறிப்பிடத்தக்கது. இது ஆய்வுநூல்.
“வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று வடிவேலுவின் குரலில் கேட்கையில் சிரிப்பு வரலாம். ஆனால் கடந்தகால வரலாற்றை விருப்புவெறுப்பின்றி அப்படியே பதிவது நம்மிடையே அரிது. எல்லாமே உயர்வு நவிற்சி தான். எல்லோரும் புனிதர்கள் தான். அவர்கள் குறித்து வாயே திறக்கமுடியாது. பாரூக்கின் இந்தநூல்
தேனி மாவட்டத்தின் தொல்லியல் தளங்கள் மற்றும் அறியாத பலவிவரங்களைக் கையேடு வடிவில் தரும் ஆய்வுநூல். பல்கலைகளின் பணியைத் தனிநபர் செய்துள்ளார்.
நூலின் முதல்வரியே இது தான்
” தேனி மாவட்டத்தின் பழைய பெயர் அழ நாடு. இதனை கல்வெட்டு மற்றும் செப்பேட்டு ஆதாரங்கள் உறுதி செய்கின்றன”. பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தது போல் பக்கத்து மாவட்டத்தைப் பற்றியும் தெரியவில்லை.
தொல்லியல் ஆய்வு வகைகளில் இருந்து நூல் ஆரம்பிக்கிறது. இதில் அகழ்வாராய்ச்சி, நீரியல் அகழாய்வு போன்றவை தனிநபர் எல்லைக்கு அப்பாற்பட்டவை. தேனியில் அகழ்வாராய்ச்சியே செய்யப்படவில்லை.
பொது ஆண்டுக்கு முன் 10,000 ஆண்டு பழைய கற்காலத்திலிருந்து சமூகம் அடைந்த மாற்றங்கள் இந்தக் கட்டுரையில். பொ.ஆ.மு 4,000லேயே மண்பாண்டங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மக்கள் ஒரு இடத்தில் மனிதர் தங்கிவாழ்வது என இன்றைய நாகரீகத்தின் அடித்தளம் போடப்படுகிறது.
தமிழ் எழுத்துக்கள் பொ.ஆ. மு 1000 ஆண்டுகளில் கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அப்போதைய தமிழ் எழுத்துவடிவம் வேறு.
தமிழிலிருந்து பிரிந்தது மலையாளம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. புள்ளிமான் கோம்பையில் இருந்து எடுக்கப்பட்ட நடுகல்லில் மலையாள மொழி இருந்தது என்ற தவறான நம்பிக்கையும் மலையாளம் செம்மொழி அந்தஸ்தைப் பெற உதவியிருக்கிறது. அந்நேரம் அநேகமாக நாம் நமக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்திருப்போம்.
தொல்லியல், தமிழ்மொழியின் மாற்றங்கள், கல்வெட்டுக்கள், நடுகல், சதிகல், சிற்பங்கள், ஓவியங்கள் என்று ஆரம்பித்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போடி நாயக்கனூர் அரண்மனை ஓவியத்தில் முடிகிறது. இடையில் எத்தனை எத்தனையோ தகவல்கள். இந்த நூலைக் கையில் வைத்துக் கொண்டு தேனி சென்றால் ஒருவாரம் ஆனாலும் திரும்ப முடியாது.
Delhiஐ பூரணமாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு Delhi A thousands year of building என்பதில் இருந்து குறைந்தபட்சம் ஐம்பது நல்ல நூல்கள் இருக்கின்றன. அதைப் படிக்கையில் தான் மதுரைக்கு இப்படி ஒரு நூல் கூட இல்லையே என்ற ஆதங்கம் மேலிட்டது. இரா.முருகவேளின் புனைப்பாவை அந்தவகையில் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட நூல். சமீபத்தில் வெளிவந்தது. மதுரை பலமுறை அதன்வளத்திற்காகத் தாக்கப்பட்ட ஊர். அதன் முழுமையான ஆயிரம் ஆண்டுகால சரித்திரம் ஆதிமக்கள் யார் வந்தேறிகள் யார் என்பதை விளங்கிக்கொள்ள உதவியானதாக இருக்கும். பிட்டுக்கு மண் சுமந்த காலத்தில் இருந்து இருந்தாற்போல் மங்கம்மாள் சத்திரமும் நகரின் மையத்தில் இருந்து கொண்டு இருக்கிறது.
இந்த சிறிய நூலிலேயே கல்வெட்டுகள் சிதைந்தது, புதைந்தது, பாதி அழிந்தது என்று பலமுறைகள் வருகிறது. வந்தவர் எல்லாம் கோயிலை சிற்பங்களை அழித்தனர். எஞ்சியவையே நம் பண்பாட்டு எச்சங்கள். அதையும் Archaeological Survey of India முக்கியத்துவம் கொடுத்துச் செய்யும் என்று சொல்ல இயலாது. பாலியல் வல்லுறவு, விவசாயப்போராட்டம் என்று எதுவானாலும் வடக்கில் ஆரம்பித்தது என்றால் தான் நமக்கும் ஒரு மரியாதை. James A. Michenerன் Poland novel படித்துப்பாருங்கள். அதற்காக பலமுறை Poland சென்றார். அப்படி நம்மை எழுதவும் ஆளில்லை. இந்த சூழ்நிலையில் பாரூக்கின் இந்த நூல் போன்ற நூல்களுக்கு வாசகர்கள் அளிக்கும் ஆதரவே வரலாற்றை மீட்டெடுக்கும் ஆரம்பப்புள்ளியாக அமையும்.
தமிழ்கட்டுரைநூல்கள்
பிரதிக்கு :
டிஸ்கவரி புக்பேலஸ் 87545 07070
முதல்பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 180.