ஆவநாழி டிசம்பர் 2020 – சிறுகதைகள்:
டெர்ரரிஸ்ட் – கே.ஆர்.மீரா- தமிழில் அரவிந்த் வடசேரி:
மீராவின் Poison of love தான் எனக்கு முதலில் அறிமுகம். பின்னர் Hangwoman. மீதிப் புத்தகங்கள் கிண்டிலில் படிக்காமல். ஆணெழுத்து, பெண்ணெழுத்து என்ற வித்தியாசமே மேலை நாடுகளில் கிடையாது. தென்னிந்தியாவில் அந்த வித்தியாசம் இல்லாது எழுதும் வெகுசிலரில் மீராவும் ஒருவர்.
தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு, அடி உதைக்கு ஆளாகி வெளிவந்த ஒரு பல்கலையின் வரலாற்று ஆசிரியரின் Hallucinations தான் கதையே. அத்துடன் அரசியல் Satireம் கலந்திருக்கிறது. அதிகாரிகள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எதைச்சொல்லி வேண்டுமானாலும் குற்றம் சாட்ட முடியும் என்பது இந்தியாவில் மட்டும் நடக்கும் விசயமில்லையே!
மீராவின் கதைசொல்லல் எப்போதுமே Intenseஆனது. இந்தக்கதையிலும் அது வெளிப்படுகிறது. கதையின் தரம் நவீன உலகக்கதைகளின் தரத்தை ஒத்து இருக்கிறது. மீராவின் கதைகள், நாவல்கள் எல்லாமே தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். நாம் வாழும் காலத்தில் நம்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் இவர். அரவிந்த் வடசேரியின் மொழிபெயர்ப்பு தடங்கல் இன்றி படிக்க இனிமையாய் இருக்கிறது. தொடர்ந்து மொழிபெயர்ப்பு செய்யுங்கள், தமிழ் இலக்கியத்திற்கு உங்கள் சிறந்த பங்களிப்பாக இருக்கும்.
தாசிமரம்- வளவ துரையன்:
தி.ஜாவின் வீடு குறுநாவல் போல் முதல் கதை. பின்னர் மலர்மஞ்சம் பாலியின் தகப்பனார் நான்கு மணம் முடித்து ஒருவரும் தங்காமல் ஆன்மீகத்தை நாடுவதன் சாயலில் இரண்டாம் கதை. இரண்டு கதைகளையும் இணைக்கும் சங்கிலியாக நாட்டார் வாய்மொழிக் கதையாய் தாசிமரம்.
அங்காடி நாய்- நாஞ்சில் நாடன்:
ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை வாய்விட்டு சிரிக்க வைக்கும் கதை. கதை என்று இதை சொல்ல முடியாது. என்னென்ன சொல்ல வேண்டுமோ எல்லாவற்றையும் சொல்லி விட்டார். என்ன ஒரு Spontaneous flow! என்ன தான் கிண்டலாக இவர் எழுதியிருந்தாலும் அமைதி விரும்புவோர் இந்த வார்த்தையைத்தான் உபயோகிக்க வேண்டும் என்ற உண்மையும் இப்போது இருக்கிறது. பட்டினத்தார் பாடல் வரிகளிலும் வார்த்தையை மாற்றி விடுவார்களோ! நாஞ்சில்நாடன் has become unstoppable.
அங்கூரி- அம்ரிதா ப்ரீதம்- தமிழில்- அனுராதா கிருஷ்ணசாமி:
என்ன ஒரு அழகான கதை. கிராமத்துப் பெண்ணின் நம்பிக்கைகளை வைத்துச் சொல்லப்படும் கதை, பெண் சமூகத்தால் ஒரு நுகரும் பொருள் போல் நடத்தப்படுவதை சொல்கிறது. பெண் படிக்கக்கூடாது, காதலிக்கக் கூடாது, கணவன் வயதானவன், அழகில்லாதவன் என்றாலும் வீட்டில் முடிவுசெய்தால் அவனே தெய்வம்.
கிராமத்தில் இருந்து அதே மனநிலை, நம்பிக்கைகளுடன் வந்த அங்கூரி, அவளறியாமலே நகைகள் அணிவது, முகத்திரை விலக்குவது என்று ஆரம்பிக்கிறாள். பொருந்தாத ஜோடி என்பதும், அவளது அழகு பற்றியும் கதைசொல்லியால் சொல்லப்படுகிறது. இப்போது அங்கூரிக்கு கடிதம் எழுதும் அளவாவது எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இயல்பான அழகுடன் கதைசொல்லல். அந்த அழகு சிறிதும் கலையாத அனுராதா கிருஷ்ணசாமியின் மொழியாக்கம். மனதுக்கு நிறைவைத் தந்த கதை.
ஆவநாழியின் இந்த இதழில் ஆர்த்தி சிவாவின் நெடிய சிறார்கதை ஒன்றும், பிற கட்டுரைகளும் வந்துள்ளன. இந்த இதழின் சிறப்பு சாரு, ஜெமோ, எஸ்.ரா ஆகிய மூவரையும் குறித்த கட்டுரைகள். ஆரம்பநிலை வாசகர்களுக்கு இவர்களைக் குறித்த புரிதலை அளிக்கும் கட்டுரைகள். மாதம் ஆரம்பித்ததும் தேடும் இலக்கிய இதழ்களில் ஒன்றாக ஆவநாழி இடம் பிடித்துவிட்டது.
https://drive.google.com/file/d/17SE-W1dXT9fmsQeeIYVUwhnhZ0tbFSRP/view