The Midnight Library – Matt Haig;
Matt யார்க்க்ஷையரில் பிறந்த ஆங்கில நாவலாசிரியர். சிறுவருக்கும் பெரியவர்களுக்கும் பல நாவல்கள் எழுதிய இவர் அல்புனைவு நூல்களும் எழுதியுள்ளார். சென்ற வருடம் வெளியான இந்த நூல் கடந்த ஒருவருடமாக உலகப்புத்தகக் குழுக்களில் தொடர்ந்து பேசப்பட்டுவரும் நூல்களில் ஒன்று. Goodreads அதிகம் படிக்கப்பட்ட 2020 நாவல்கள் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற நூல் இது.
நோரா யாருக்கும் தேவையில்லை. உடன் பிறந்த சகோதரன், காதலன், நண்பர்கள் யாருக்குமே அவள் தேவையில்லை. அவள் வாழ்க்கையில் எல்லாமே பிழைகள். எல்லா முடிவுகளும் அபத்தம். ஒவ்வொருநாளும் அவள் நினைத்ததற்கு எதிர்மறையானவை. நீச்சல் வீராங்கனை, பாடகி, தத்துவவாதி, மனைவி, ஊர்சுற்றி, பனிப்பாறை ஆராய்ச்சியாளர், மகிழ்வானவள், விரும்பப்பட்டவள்……… ஒன்றுகூட நடக்கவில்லை. சமூக ஊடகங்களில் கூட அவளுக்கு செய்தியோ, எதிர்வினையோ, புதிய நட்பழைப்போ எதுவுமில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவள் யாருக்கும் வேண்டியதில்லை. நோரா தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டாள்! ஆனால் அவளுக்குத் தெரியாதது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஒன்று இருப்பது.
திரிசங்கு சொர்க்கம் என்று சொல்கின்றன நம் புராணங்கள். இந்நாவலில் வாழ்விற்கும் இறப்பிற்கும் நடுவே ஒரு நூலகம். அதில் புத்தக அலமாரிகள் முடிவில்லாமல். ஒவ்வொரு புத்தகமும் நாம் வாழாத வாழ்க்கை ஒன்றை முயலும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது. நீங்கள் வேறு தேர்வுகள் செய்திருந்தால் வாழ்க்கை எப்படி வித்தியாசமாக அமைந்திருக்கும் என்று பார்க்கலாம்…..நீங்கள் வித்தியாசமாக ஏதும் செய்திருந்தால், வாழ்நாள் வருத்தத்தைப் போக்கும் சந்தர்ப்பமாக இருந்திருக்கலாம் அல்லவா?
வருத்தம் என்பது ஒரு உணர்வா இல்லை மனப்பான்மையா? பிரியமானவர் இறந்தால் வருத்தம், அன்று அவர்கள் இறக்கவில்லையென்றால் பத்துவருடங்கள் படுக்கையில் மலஜலம் கழித்து அல்லலுற்று இறப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால் இப்போது அதே வருத்தம் இருக்குமா!
12 B திரைப்படம் இரண்டு Possibilities பற்றி மட்டும் பேசியது. ஆனால் இந்த நாவல் Infinite possibilities பற்றி பேசுகிறது. பெற்றோர் பார்த்ததோ இல்லை நீங்கள் தேடிக்கொண்டதோ ஆனால் இப்போதைய துணை இல்லை. வேறு இல்லை வேறு இல்லை வேறு….. அது போல் மில்லியன் கணக்கில் வாழ்க்கைகள். Choices….. infinite choices. You can choose choices but not the outcome. அதில் தான் இந்த நாவல் பயணிக்கிறது.
நோரா பல வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கிறாள். அவளுடைய அசலான வாழ்க்கையில் அவள் தத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவள். அவளுடைய Favourite, Thoreau. அதனால் அவரது Quotes அடிக்கடி நாவலில் வருகின்றது. ” Two roads diverged in a yellow wood, And sorry I could not travel both” என்றிருப்பார் Frost.
பாதைகள் இரண்டு சந்திப்பதும்…அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்… என்றிருப்பார் கண்ணதாசன். சிறுவயதில் பென்சிலில் எழுதிய தப்பான விடையை அழிப்பானால் அழித்த தடம் தெரியாது, தாளும் கிழியாது செய்தது போல் வாழ்க்கையிலும் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
Life Begins on the other side of despair- Sartre
https://www.amazon.in/dp/B08543NK7K/ref=cm_sw_r_wa_apa_glt_FF88VQSMXKHY8WEW4M8K