கல்கத்தா நாட்கள் – நர்மி:
ஆசிரியர் குறிப்பு:
நர்மி என்ற நர்மியா மதுரையில் பிறந்தவர். கல்கத்தா ஜதவ்பூர் பல்கலையில் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர். இவரது கல்கத்தா வாழ்க்கையின் நினைவுகள் குறித்த நூல் இது.
கல்கத்தா நகருக்கு நிறைய நூல்கள் வந்துள்ளன. எல்லோருக்கும் தெரிந்த Dominique Lapierreன் City of Joyல் இருந்து
Kushanava Choudhuryன் சமீபத்திய Epic City வரை ஏராளமான நூல்கள். அந்த வரிசையில் தமிழில் கல்கத்தா நகர் குறித்து வெளிவரும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும்.
“அப்பாழ்க் கட்டிடம்
வீட்டின் லட்சணங்களை விட்டிருக்கிறது.
துக்கம் விசாரிக்க
ஒரு சருகு உள்ளே செல்கிறது
அரக்கு முத்திரையை மதியாமல்”
என்ற அகச்சேரனின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது இவரது கல்கத்தா வீடுகள் கட்டுரையைப் படித்ததும். பாழடைந்த வீடுகள் சங்கடஉணர்வை எழுப்புவை. எத்தனையோ ஆசைகள், இன்ப துன்பங்கள் வெற்றிதோல்விகளுக்கு மௌனசாட்சி அந்த இடிந்த வீடுகளின் சுவர்கள்.
கல்கத்தாவின் வீதிகள் இன்னொரு முக்கியமான கட்டுரை. இந்தியாவில் எங்குமே தெருவில் வசிக்கும் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. நல்ல நுட்பமான பார்வையுடன் எழுதப்பட்ட கட்டுரை இது.
கல்கத்தாவில் இவர் மனதுக்கு நெருங்கிய இடங்கள் என்று, ஹவுரா பாலம், குமர்துளி, இந்தியன் மியூசியம், தாகூர்பாரி, டார்ஜிலிங், சாந்திநிகேதன் முதலியவற்றைக்குறித்து இவரது பாணியில் எழுதியிருக்கிறார். விஷ்ணுபூர் கட்டுரை ஆரம்பத்தில் இருந்து பரபரப்புடன் படிக்க வைப்பது. மிகமிகச் சிறிய நூல் இது. என்றேனும் ஒரு நாள் இவர் கல்கத்தா குறித்தோ வேறு எதையுமோ விரிவாக எழுதக்கூடும். தொடர்ந்து எழுத வேண்டும். இவரது முன்னுரையில் கூறியது போல் கல்கத்தாவுடனான ஆத்மார்த்த பிணைப்பு இவரை இந்த நூலை எழுத வைத்திருக்கிறது. கல்கத்தாவை நேசித்த எழுத்தாளர்கள் நிறையப்பேர். சமீபத்தில் தஸ்லிமா நஸ்ரின்.
பிரதிக்கு;
உயிர்மை பதிப்பகம் 044- 48586727
முதல்பதிப்பு டிசம்பர் 2019
விலை ரூ.70.