ஆசிரியர் குறிப்பு:
கோவையில் பிறந்தவர். அரசியல் கோட்பாட்டாளர், சினிமா விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்.
ஒவ்வொரு பிரிவிலும் இவர் எழுதிய நூல்கள் பத்துக்கும் மேல். இந்த நூல் சமகால குர்திஸ் கவிதைகள் மொழிபெயர்ப்பு.
இந்தப்புத்தகக்காட்சியில் பார்த்ததும், பிரிக்கக்கூட இல்லாமல் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று இது. முதலாவதாக வெளிவருகையில் தவற விட்டிருக்கிறேன். இதுவரை குர்திஸ் இலக்கியம் குறித்துப் படித்ததுமில்லை, யாரும் பேசிக் கேட்டதுமில்லை, அதுவே இந்த நூலை உடன் வாங்கத் தூண்டியது.
சுருக்கமாகச் சொன்னால் துருக்கி, ஈராக், ஈரான், சிரியா ஆகிய நான்கு நாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு சுயம் தொலைத்தவர்கள் குர்திஸ் மக்கள். இது போதாதென்று அமெரிக்க, ரஷ்ய, இஸ்ரேல் நாடுகளின் கைங்கரியமும் இடையிடையே. தலைப்பின் படி கவிதைகளை மட்டும் மொழிபெயர்க்காது கூடுதல் புரிதலுக்காக, குர்திஸ் வரலாறு ஏழாம் நூற்றாண்டிலிருந்து விரைவான ஒரு பார்வையாய் ஓடுகிறது. அடுத்து குர்திஸ் விடுதலை இயக்கமும் வளர்ச்சியும். பின் எல்லா நாடுகளாலும் கைவிடப்பட்ட குர்திஸ் மக்கள். விடுதலைப் போராட்டத்தைத் துவக்கிய ஒச்சலான் மரணதண்டனையை எதிர்நோக்குவது, மரணதண்டனை குறித்த விவாதங்கள். கிட்டத்தட்ட நூலில் பாதியளவு. இப்போது நீங்கள் குர்திஸ் நிலம் குறித்து அறிதல் கொள்கிறீர்கள். 2007ல் எழுதிய முன்னுரையில் ” இம்முறையும் மரணத்தை வென்று ஒச்சலான் எழுந்து நிற்பார் என நம்புகிறோம்” என்று எழுதியிருக்கிறார். ஆம் தப்பிவிட்டார்.
மலைகளால் சூழ்ந்த பகுதி ஆதலால் இந்தத் தலைப்பு. இருபத்தோரு கவிஞர்களின் ஐம்பத்தேழு கவிதைகள்.
எங்கெல்லாம் ஒரு இனம் அழிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பெயரை மட்டும் மாற்றினால் போதும். இந்தக்கவிதை அப்படியே பொருந்தும்.
” இந்த உலகின் வரைபட வடிவத்தை
முழுக்கவும் நீ சுவடேயில்லாமல்
அழித்துவிட்டாலும் கூட
இன்னும் இந்த பூமியை நீ ஒரு
சின்னாபின்னமான நூலுருண்டையாக
கட்டுடைப்பு செய்தாலும் கூட
எப்போதெல்லாம் எல்லைகள்
மறு வரையறை செய்யப்படுகிறதோ
அப்போதெல்லாம் இந்த நகரத்திற்கு
நான் மறுபடியும் வருவேன்
குர்திஸ்தானில் மட்டுமே என்
சொந்த வீட்டை அமைத்துக்கொள்வேன்”
குண்டு வெடிப்புகளும், மரணங்களும், வன்முறைகளும், அடக்குமுறையும் இருந்தாலும் காதல் என்ற மாயத்தை எதுவும் செய்ய முடிவதில்லை. “கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்” என்ற கண்ணதாசனின் அதே உணர்வு குர்திஸ் மொழியிலும் எதிரொலிப்பதைப் பாருங்கள்:
” எனது கனவில் நான் உனது
கூடாரத்திற்கு வருகிறேன்
எனது நாடோடிக்கூடையில் மலையில்
கேட்ட பெண்பறவைகளின் பாடல்களை
நிறைத்துக்கொண்டு வருவேன்
இனிய ஊதாப்பூக்கள் கொண்டு
மஞ்சள் வண்ணக்கொடிகளாய்
என் இருகரம் கோர்த்து
உனக்காக ஒரு படுக்கை செய்வேன்”.
பல்வரிசை முல்லை என்றார் கன்னி இளமானே! பாடும் வண்டாய் நான் வரவா கன்னி இளமானே!
” உடம்பினதும் ஆன்மாவினும்
மூடிய கதவுகள் அனைத்தையும்
அகலத் திறக்கும்
அது ஒரு பசுமை நிறச்சாவி”
ஒரு கலாச்சாரம் அழிவது என்பது இப்படித்தான். மொழியை, பழக்கவழக்கங்களை,நம்பிக்கைகளை அழித்தால் போதும், கலாச்சாரம் அழிந்துவிடும்.
” சரளமான ஆங்கிலத்திலும் அரைகுறை
குர்துவிலும் என் குழந்தைகள்
தமக்குள் பேசிக்கொள்வதை
நான் கேட்டிருக்கிறேன்
எப்போதெல்லாம் நான் அவர்களோடு
முரண்படுகிறேனோ அப்போதெல்லாம்
அவர்கள் ஒருவரையொருவர்
சமாதானப்படுத்திக் கொள்வார்கள்
அம்மாவைப்பற்றி அதிகம் கவலைப்படாதே
அவள் குர்திஸ்காரி
எனது வீட்டிலேயே நான்
அந்நியநாட்டவளாகி விட்டேனா”
கவிதைகளில் சொல்வதைப் போல் வலியையும், வேதனையையும் வேறு எதன் மூலமும் சொல்வதும் கடினம். குர்திஸ் கவிஞர்களின் வலிமிகுந்த வரிகளில் அவர்கள் உணர்வுகளைச் சொல்லி இருக்கிறார்கள். அம்மாவை, குழந்தையை சமாதானப்படுத்துவது போல் தன்னையும் சமாதானம் செய்து கொள்கிறார்கள். நூறு ஆண்டுகளுக்கும் மேல் அடக்குமுறையை அனுபவிக்கும் மக்கள்.
வழமை போலவே யமுனா ராஜேந்திரன் இந்த நூலுக்கும் பலரது உதவியைக் கோரி, பல்வேறு தகவல்களைத் திரட்டி இருக்கிறார். இலண்டனில் இயங்கும் குர்திஸ் தகவல் நடுவத்தின் ஆவணக் காப்பகத்தை உபயோகித்திருக்கிறார். (கூகுளை அல்ல). அந்த அர்ப்பணிப்பு தொகுத்த கவிதைகளில் எதிரொலிக்கிறது. மொழியே தெரியாவிட்டாலும் கதறுகிறார்கள் என்பது யாருக்கும் புரியும் இல்லையா!
2007ல் இரண்டாம் பதிப்பாக வந்த நூலை முதல்முறையாகப் படித்து 2021ல் புதியநூல் போல் எழுத உண்மையிலேயே கூச்சமாக இருக்கிறது. எழுத வேண்டாம் படித்ததே போதும் என்று கூட நினைத்தேன். பின் குர்திஸ் மக்களைக் குறித்து அறிய விரும்பும் யாருக்கேனும் உதவக்கூடும் என்ற ஒரே நோக்கத்தில் இந்தப்பதிவை எழுதுகிறேன்.
பிரதிக்கு:
உயிர்மை பதிப்பகம் 044- 24993448
முதல்பதிப்பு டிசம்பர் 2007
விலை ரூ.100.