ரிச்சர்ட் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர். நவீன அறிவியலையும் புனைவையும் கலந்து எழுதுபவர். இதுவரை பன்னிரண்டு நாவல்களை எழுதியுள்ளார். புலிட்சர் பரிசை 2019ல் வென்றவர். புக்கர் பட்டியலுக்கு இவர் வருவது மூன்றாவது முறை. இந்த நாவல் புக்கரின் இறுதிப் பட்டியலுக்கும், National book awardன் முதல் பட்டியலுக்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்துள்ளது.
தியோ வேறு கிரகங்களில் இருக்கும் கனிமங்களையும், உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வுசெய்யும் விஞ்ஞானி. அவனது பன்னிரண்டு வருட காதல் மனைவி அவனையும், ஏழுவயது மகனையும் விட்டுவிட்டு கார்விபத்தில் இறந்து சிலமாதங்களிலேயே அவள் பிரியமாக வளர்த்த நாயும், இறந்துவிட சிறுவன் ராபின் கடுமையாக மனரீதியாகப் பாதிக்கப்படுகிறான். அவனுக்கும் அவனது அப்பாவுக்கும் நடக்கும் உணர்வுப் போராட்டமே இந்த நாவல்.
செயற்கை அறிவாற்றல் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த தாயின் உணர்வுகளை மகனுக்குக் கடத்தும் தொழில்நுட்பத்தை (brain mapping) வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. எளிதில் வன்முறையில் இறங்கும் சிறுவன், தாயின் பொறுமையான குணத்தைப் பெறுவதுடன், தாயின் பொழுது போக்கான, பறவைகள் குறித்த அறிவையும் பெறுகிறான்.
சுற்றுச்சூழலியல் குறித்த நாவல் இது. பல வனவிலங்குகள் இந்த பூமியை விட்டு இல்லாது போனாலும் அது குறித்த பிரக்ஞை இல்லாது தொடர்ந்து அழிக்கும் மனிதர்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டுவர சிறுவன் போராடுகிறான். பூமியில் 98 சதவீதத்தை ஆக்கிரமித்துக் கொண்ட மனிதர்கள், இரண்டு சதவீதம் இடம் மட்டுமே கொண்ட வனவிலங்குகளை அழிக்க நினைப்பது நியாயமில்லாதது என்று பொதுமக்கள் ஆதரவைக் கோருகிறான்.
பெயரை எங்கும் சொல்லாத போதும் டிரம்ப் இரண்டாம் முறையாகப் பதவிக்கு வந்து, முதல்முறையை விட பலமடங்கு சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார். கிரகங்கள், வானவெளி ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பின் மூலம் நோய் தீர்க்கும் ஆராய்ச்சி எல்லாமே ஏமாற்று வேலை என்று தடைசெய்யப் படுகின்றன. புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.
முந்நூறு பக்கத்திற்கு சற்றே குறைவான நாவலில், அப்பாவும் மகனும் பேசிக்கொள்வதே தொன்னூறு சதவீதம். அவர்கள் நினைவில் மனைவி/அம்மா வருகிறாள். ரிச்சர்ட் மிகத்திறமைசாலியான எழுத்தாளர். மனைவி மேல் ஏன் சந்தேகம் வருகிறது, அது உண்மையா இல்லையா என்பது போன்ற பகுதிகள் நுட்பமாகக் கடந்து செல்கின்றன.
குழந்தையை வளர்க்க, பதில்சொல்ல முடியாது தந்தை திணறுவதுடன் பணியிடத்தில் எழும் பிரச்சனைகள், மகனால் பள்ளியில் ஏற்படும் பிரச்சனைகள்
போன்ற விசயங்களின் பின்னால் இந்த பூமிக்கு, சுற்றுச்சூழலுக்கு, விலங்குகளுக்கு நாம் இழைக்கும் தீங்குகளையும் சொல்லிக் கொண்டே செல்கிறது இந்த நாவல். மிகுந்த இலக்கியநுட்பத்துடன் எழுதப்பட்ட நாவல் இது. புக்கர் விருது பெற சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள நாவல்.