ரஸாக் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இருபது வயதில் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்தவர். ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இதுவரை பத்து நாவல்கள் எழுதியுள்ளார். 2021 ஆம் வருட நோபல் பரிசை வென்றவர். இந்த நாவல் 1994 புக்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது. இவரது சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது.

யூசுப் பன்னிரண்டு வயது சிறுவன். அவன் தந்தைக்கு, இரண்டாம் மனைவியின் மூலம் பிறந்தவன். வீதிகளில் திரிவதும் அவ்வப்போது அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவுவதுமாய்ப் பொழுதைக் கழிக்கும் அவனுக்கு அவனுடைய மாமா அஸிஸ் வீட்டுக்கு வந்து போகும் தினங்கள் மகிழ்ச்சியானவை. அவர் விடைபெறுகையில் யாருக்கும் தெரியாமல் அவன் கையில் பத்தணாவைத் திணிப்பது தான் அதற்குக் காரணம். அந்தக்காசை அவனே செலவழிப்பதும் அடுத்து மாமாவின் வரவிற்குக் காத்திருப்பதும் அவனுக்குப் பிடித்தமான விசயம். அவன் சிறுவன் என்பதால் அவனுக்குத் தெரியாத விசயங்கள் பல. முதலில் அஸிஸ் அவனுக்கு மாமா இல்லை. அவன் அப்பாவிற்குக் கடன் கொடுத்தவர். அவன் அப்பாவால் அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் அவனை பணத்திற்குப் பதில் அடிமையாக வீட்டுவேலை செய்யக்கூட்டிப் போகப் போகிறார். ஒருவேளை அவன் பெற்றோரைப் பார்ப்பது அதுவே கடைசி முறையாக இருக்கக்கூடும்.

தான்சானியாவின் வரலாறு கற்காலத்துக்கு முன்பே நீள்கிறது. பல தொல்பொருள் ஆராய்ச்சிகள் இந்த நாட்டின் பழம்பெரும் பண்பாட்டை நிரூபிக்கும். இந்த நாவல் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்துக்கு, முதல் உலகப்போருக்கு சற்று முன்பிருந்து ஆரம்பிக்கிறது. சொந்த நாட்டினரிலேயே பணக்காரர்கள் கடன்பிணையாக சிறுவர், சிறுமிகளை அடிமையாகக் கொண்டு செல்கின்றனர். ஐரோப்பாவிலிருந்து வெகுசிலரே கிழக்கு ஆப்பிரிக்கநாடுகளில்
தங்கியிருந்த காலமது. அவர்களும் உள்ளூர் மக்களின் மூச்சுக்காற்று படக்கூடாது, கண்முன் வரக்கூடாது என்று ஆணைகள் பிறப்பிக்கின்றார்கள்.

ஆப்பிரிக்காவும் மூடநம்பிக்கைகளில் இந்தியாவுக்குக் குறைந்தது அல்ல. வியாபாரிகளின் வருகையினால், ஊரில் மரணம் நிகழ்கிறது, பயிர் விளையவில்லை, வளர்ப்பு மிருகங்கள் இறக்கின்றன, இயற்கையின் சீற்றம் ஏற்படுகிறது என்கின்றனர். அது போலவே வியாபாரிகள் அவர்கள் ஊரைக் கடக்க விடுவதற்குப் பரிசுகள் என்ற பெயரில் வாங்கும் லஞ்சங்கள்!

காலனி ஆதிக்கத்தில் ஒரே பாணியையே எல்லா நாடுகளிலும் கையாண்டிருக்கிறார்கள். முதலில் சண்டை போடுபவர்கள் இருவருக்கும் சமாதானத்தை ஏற்படுத்தி உள்ளே நுழைவது. பின்னர் அவர்களுக்கிடையே பகைமையை வளர்ப்பது என்ற ஒரே Template தான். இந்த நாவலில் வரும் ஜெர்மானியன், Chatuஐ மிரட்டும் வார்த்தைகள் எவ்வளவு கனமானவை! இந்த அரசாங்கத்தின் சட்டத்தை மதிக்கத் தெரியாதா என்ற கேள்வியில் அவர்கள் அரசாங்கமே Supreme authority என்பதை நிறுவியாகிவிட்டது.

ரஸாக்கின் கதைசொல்லல் கிட்டத்தட்ட Achebeன் Linear narrative style. அவர் போலவே கதாபாத்திரங்களை அமைப்பதுவும். நாற்பது பக்கங்களை கடக்கும் முன்பே நாம் கிழக்கு ஆப்பிரிக்காவில், முதல் உலகப்போருக்கு முந்தைய காலத்தில் யூசுப் என்ற சிறுவனுடன் பயணம் செய்யத் தொடங்குகிறோம். இவரது மொழிநடை அற்புதமானது, வாசகரைக் கைப்பற்றி அழைத்துச் செல்வது. இந்த நாவலில் காலனி ஆதிக்கத்தின் முன்பு யானைக்கு முன் வரும் மணியோசையை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். அடிமைத்தனமும், குழந்தைகள் வாழ்க்கை ஒரே நாளில் திசைமாறி எங்கெங்கோ பயணிப்பதையுமே, ஒரு சிறுவனின் கதை மூலம் இதில் அதிகம் சொல்ல எண்ணியிருக்கிறார். ஒருநொடியில் செய்யும் முடிவுகள் வாழ்க்கையின் போக்கையே மாற்றுகிறது. இலக்கியம் அதையே பிரதிபலிக்கின்றது. நாவலின் கடைசி வரி சற்றும் எதிர்பாராதது. உலக அளவில் இதையே இவரது சிறந்த நாவலாகக் கூறுகிறார்கள். Achebeன் அளவிற்குக் கலைநுட்பம் இல்லை என்றாலும் எனக்கு ஏனோ அவரது சாயலே இந்த நாவலைப் படிக்கையில் தெரிகிறது.
இவரது மற்ற நாவல்களையும் வாசிக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s