ஆசிரியர் குறிப்பு:
ஸர்மிளா இலங்கையில் கிழக்கு மாகாணம் ஏறாவூரில் பிறந்தவர். சமூகச் செயல்பாட்டாளர். பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். ஏற்கனவே நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள இவரது முதல் சிறுகதைத்தொகுப்பு இது.
ஊழித்தீ தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று. ஒடுக்கப்பட்ட காமம் தான் ஊழித்தீயாய் பேருரு எடுக்கின்றது. இருவர் இந்தக் கதையில். ஒருவர் Aggressor மற்றொருவர் Victim. ஆனால் இருவர் மேலுமே பரிதாபம் எழும்படி செய்தது தான் கதாசிரியரின் திறமை. மரியத்தின் பயத்தை, அவமானத்தை, குற்ற உணர்வை முழுதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. சற்று நீட்டியிருந்தாலும் மரியத்தின் உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது போயிருக்கும்.
“உசேன் நாளைக்கு வருவே தானே” என்ற குரலில் நிரம்பியிருக்கும் எதிர்பார்ப்புகள் இல்லாத துயரம்.
நமது பாட்டிகளின் சிறுவயதில், அவர்களுக்கு மணமாகியும் பெற்றோருக்கு
குழந்தை பிறப்பது நடந்திருந்திருக்கிறது.
அம்மாவிடம் பால் இல்லை என்று தம்பிக்கு, அக்கா பால்கொடுத்ததும் நடந்திருக்கிறது. இன்றும் மேலைநாடுகளில் அம்மா அல்லது அப்பாவின் தனிப்பட்ட வாழ்க்கையை, தங்களது கௌரவத்துடன் சம்பந்தப்பட்ட விசயமாகப் பிள்ளைகள் நினைப்பதில்லை.
நாம் தான், பெற்றோரை, குறிப்பாக அம்மாவை தியாகபீடத்தில் இருந்து இறக்கிவிட சம்மதிப்பதில்லை. ஸர்மிளா அக்கினிக்குஞ்சு கதையில் இதை அழகாகக் கொண்டு வந்திருக்கிறார்.
முஸ்லீம் பெண்கள் முகத்தைக் கண்டிப்பாக மூட வேண்டும் என்பதை எதிர்ப்பதைக் கருவாகக் கொண்ட வேற்றுக்கிரகவாசிகள் கதை சரியான நேரத்தில் வந்திருக்கிறது. பெண் கார் ஓட்டக்கூடாது, இந்த வேலைகள் பார்க்கக்கூடாது, இப்படி உடை உடுத்த வேண்டும் என்று மற்றவர்கள் எப்படி கட்டுப்பாடு விதிக்கமுடியும். அந்நியப் பெண்ணை கை வெளியில் தெரிந்தது, கால் வெளியில் தெரிந்தது என்று Moral policing செய்து அவளை அடிப்பது என்பது இன்றும் பல நாடுகளில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பு சம்பந்தப்பட்ட பெண்களிடம் இருந்து வரவேண்டும். மற்றவர், மாற்று மதத்தினரிடமிருந்து இல்லை.
செம்புலப்பெயல் நீரும் மற்றுமொரு நல்ல கதை. இரண்டு மதத்தினரின் வழக்கத்திற்கு மாறான நட்பையும், துரோகமா! இல்லையா! என்று கடைசிவரை வெளிப்படுத்தாது கதையைக் கொண்டு போயிருப்பதும் நன்று.
பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பில் சராசரித் தரத்திற்கும் கீழான கதைகளும் இருக்கின்றன. இருசி கதையை கொஞ்சம் முயன்றிருந்தால் அழுத்தமாக எழுதியிருக்க முடியும். இஸ்லாமிய நாடுகளில் வேலைபார்க்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் என்பது அதிகம் பேசப்படாத கதைக்களம். அது போலவே சில கதைகள் வாரமலர் கதைகள் போல் பெண்ணியம் பேசி முடிகின்றன. நாவல்களில் இருக்கும் Flowவை சிறுகதைகளில் கொண்டுவர ஆழமான கதைக்கருக்களை இவர் தேர்ந்தெடுக்க வேண்டும். மொழிநடை சிறப்பாக இருக்கிறது, அதே போல் பூசிமெழுகி ஒரு வார்த்தைக்கு நாகரீகமுலாம் கொடுக்கும் மனத்தடைகள் இவருக்கு இல்லாததையும் பாராட்ட வேண்டும்.
பிரதிக்கு :
கருப்புப் பிரதிகள் 94442 72500
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 175