ஆசிரியர் குறிப்பு:
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர். தொழிலாளியாக, தொழில் முனைவோராக இருந்து சிறுவிவசாயியாக இருந்து வருகிறார். இசையோடு வாழ்பவன் என்ற கவிதைத் தொகுப்பை ஏற்கனவே வெளியிட்டவர். இது இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு.
திருப்பூர் கனவுகளை விதைக்கும் சிறிய நகரம். திருப்பூர் Knitwear ஏற்றுமதி மட்டுமே 4 பில்லியன் டாலர் (மொத்த இந்திய ஏற்றுமதியில் 1%, இந்திய மதிப்பில் 32800 கோடி ரூபாய்க்கு மேல்). திருப்பூரில் கோடிக் கணக்கில் வியாபாரம் செய்யும் பல முதலாளிகள் அல்லது அவர்களது தந்தைகள் கூலி வேலைக்கு வந்தவர்கள். இப்போது திருப்பூர் வருபவரும், என்றாவது பனியன் கம்பெனி வைத்து பணக்காரனாகி விடவேண்டும் என்ற கனவுகளுடன் வருபவர்கள். இந்தத் தொகுப்பு திருப்பூரில் பனியன் கம்பெனி வேலை அல்லது விவசாயம் செய்து பிழைக்கும் மனிதர்கள் பற்றிய கதைகள்.
ஏழு பிள்ளைகள் பேரன் பேத்திகள் எல்லாம் பார்த்து கடைசியில் யாருக்கும் வருத்தமில்லாது போய்ச்சேரும் கிழவர், விவசாயத்தில் இறங்கி கடன் கட்ட முடியாது பூர்வீக நிலத்தை விற்பவர்கள், மஞ்சள் கயிறு மட்டுமே அணிந்த மனைவியை வெளியே கூட்டிச் செல்லக் கூச்சப்படுபவர்கள், புல்லர் ஸ்டார்ட் செய்யத் தெரியாத சபதத்தை நிறைவேற்றிக் கொண்டவர்கள், சிற்றூர்களிலும் விரவிக் கிடக்கும் Infertility clinicகளில் நம்பிக்கையை மீட்டெடுப்பவர்கள், மாமனாரின் சொத்தை அனுபவிக்கக்கூடாது என்று கங்கணம் பூண்டவர்கள், அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையே அல்லாடுபவர்கள், திருமணம் தகைய வேண்டுமென்று மூட நம்பிக்கைகளில் ஆழ்பவர்கள், என்ற எளிய மனிதர்களின் மிக இயல்பான கதைகள் இவை.
ஆரெக்ஸ் கதையும் இராசேந்திர சோழனின் இசைவு கதையும் ஒரே விஷயத்தையே பேசுகின்றன. முன்னது பேரன் பேத்திகள் எல்லாம் வாழ்ந்து பார்க்க நீடூழி வாழ்வாய் என்கிறது. பின்னது பிள்ளைகள், பேரன் பேத்திகள் எல்லார் மரணத்தையும் பார்த்து நொந்து சாவாய் என்கிறது. திருப்பூர் பனியன் தொழிலின் நடப்புகள் பற்றி மட்டுமில்லாது ஆரெக்ஸ் பற்றி எல்லோருமே தப்புக் கணக்கு போட்டது தெரிய வருகிறது. சிகரெட் உதடு கறுக்கும், பீர் பளபளப்பைக் கொடுக்கும், பின் பீர் தொப்பை போடும், பகார்டியில் அந்தத் தொல்லை இல்லை என்பதெல்லாம் அவராக சொல்லும் வார்த்தைகள் இல்லை. Beautifully and subtly delivered story.
விவசாயத்தை நம்பிய வாழ்க்கையில் பல எதிர்பாராத் திருப்பங்கள் நேர்கின்றன. வெங்காயம் பயிரிடாத போது அதன் விலை உயர்வது, பயிரிட்டால் வரத்துக்கூடுவது, பனியன் கம்பெனியில் வேலை முடிவில்லாத ஒரு பயணமாகிப் போவது, தறிகளை வைத்திருப்போர் ஆளின்றி தத்தளிப்பது என்று பல போராட்டங்களுக்கு நடுவே சிறிய நகரத்தில் பல கோடி வியாபாரம் நடக்கிறது.
பல கதைகளில் ஆண்கள் மணம்முடிக்க பெண் இல்லாது திண்டாடுகிறார்கள். அந்த ஊருக்குள், சொந்த ஜாதியில் பார்ப்பதும், ஆண்-பெண் விகிதம் Scan பார்த்து அழிப்பதால் குறைந்து போயிருப்பதும் காரணமாக இருந்த போதிலும், மற்ற விஷயங்கள் அனைத்தும் திருப்பூரின் நடப்பு வாழ்க்கையைச் சுற்றியே வருவதால் இதுவும் உண்மையாகத் தான் இருக்க வேண்டும். ஒரு கதையில் நேப்பாளி நம்பெண்ணை மணமுடித்து விட்டான் என்று ஒருவன் பொறுமுவதும் வருகிறது. எனில் இது உண்மையில் அச்சப்பட வேண்டிய விஷயம்.
பதிமூன்று சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
வெங்குட்டுவன் பத்தாவது வரையே படித்திருந்தாலும் வாழ்க்கை பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அது எழுத்திலும் வெளிப்படுகிறது. இவரது கதைகளில் வருபவர்கள் பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா என்று படிப்பதாக அடிக்கடி வருகின்றது. இவர் எழுத்தில் எப்படி நுட்பம் கூடி வந்திருக்கிறது தெரியவில்லை. தனக்குத் தெரிந்த வாழ்க்கையை மட்டுமே எழுதுவதனால் இருக்கக்கூடும். முதல் தொகுப்பு என்பதற்கு எந்த வித சலுகைகளும் விமர்சனத்தில் தேவைப்படாத தொகுப்பு. வெங்குட்டுவன்கள் ஏராளமாக உருவாக வேண்டும். அதற்கு ஏராளமான வாசகர்கள் இவர்களைப் படிக்க வேண்டும்.
பிரதிக்கு:
மணல்வீடு 98946 05371
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ.200