விவேக் ஷான்பாக்:
பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் வசிக்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும், நான்கு நாவல்களையும், இரண்டு நாடகங்களையும் இதுவரை வெளியிட்டிருக்கிறார். காச்சர் கோச்சர் இவரது முக்கியமாகப் பேசப்பட்ட நாவல்.
கே. நல்லதம்பி:
மைசூரில் படித்து அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். தமிழில் இருந்து கன்னடத்திற்கும், கன்னடத்தில் இருந்து தமிழுக்கும் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பவர். மொழிபெயர்ப்புக்கான 2022 சாகித்ய அகாதமி விருதை வென்றவர்.
பார்த்துப் பார்த்து காதலித்த உருவம் தேவன்/தேவதை வடிவத்தில் இருந்து, சகிக்க முடியாத உருவத்தை அடைவதற்கு, இடையில் சிலவருடங்கள் மணவாழ்வு. Discovery of each other என்பதில் ஆரம்பித்துத் திருமணவாழ்க்கையில் ஏற்படும் Monotonyஐ அற்புதமாகப் பதிவு செய்யும் நாவல் இது.
அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த பூவை பத்திரமாக எடுத்துச் சென்று அவ்வப்போது பார்த்துக்கொண்ட காலத்தை, அவளுடனான பத்திருபது வருட மணவாழ்க்கையின் பின் முட்டாள்தனமாக உணராத ஆண் யாராவது இருக்க முடியுமா?
காதலோ, கவர்ச்சியோ காலத்தில் தேய்வது ஒரு இழை என்றால், மத்திய வர்க்கத்தின், ஆசை அபிலாஷைகள், போலித்தனங்கள், பயங்கள் மற்றொரு இழை. விஜி-வெங்கட் உறவு a marriage of convenience. இருவரில் ஒருவரையேனும் பாதைமாற்றும் சக்திகள் எதுவும் குறுக்கிடவில்லை, ஆதலால் அந்த உறவு தொடர்கிறது. விஜியின் முழுபிம்பம் வெங்கட்டிற்குத் தெரிந்த அளவே நமக்கும் தெரிவதால், அவள் குறித்து அதிகம் சொல்வதற்கில்லை. “தெரிஞ்சது எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பிச்சா வாழமுடியாது” என்று விஜி ஒரு சந்தர்ப்பத்தில் சொல்வதை நாமும் தீர யோசனை செய்ய வேண்டியிருக்கிறது.
பாதுகாப்பான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த தம்பதியரின் ஒரே மகள் ரேகா ஏன் மாறுபட்டு இருக்கிறாள்! ரமணனின் மரபணுத்தொடர்ச்சி என்று சொல்வதை விட இன்றைய இளைஞர்களுக்கு போராளி முகத்தை அணிந்து கொள்வதில் அளப்பரிய ஆனந்தமும், ஒரு சாதனையைச் சாதிக்கும் திருப்தியும் கிடைக்கிறது. பின்விளைவுகள் மிக மோசமாக இல்லாதவரை கண்ணிவெடியில் கால்வைத்தது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. சுரேஷ்கள் எப்போதும் தப்பித்துக் கொள்வார்கள், ரேகாக்கள் விஷயத்தில் நாம் அவ்வாறு சொல்வதற்கில்லை.
ஒரு மிகச்சாதாரணமான குடும்ப வாழ்க்கையில், ஒரு வித்தியாசமான சம்பவம் நேர்கிறது. மகளைப் பற்றிப் பெற்றோர் புதிதாகத் தெரிந்து கொள்கிறார்கள். தகப்பனுக்குத் தெரியாத ரகசியத்தைத் தாயும், மகளும் பகிர்ந்து கொள்கிறார்கள். இன்னொரு வகையில் பார்த்தால், அந்த சம்பவமே வெங்கட் தன்னைச் சுயபரிசோதனையில் ஆழ்த்திக் கொள்வதற்கான தூண்டுதல் தான். வெங்கட் இரண்டு நாட்கள் தூங்கி எழுந்தபின் எல்லாவற்றையும் மறக்கப் போகிறான். அதிகபட்சம் இன்னொரு பொன்மொழியை அவன் ஏதாவது புத்தகத்தில் எழுதக்கூடும்.
இது நம்முடைய கதை. இந்தக் கதையில் ஏதாவது ஒரு பக்கத்தில் நம்முகம் தோன்றி மறையக்கூடும். சாதாரண வாழ்வு வாழும், சாதாரண மனிதர்களின், சாதாரணத் தருணங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் அசாதாரணமே இந்த நாவல். இந்தக் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல நாமெல்லோரும் escape artists. நாவலின் எளிமையான மொழியில் ஏமாறவேண்டாம், பல நுட்பங்களை உள்ளடக்கிய நூலிது. ஷான்பாக்கிடம் இருந்து மற்றுமொரு நல்ல படைப்பு. நிறைய இடங்களில் ஆதவனைப் படிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திய நல்லதம்பியின் மொழிபெயர்ப்பு. MSV, கண்ணதாசன், சுசிலா கூட்டணியின் பாடலைத் தனிமையில் கேட்பது போன்ற உணர்வு.
பிரதிக்கு :
காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 240.