ஆசிரியர் குறிப்பு:
கும்பகோணம், அம்மாசத்திரத்தில் பிறந்து வளர்ந்தவர். இளங்கலை வணிகம் பயின்றவர். தீவிர வாசகர். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
தொடர்ந்து கவிஞர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், கவிதைகளை வாசிப்பவர்கள், கவிதைத் தொகுப்பு கொண்டு வர விரும்புதல் இயல்பு. ஆனால் அதற்காகக் கிட்டத்தட்ட ஐம்பது வயது ஆகும் வரைக் காத்திருப்பது இயல்பான விஷயமில்லை. காத்திருப்பு, அனுபவம் இரண்டும் மொழியை பண்படுத்தி, கூர்மையாக ஆக்கியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். தொகுப்பின் மொத்தக் கவிதைகளில் ஒரு பக்கத்தைத் தாண்டிய கவிதை ஒன்று கூட இல்லை.
இருள்/இரவு ஏராளமான கவிதைகளில் வருகிறது. இரவில் வாசிப்பவர் வேறு எதையும் கவனிப்பதில்லை. இரவில் துணையோடு இருப்பவருக்கு சுற்றுப்புறம் தெரிவதில்லை. இரவில் வேலைசெய்வோருக்கு அதுவே பகல். ஆனால் இருளில் தனித்திருப்போர், பிரிவை எண்ணி வெம்பியிருப்போருக்கு இரவு மிக நீளமானது, இருள் ஒரு அரக்கன்.
” பிரிவின் அகாலத்தில்
விழித்திருக்கிறேன்
பெண்டுலத்தின் துளியளவு சப்தமும்
ஒவ்வொரு நொடியாக வீழ்கிறது”
“சூன்யமற்ற இரவில்
நாய்களின் பேரமைதி
அச்சமூட்டுகிறது”
“யாவருக்குமான இரவில்
நொடிநொடியாக
நீள்கிறது இருள்”
“ஒளியைப்போல
இருளும்
அகலாத ஸ்தூலம்”
தொடுதலில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது ஒருகாலம். Corporate Hug இல்லாத காலம். எதிராளிகளின் உடல்மொழி இணக்கமாக இல்லாததால் அதை விலக்கிக் கொண்டேன்.
சின்னத்தொடலில் இருக்கும் அன்பைத் தெரியாது, காமத்தைக் கண்களில் சுமக்கும் உலகு. எளிமையாக இருப்பது போல் தோன்றும் இந்தக்கவிதையில் எவ்வளவு ஆழமான விஷயம் எளிதாகக் கடக்கப்படுகிறது:
” எளிய அன்பினை
எதிர்கொள்ள முடியாத தருணத்தில்
ஒரு மிடறு
தண்ணீர் தேவைப்படுகிறது
எளிய துரோகத்தை
ஏற்றுக்கொள்ள முடியாத
உடலுக்கு ஒரு பிராந்தி பாட்டில்
தேவைப்படுகிறது
அன்பிற்கும் துரோகத்திற்கும்
உடல் தான் எளிய வழியாக
எப்போதுமிருக்கிறது”
இவரது உவமைகள் பல நேரங்களில் கண்முன் காட்சிப்பிம்பத்தைக் கொண்டு வருகின்றன
” அஞ்சல் தலையை. தலைகீழாக ஒட்டிய சிறுமியின் பதட்டம்”
தனிமை, தற்கொலை எண்ணம், பிரிவாற்றாமை, நிராகரிப்பின் வலி என்று, வயிறுமுட்ட சாப்பிட்ட பின்னும் முன்னிருக்கும் நிறைக்கப்பட்ட தட்டுபோல, வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க வேண்டிய கட்டாயத்தின் சலிப்பு தெரியும் கவிதைகள்.
எளிமையான படிமங்கள் உணர்வைத் தூண்ட உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன. எனது கற்பனையா என்பது தெரியவில்லை, கவிதை வரிகளைத் தாண்டி ஒரு விசும்பல் ஒலியை என்னால் கேட்க முடிகிறது. வாசிப்பும், அனுபவமும் மொழிக்கு நெகிழ்வை அளித்துக் கச்சிதமான பின்னலாடையின் நேர்த்தியுடன் கவிதைகள் வெளிவரும் போலும்.
பிரதிக்கு:
பறவை பதிப்பகம் 99520 89604
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ.140.