ஆசிரியர் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், வெம்பூர் கிராமத்தில் பிறந்தவர். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், மொழிபெயர்ப்பாளர். ஏழு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவரது எட்டாவது கவிதைத் தொகுப்பு இது.
சமயவேல் சிறந்த வாசகரும் கூட. இவர் மொழிபெயர்ப்பில் நாவலும், கவிதைத் தொகுப்புகளும் வந்திருக்கின்றன. சுயசரிதைக் கூறுகள் கொண்ட நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். என்றாலும், ஒருவரை முதன்முதல் பார்த்த போது நாம் பேசிய மொழியிலேயே தொடர்வது போல, இவரை கவிஞர் என்றே என்னால் உடன் அடையாளம் காண முடிகிறது.
முதல் கவிதையின் முதல் வரி கண்மாய்க்கரையில் ஒருவர் அமர்ந்திருக்கும் காட்சியை மனக்கண்ணில் கொண்டு வருகின்றது. இரண்டு காட்சிகள். அத்தோடு கவிதை முடிவதில்லை. கடைசி வரிகள் உட்கார்ந்திருக்கும் நம்மை பிடிமானம் தேடச் செய்கின்றன. கண்ணால் காண்பது பொய்.
” இன்மையின் சிற்றலை
என் கரம்பைக்கரையைத்
தொட்டுத் தொட்டு மகிழ்கிறது”
சிந்துவெளி நாகரீகத்தில் வரும் குழப்பங்கள், கண்மாய்க்கரை நாகரீகத்தில் கிடையாது. குளித்து முடிந்தோர் விட்டுச்சென்ற, வெயில் வடியாத பொழுதிலான கண்மாய்க்கரை எப்படி இருக்கும்?
” காலைக்குப் பிறகான வெயில்
சலவையாளர்களுடையது
மதகிலிருந்து நீளும் சரளை மண்கரை
ஊர்துணிகள் ஈரத்துடன்
பல வண்ணங்களில்
படர்வதற்கானவை
சலவைப் பெண்கள்
துணிகளை அடித்துத் துவைக்கையில் எழும்
ஈரொலியில் இருந்து கிளம்பியதே
இசையின் ஆதி தாளங்கள்
கரைப் புளியமரங்களில் இருந்து வரும்
செம்போத்துகளின் கூவலோடு
தீட்டுச்சேலை துவைக்கும்
தேவமகள்களின் சோ சோ சோ
இணைகையில்
வண்ணார்துறையின் அழகு
கண்மாய்க்கரை நாகரீகத்தில் மிளிர்கிறது”.
வாழ்க்கை நம்மை எந்தத் தேர்வையையும் செய்யவிடாது தன்னிச்சையாய் நடந்து கொள்கையில் என்ன செய்யலாம்? சாவை நம் இஷ்டத்திற்குத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையைப் பார்த்து எள்ளல் சிரிப்பு சிரிக்கலாம்.
” அர்த்தமின்மையை மரணத்துடன்
இணைக்கையில்
தீயில் சுட்ட கருவாடு
அற்புத ருசியடைகிறது”
ஆட்டுமந்தை புழுக்கை வாசமும் இடையரின் சத்தமும் கலக்கின்றன. இல்லாத வீட்டுப்பிள்ளைகள் பிடுங்கிய காளான், தீபாவளி கறி இல்லாத குறையைப் போக்குகிறது. நீர்வற்றிய கண்மாய் கால்பந்து மைதானமாகிறது. குருவம்மாள் கதை, வேணி கதை, மடைக்குடும்பர் மனைவி கதை என்று சில கதைகள் இடைவந்து போகின்றன. ஆடு மேய்க்கும் எளிய பெண்ணை வளமை போல் ஆண்ட ஜாதி ஏமாற்றுகிறது. சுடுகாட்டுத்துறையில் இறந்தவர்கள் சிரிக்கிறார்கள்.
நாற்பத்தொன்பது கவிதைகள். புன்னகைக்க, ஏக்கப்பட, விக்கித்திருக்க வைக்கும் கவிதைகள். அவர் ஊர் கண்மாய்க்கரையைப் பார்த்திராத நம்மைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். எத்தனையெத்தனை மனிதர்கள். நாவலாக எழுதவேண்டியதை, புளிப்பானைக்குள் புளியை அமுக்கி வைப்பது போல, கவிதைகளுக்குள் கொண்டு வந்திருக்கிறார். நல்ல நாவல்கள் முடியும் போது வரும் அந்த சோகம், இந்தக் கவிதைத் தொகுப்பை படித்துமுடித்ததும் வருகின்றது.
எல்லாவற்றையும் இழந்த ஒருவர் சொல்கிறார் ” இனி என்ன இந்தக் கம்மாத்தண்ணி மாதிரி இருக்கிறவரை இருப்போம்”. கண்களைத் துடைக்காமல் அடுத்த கவிதைக்குப் போகமுடியவில்லை.
வாழ்க்கை கவிதையாகும் போது தூக்கிச்சுமக்க முடியாது பாரமாகின்றது. சமயவேல் தான் பிறந்த ஊரை இலக்கியமாக்கியிருக்கிறார். எல்லா மண்ணுக்கும் இது போல் மைந்தர்கள் கிடைப்பதில்லை. வெள்ளமென சூழும் கவிதைத் தொகுப்புகளைப் பார்த்து மூச்சுமுட்டிக் களைத்திருப்பவர்களுக்கு மீள்சக்தி அளிக்கவல்ல தொகுப்பு இது. தவற விடாதீர்கள்.
பிரதிக்கு :
தமிழ்வெளி 90 9400 5600
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ.100.