நான் கண்டி வருகிறேன், பார்த்துக்கொள் என்று பொது நண்பர் நர்மியிடம் சொல்லி இருக்கிறார். என்னைத் தொடர்பு கொண்ட நர்மி, இப்போது தான் விடுமுறை முடிந்தது, அலுவல் கொஞ்சம் பிஸி, இல்லை என்றால் உடன் வந்திருப்பேன் என்றதும் எனக்குத் திருநெல்வேலி உபச்சாரம் நினைவுக்கு வந்தது. ஆனால் அப்படியில்லை, நள்ளிரவில் Voice message நாளை விடுப்பு, உடன் வருகிறேன் என்று அனுப்பி விட்டார். பல ஆண்டுகள் பழகிய அன்பை முதல் சந்திப்பில் கொடுக்க நர்மி போல் சிலரால் மட்டுமே முடிகிறது.
கண்டியில் முக்கியமான இடங்கள் என்று சொன்னால் முதலில் அழைத்துப்போவது,
Sri Dalada Maligawa என்ற புத்தர் கோவிலாகத் தான் இருக்கும். புத்தரின் பல் இங்கே இருக்கிறது என்று நம்பிக்கை. சிங்களவர்கள் மிகப் புனிதமாக இந்தக் கோவிலைப் பாதுகாக்கிறார்கள். புத்தர் சிலைக்கு முதுகைக்காட்ட அனுமதிப்பதில்லை. இந்தக் கோயிலைச் சுற்றியே பார்வையிட பல கட்டிடங்கள் ஒரே காம்பவுண்ட்டுக்குள் இருக்கின்றன. ராயல் பேலஸ், விக்கிரம ராஜசிங்க கடைசியாக அரசாண்ட மாளிகை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான சிங்கள ஆட்சி இவருடன் முடிகிறது. முகலாயப் பேரரசர், பகதூர் ஷாவைப் போலவே ஆங்கிலேயர்களால் சிறைவைக்கப்பட்டு உயிர் விடுகிறார். அருகருகே மியூசியங்கள். ராஜாக்கள் உபயோகப்படுத்திய பொருட்கள், புத்தமதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அடங்கியிருக்கும் மியூசியங்கள் என்று பார்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள்.
Dalada மாளிகை மட்டுமல்ல, அநேகமாகப் பல இடங்களில் இந்தியர் என்றால் 6000 இலங்கையர் என்றால் 50,100 என்று நுழைவுக் கட்டணம் இருக்கின்றது. இது போக மியூசியத்திற்குத் தனிக் கட்டணம். சுற்றுலாத்துறை Quick moneyஐ நம்புகிறது போலிருக்கிறது. இந்தியாவிலும் வெளிநாட்டவர் என்றால் அதிகம் வசூலிப்பார்கள், ஆனால் இவ்வளவு வித்தியாசம் இருப்பதில்லை.
மீண்டும் அதே புத்தமதம் சம்பந்தப்பட்ட இடங்கள் கண்டியில் பலவிருக்கின்றன. தாயைத் தண்ணிக்குடம் எடுத்து வரும் வழியில் பார்த்தாயிற்று பெண்ணைப் பார்க்க மெனக்கெட வேண்டாம் என்று விட்டாயிற்று. நேரமின்மை காரணமாக பேராதனை பூங்காவை பார்க்க இயலவில்லை. திரும்புகையில் முயல வேண்டும். அருகிலிருக்கும் கதிர்காமத்தை Replicate செய்த முருகன் கோவில், விநாயகர் கோவிலுக்கு சென்றோம். காளியை, விநாயகரை, விஷ்ணுவை இங்கு சிங்களவர்கள் வணங்குகிறார்கள். இந்துக்கோயிலில் புத்தர் சிலைகள் இருக்கின்றன. விநாயகர் கோவிலில் ராகுகால பூஜை. பெண்களைக் கோவிலில் விட்டுவிட்டுத் தப்பித்து வெளியில் வந்தோம்.
Martin Wickramasingheன் The Way of the Lotus மூன்று, நான்கு கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நூலுக்கு கிண்டில் பிரதியும் எல்லா நாட்டு அமேசானில் தேடியும் கிடைக்கவில்லை. உலக அளவில் பேசப்பட்ட எழுத்தாளரின் நூல் ஏன் இப்போது கிடைப்பதில்லை என்று தெரியவில்லை. இலங்கையில் யாரேனும் அந்த நூலைப் புத்தகக்கடையில் பார்த்திருந்தால், தகவல் அளித்தால் மகிழ்வேன். அவரது Trilogy கிடைத்தது. வாங்கி இருக்கிறேன். முன்பு வாசிக்கும் வேகத்திற்கு வாங்க முடியாத பணவசதி இருந்த காலமும், இப்போது வாங்கும் வேகத்திற்கு வாசிக்க முடியாத சூழலும். வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்கள் இப்படித் தான் நேர்கின்றன.